Published : 18 Aug 2018 08:57 AM
Last Updated : 18 Aug 2018 08:57 AM

திருச்சியில் மு.க. ஸ்டாலினை வரவேற்பதற்காக சாலைகளில் துளையிட்டு நடப்பட்ட கட்சி கொடிக் கம்பங்கள்: சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

திருச்சியில் திமுக நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று வந்த அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகளில் துளையிட்டு கொடிக் கம்பங்களை நட்டதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருச்சியில் திமுக சார்பில், ‘கலைஞரின் புகழுக்கு வணக்கம்- கருத்துரிமைக் காத்தவர் கலைஞர்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் பங்கேற் பதற்காக மு.க.ஸ்டாலின் நேற்று மாலை திருச்சி வந்தார். அவர் தங்கியிருந்த தனியார் தங்கும் விடுதியிலிருந்து கருத்தரங்கம் நடைபெறும் இடத்துக்கு அவர் வரும் வழியில் ஏறத்தாழ ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு, துளையிடும் கருவி உதவியுடன் சாலைகளின் ஓரத்தில் துளைகளை இட்டு, அதில் கொடிக் கம்பங்களை திமுகவினர் நட்டு கட்சிக் கொடிகளைக் கட்டினர்.

தில்லை நகர், சாஸ்திரி சாலை, அண்ணா நகர் உள் ளிட்ட முக்கிய சாலைகளில் நடப்பட்டுள்ள இந்த கொடிக் கம்பங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும், காற்றில் சில கம்பங்கள் சாய்ந்து, சாலையில் செல்வோருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் கூறுகின்றனர் வாகன ஓட்டிகள்.

பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் இதுபோன்று அவ்வப்போது சாலைகளை துளையிட்டு கொடிக் கம்பங்கள் நடுவதுடன், வரவேற்பு பதாகைகள் அமைக்கப்படுவதால் சாலைகள் வீணாவதோடு, இதற்காகத் தோண் டப்பட்ட சிறு சிறு பள்ளங்களில் தண்ணீர் தேங்கி, பின்னர் அவை பெரிதாகி சாலை சேதமடையவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

மக்கள் நலனுக்காகவே தாங்கள் பாடுபடுவதாகக் கூறும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இதுபோன்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதையும், சாலைகளைச் சேதப்படுத்துவதையும் தவிர்க்க முன்வர வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இதுகுறித்து, சேவை சங்கங் களின் கூட்டமைப்புத் தலைவர் சேகரன் கூறியது:

இதுபோன்ற செயல்கள் மக்களுக்கு பெரும் அசெளக ரியத்தை ஏற்படுத்துகின்றன. இந்த செயல்களைச் செய்வோர், தாங்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என எண்ணிக் கொள்வதுதான் வேதனையாக இருக்கிறது.

மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்தச் செயலும் அந்த கட்சிகளுக்கு, அமைப்புகளுக்கு மக்களிடம் உள்ள நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து செயல்பட அவர்கள் முன்வர வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x