Published : 16 Aug 2018 11:58 AM
Last Updated : 16 Aug 2018 11:58 AM

‘அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’- வளசரவாக்கத்தில் கால்வாயில் வீசப்பட்ட பச்சிளங்குழந்தை: காப்பாற்றிய பெண்மணிக்கு குவியும் பாராட்டு

 வளசரவாக்கத்தில் கால்வாயில் வீசப்பட்ட பச்சிளங்குழந்தையைக் காப்பாற்றிய பெண்ணுக்கு  பாராட்டு குவிந்தது. சுதந்திர தினத்தில் காப்பாற்றப்பட்டதால் அக்குழந்தைக்கு சுதந்திரம் எனப் பெயரிடப்பட்டது.

அந்த ஒரு ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையைக் கொடுத்தது என்றால் அது நேற்று காப்பாற்றப்பட்ட குழந்தையின் வாழ்க்கையில் 100 சதவீதம் உண்மை. மிக மெல்லிய குரலால் அழுதபடி இரண்டு மணி நேரம் கிடந்த பச்சிளங்குழந்தை தனது வாழ்க்கையை போராடும் குணத்தால் தானே மீட்டுள்ளது.

சென்னை வளசரவாக்கத்தில் எஸ்.வி.எஸ். நகர் உள்ளது, இங்கு 6-வது வீதீயில் நேற்று அதிகாலையில் மழைநீர் வடிகாலுக்குள் இருந்து ஒரு ஈனஸ்வரக் குரலில் முனகல் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. மழை பெய்து சாலையெங்கும் நீர் ஓடி, சற்றே ஓய்ந்திருந்த நிலையில்,  அந்த மழைநீர் வடிகாலில் நீர் லேசாக ஓடியபடி இருந்தது. அப்போது பால் வியாபாரம் செய்யும் சுப்பையா அவ்வழியே வந்துள்ளார்.

குடியிருப்பு அருகே மழைநீர் வடிகாலைச் சுற்றி பூனைகள் அதிக அளவில் நின்றிருந்தன. ஆர்வ மிகுதியால் என்ன நடக்கிறது என்று அங்கு சென்று பார்த்த சுப்பையா, மழைநீர் வடிகாலுக்குள் குழந்தை ஒன்றின் லேசான முனகலுடன் கூடிய அழுகுரல் கேட்டு அதிர்ச்சி அடைந்தார். பூனைகளை விரட்டிவிட்டு சற்று அருகில் சென்று பார்த்தபோது குழந்தை ஒன்று காலவாய்க்குள் இருப்பதைப் பார்த்தவர் உடனடியாக செய்வதறியாமல் குரல் கொடுத்துள்ளார்.

குரலைக் கேட்ட அக்கம் பக்கம் வீட்டிலுள்ள பெண்கள் வெளியே வந்தனர். அனைவரும் குழந்தையின் குரலைக் கேட்டு வேடிக்கை பார்த்தார்களே தவிர யாருக்கும் காப்பாற்றும் எண்ணம் ஏற்படவில்லை. சிலர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது அங்கு வந்த கீதா என்பவர் குழந்தையின் அழுகுரல் கேட்டவுடன் என்ன எல்லோரும் வேடிக்கை பார்க்கிறீர்கள் என்று கேட்டபடி தரையில் படுத்து கால்வாய்க்குள் கையை விட்டுள்ளார்.

உள்ளே கால்வாய்க்குள் விழும் நிலையில் குழந்தையின் கால் மட்டும் தட்டுப்பட்டது. உடனடியாக குழந்தையின் கால்களைப் பிடித்து மெல்ல வெளியே இழுத்தார். அது பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை, தவறான வழியில் குழந்தை பெற்ற யாரோ குழந்தையைக் கொல்லும் நோக்குடன் அதை மழைநீர் கால்வாய்க்குள் வீசிவிட்டுச் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

தொப்புள் கொடியுடன் இருந்த குழந்தையை மீட்ட கீதா உடனடியாக வெந்நீர் வைத்து குழந்தையைக் குளிப்பாட்டியுள்ளார். பின்னர் அருகிலிருந்த தாய்மார்களிடம் குழந்தைக்குத் தாய்ப்பால் அளிக்கக் கொடுத்துள்ளார்.

அதற்குள் போலீஸார் வந்துவிடவே போலீஸார் துணையுடன் குழந்தையை சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். குழந்தைக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

குழந்தையை மீட்ட கீதா சுதந்திர தினத்தில் குழந்தை மீட்கப்பட்டதால் அதற்கு சுதந்திரம் என்று பெயரிட்டு இனி சுதந்திரமாக நீ இருக்கலாம் என்று வாழ்த்தினார்.

குழந்தையை மீட்ட அனுபவம் குறித்து கீதா கூறும்போது “அங்குள்ள அனைவரும் வேடிக்கை பார்த்தனர். குழந்தை என்றவுடன் என்னால் தாங்க முடியவில்லை. உடனடியாகத் தரையில் படுத்து கால்வாயின் குறுகிய பகுதிக்குள் கையை விட்டேன், குழந்தையின் கால் மட்டுமே சிக்கியது. குழந்தையை மீட்கவேண்டும் என்ற எண்ணத்தில் குழந்தையின் கால்களை இழுத்து வெளியே இழுத்து மீட்டேன்.

அந்தப் பணி மிகவும் கடினமாக இருந்தது. குழந்தையைப் பார்த்தவுடன் அதிர்ந்து போய்விட்டேன். அழகான நிறத்துடன் பிறந்து இரண்டு மணி நேரமே ஆன ஆண் குழந்தை அது. தொப்புள் கொடி சுற்றியபடி இருந்தது. உடனடியாகச் சுடுநீரால் குழந்தையைக் கழுவி தாய்ப்பாலுக்கும் ஏற்பாடு செய்து குழந்தைக்குக் கொடுத்தேன். எப்படிதான் இப்படிக் குழந்தையைக் கால்வாயில் வீசிக் கொல்ல மனம் துணிகிறதோ” என்று வருத்தமுடன் தெரிவித்தார் கீதா.

மீட்கப்பட்ட குழந்தையை நேற்றிரவு நேரில் சென்று பார்த்த அமைச்சர் விஜயபாஸ்கர், ''குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. தாய்ப்பால் வங்கியிலிருந்து இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது'' என்று தெரிவித்தார்.

குழந்தையை மீட்ட கீதாவை அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டினார். கீதாவுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

குழந்தையைக் கால்வாயில் வீசிவிட்டுச் சென்ற பெற்றோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x