Published : 14 Aug 2018 05:10 PM
Last Updated : 14 Aug 2018 05:10 PM

தவறான தேர்வு உயிரைப் பறித்தது: காதலனின் நடத்தை சரியில்லாததால் ஒதுங்கிய ஆசிரியை குத்திக்கொலை

காதலனின் நடத்தை சரியில்லாத காரணத்தால் அவரது தொடர்பைத் துண்டித்து ஒதுங்கிய காதலியை, நண்பருடன் சேர்ந்து காதலன் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரம்பலூரில் நடந்துள்ளது.

பெரம்பலூர் அல்லிநகரம் நான்குரோடு பகுதியில் வசித்தவர் கம்ருன் நிஷா (22). இவர் அருகில் உள்ள இலந்தக்குழி கிராமத்தின் அரசு ஆரம்பப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். பள்ளிக்குச் சென்று வரும் வழியில் ஆனந்த் என்பவர் பழக்கமானார். கடந்த 2 ஆண்டுகளாக நட்பு வளர்ந்து இருவரும் காதலித்து வந்தனர்.

ஆரம்பத்தில் தன்னை யோக்கியராக காட்டிக்கொண்ட ஆனந்த் போகப்போக நடத்தை சரியில்லாமல் தன் சுயரூபத்தைக் காட்டத் தொடங்கினார். இதனால் கம்ருன் நிஷா அவருக்கு புத்தி சொல்லி திருத்தப்பார்த்தார். ஆனால் ஆனந்த் திருந்துவதாக இல்லை.

இதனால் கம்ருன் நிஷா அவரை விட்டு ஒதுங்க ஆரம்பித்தார். காதலன் ஆனந்துடன் பேசுவதைத் தவிர்த்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த் முதலில் கெஞ்சியும் பின்னர் பேசியும் பார்த்தார்.  எதற்கும் கம்ருன் நிஷா ஒத்துவராததால் ஆத்திரத்தில் மிரட்ட ஆரம்பித்துள்ளார்.

பள்ளிக்குச் செல்லும் வழியில் மறித்து மிரட்ட, ஒரு கட்டத்தில் குடும்பத்தாரிடம் கம்ருன் நிஷா நடந்ததைக் கூறி காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். புகாரைப் பதிவு செய்த போலீஸார் ஆனந்தை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

தன்னை போலீஸாரிடம் மாட்டிவிட்ட கம்ருன் நிஷா மீது ஆனந்த் கடுமையான கோபத்தில் இருந்தார். காதலி என்ற எண்ணத்தை விட அவரைப் பழிவாங்க வேண்டும் என்ற வெறி ஆனந்துக்குத் தோன்றியது.

இதற்கான சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்தார். இன்று காலை வழக்கம்போல் கம்ருன் நிஷா தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்றார். அப்போது அவரை தனது நண்பருடன் ஆனந்த வழிமறித்துள்ளார். ''உன் தொடர்பே வேண்டாம் என்றுதானே ஒதுங்கிப்போகிறேன் என்னை ஏன் தொல்லை செய்கிறாய்'' என்று கம்ருன் நிஷா கேட்டுள்ளார்.

''எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக்கூடாது'' என்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கம்ருன் நிஷாவைக் குத்தியுள்ளார். இதில் கழுத்தில் குத்துப்பட்ட நிலையில் அலறியபடி ரத்த வெள்ளத்தில் கம்ருன் நிஷா கீழே விழ, அக்கம் பக்கமிருந்த பொதுமக்கள் தப்பி ஓட முயன்ற ஆனந்தைப் பிடித்தனர்.

காயத்துடன் உயிருக்குப் போராடிய கம்ருன் நிஷாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆனந்துக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் போலீஸில் ஒப்படைத்தனர். பொதுமக்கள் நிறைந்த இடத்தில் இளம்பெண் கத்தியால் குத்தப்பட்டது அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x