Published : 18 Aug 2018 08:59 AM
Last Updated : 18 Aug 2018 08:59 AM

இல்வாழ்க்கைப் பயணம் தொடங்க மாயாற்றில் சாகசப் பயணம் செய்த புதுமணப் பெண்

மாயாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்குக்கு இடையே, திருமணத்துக்காக புதுமணப் பெண் தனது குடும்பத்தினருடன் பரிசல் மூலம் ஆற்றைக் கடந்து சென்றார்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் தெங்குமரஹடா கிராமம் உள்ளது. நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள இக்கிராமத்தையொட்டி ஓடும் மாயாற்றைக் கடந்துதான் தெங்குமரஹடாவுக்கு செல்ல முடியும். பவானிசாகரில் இருந்து சுஜில்குட்டை, கெஜலெட்டி வழியாக அடர்ந்த வனப்பகுதி வழியாக இயக்கப்படும் பேருந்துகள், ஆற்றின் கரையில் நிறுத்தப்படும். அங்கிருந்து பரிசல் மூலம் கிராம மக்கள் தெங்குமரஹடாவை சென்றடைவது வழக்கம்.

ஆற்றில் நீரின் வேகம் குறைவாக இருக்கும்போது வேன், ஜீப் போன்ற வாகனங்கள் நீரில் இறங்கி மறுகரையைச் சென்றடைவது வழக்கம். அதேபோல், கல்லாம்பாளையம் என்ற இடத்தில் நீரோட்டம் குறைவாக இருக்கும் என்பதால் இவ்வழியிலும் ஜீப் போன்ற வாகனங்கள் ஆற்றை கடந்து தெங்குமரஹடா கிராமத்தை அடைய முடியும்.

கடந்த 10 நாட்களுக்கு மேலாகவே மாயாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தெங்குமரஹடா பகுதி மக்கள் அக்கரையை அடைய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆற்றில் நீர் குறையும்போது மட்டுமே பரிசல் மூலம் மாயாற்றைக் கடந்து வருகின்றனர்.

இந்நிலையில், தெங்குமரஹடா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அவினாசி - செல்வி தம்பதியரின் மகள் ராசாத்திக்கும் (24), கோவை மாவட்டம் ஆலாங்கொம்பு கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகையில் வரும் 20-ம் தேதியன்று திருமணம் நடக்க வுள்ளது.

மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், புதுமணப்பெண் ராசாத்தி மற்றும் குடும்பத்தினர் எப்படி திருமணத்துக்கு செல்வது என புரியாமல் கவலையில் ஆழ்ந்து இருந்தனர்.

திருமணத்துக்கான சடங்கு களை மேற்கொள்ள முன் கூட்டியே சிறுமுகை செல்ல வேண்டியிருந்ததால், கிராம மக்கள் மற்றும் வனத் துறையினர் ஒன்றிணைந்து ராசாத்தியின் குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் 15 பேரை பாதுகாப்பாக பரிசலில் ஏற்றி ஆற்றின் மறுகரைக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர் அவர்கள் பேருந்தில் ஏறி பவானிசாகர் வந்தடைந்தனர்.

ஆபத்தான பயணம் மேற்கொண்டு கரை சேர்ந்த புதுமணப் பெண் ராசாத்தி கூறும்போது, மாயாற்றின் குறுக்கே பாலம் மற்றும் சாலை வசதி செய்து தரவேண்டும். எனக்கு ஏற்பட்ட நிலை, மற்ற யாருக்கும் ஏற்படக்கூடாது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x