Published : 18 Aug 2018 11:59 AM
Last Updated : 18 Aug 2018 11:59 AM

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேச்சு: சீமான் மீது வழக்குப் பதிவு

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மே மாதம் பேசியதாக வந்த புகாரின் பேரில் தரமணி போலீஸார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சீமான், விடுதலைப்புலிகள் மீது ஆதரவு எண்ணம் கொண்டவர். தான் பிரபாகரனை நேரில் சந்தித்ததாகவும், தனக்கு துப்பாக்கிச் சுட அவர் பயிற்சி அளித்ததாகவும் சீமான் பல தகவல்களை மேடையில் பேசியுள்ளார்.

இந்நிலையில் கடந்த மே மாதம் 18-ம் தேதி சென்னை, கொட்டிவாக்கம் ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இறந்த தினம் குறித்த நினைவேந்தல் நிகழ்வில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியது தொடர்பாக நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று மதியம் 1 மணி அளவில்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தரமணி காவல் நிலையத்தில் (Cr.No. 1274/2018) பிரிவு 153 ( வன்முறையை தூண்டும் விதத்தில் பேசுவது), 153(A)( சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது),505(1)(a)(b) ( பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வண்ணம் பேசுவது), 504 (பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் பேசுவது), 505(1)(a)(c) (தவறான வதந்திகளை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது) and 505 (ii) (சமூக வலைதளங்கள் மூலம் தவறான தகவல்களை பரப்புவது)  ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x