Published : 15 Aug 2018 05:30 PM
Last Updated : 15 Aug 2018 05:30 PM

வால்பாறையில் சிறுத்தையுடன் ஒற்றை ஆளாய் சண்டையிட்டு மகளை மீட்ட பெண்ணுக்கு ‘கல்பனா சாவ்லா’ விருது

 

கோவை மாவட்டம், வால்பாறையில் மகளை இழுத்துச் சென்ற சிறுத்தையை விறகுக் கட்டையால் அடித்துவிரட்டி மகளைக் காப்பாற்றிய பெண்ணுக்கு இன்று வீரதீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கி தமிழக அரசு கவுரவித்தது.

வால்பாறையைச் சேர்ந்தவர் முத்து மாரி. அவரின் 11 வயது மகள் சத்யா. இருவரும் தங்களின் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் காட்டுப் பகுதியில் கடந்த மே மாதம் 25-ம் தேதி விறகு சேகரிக்கச் சென்றனர். வால்பாறை மலைப்பகுதி என்பதால், அவ்வப்போது சிறுத்தை நடமாட்டம் இருக்கும், பலநேரங்களில் ஊருக்குள் புகுந்துவிடும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டுவைத்து பிடித்து காட்டுப் பகுதியில் விடுவார்கள்.

இந்நிலையில், விறகு சேகரிக்க முத்துலட்சுமியும், சத்யாவும் சென்றபோது, காட்டுப் பகுதியில் மறைந்திருந்த சிறுத்தை திடீரென இருவர் மீதும் பாய்ந்து தாக்கியது. அதில் சத்யாவின் கழுத்தை கவ்விப் பிடித்த சிறுத்தை அவரைக் காட்டுப் பகுதிக்குள் இழுத்துச் சென்றது. இதைப் பார்த்த சத்யாவின் தாய் முத்துலட்சுமி தன்னிடம் இருந்த விறகுக் கட்டையால், சிறுத்தையை அடித்து, அதனுடன் சண்டையிட்டு மகளை மீட்கப் போராடினார்.

ஒரு கட்டத்தில் முத்துலட்சுமியின் அடிதாங்க முடியாமல், சத்யாவை விட்டுவிட்டு காட்டுப் பகுதிக்குள் சிறுத்தை ஓடியது. சிறுத்தையிடம் காயம் பட்ட சத்யாவை , முத்துலட்சுமி தூக்கிக்கொண்டு ஊருக்குள் வந்தார்.

இருவரையும் கண்ட மக்கள், உடனடியாக வால்பாறை மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் முத்துலட்சுமிக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டு இருந்தது, ஆனால், சத்யாவுக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்ததால், அவரைப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு சத்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் உயிர்பிழைத்தார்.

இந்த நிலையில் ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவில் வீர, தீர செயல் புரிந்தவர்களுக்கு விருது வழங்கிக் கவுரவிக்கப்படும். அதன்படி சிறுத்தைப்புலியை விறகு கட்டையால் அடித்து விரட்டிய முத்துமாரிக்கு இந்த ஆண்டு கல்பனா சாவ்லா விருதுக்குத் தேர்வு பெற்றார்.

சென்னையில் இன்று நடந்த 72-வது சுதந்திரதின விழா நிகழ்ச்சியின் போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கல்பனா சாவ்லா விருதை முத்துமாரிக்கு வழங்கிக் கவுரவித்தார்.

இந்த விருது குறித்து முத்துமாரி கூறுகையில், எனது உயிர் போனாலும், எனது மகளின் உயிரைக் காப்பாற்றும் நோக்கில்தான் நான் சிறுத்தைப்புலியை கட்டையால் அடித்து விரட்டினேன். தமிழக அரசிடம் இருந்து கல்பனா சாவ்லா விருது பெற்றதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். பெண்கள் மனதில் துணிச்சல், தைரியம் இருந்தால், எந்த செயலையும் சாதிக்கலாம் எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x