Last Updated : 10 Aug, 2018 04:49 PM

 

Published : 10 Aug 2018 04:49 PM
Last Updated : 10 Aug 2018 04:49 PM

கருணாநிதி அஞ்சலி நிகழ்வு; ஒரு பாதுகாப்பு அதிகாரி கூட இல்லாமல் தொண்டர்கள்-பொதுமக்கள் மத்தியில் சிக்கிய ராகுல்: பிரதமர் வருகைக்குப் பின் பாதுகாப்பு தளர்ந்ததா?

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி அரங்குக்கு வந்தபோது, தனி பாதுகாப்பு அதிகாரிகள் இன்றி, தொண்டர்களின் கூட்டத்தில் சிக்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ராகுல் காந்திக்கு தமிழக போலீஸார் யாரும் பாதுகாப்பு வழங்கவில்லை என்று ஏற்கெனவே எழுந்துள்ள குற்றச்சாட்டை இந்த வீடியோ நிரூபிப்பது போன்று உள்ளது.

வயது மூப்பின் காரணமாக, கல்லீரல் பிரச்சினை, மூச்சு சம்பந்தப்பட்ட கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி, கடந்த 27 ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 11 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த கருணாநிதி, கடந்த 7 ஆம் தேதி காலமானார். அவருடைய உடல் கடந்த புதன்கிழமை பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது.

அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்களால் அசம்பாவிதங்கள் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அவர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்ததால், போலீஸார் தடியடியும் நடத்தினர். அதையடுத்து, பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க அமைதியாக கலைந்து செல்லுமாறு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தினார். இதையடுத்து, பெரும் மக்கள் திரளுக்கு நடுவே திமுக தலைவர் கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவகம் பின்புறம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்த வந்தபோது, தனி பாதுகாப்பு அதிகாரிகள் இன்றி நெரிசலில் சிக்கி தவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தில் சிக்கி கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சென்ற வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. மிக மிக முக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கப்படும் மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்புப் படையின் பாதுகாப்பில் இருக்கிறார் ராகுல் காந்தி. இந்நிலையில், தமிழக போலீஸார் அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வெகுநேரம் கழித்தே காவல்துறையினர் ராகுல் காந்தி அருகில் வந்து அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவர் ‘தி இந்து’வுக்கு (ஆங்கிலம்) அளித்த பேட்டியில், “ராஜாஜி அரங்கில் ராகுல் காந்திக்கு நிகழ்ந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். ராஜாஜி ஹாலில் முக்கிய பிரமுகர்களை மக்கள் நெருக்கும் சூழல் ஏற்பட்டதையும், அதனால் ஏற்பட்ட குழப்பங்களையும் நாங்கள் அதிகாரிகளிடம் விவரித்தோம். ராகுல் காந்தி பாதுகாப்பு குறித்து அன்றைய தினம் எங்கள் கவனத்துக்கு வந்தவுடனேயே அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு பிரச்சினை சரிசெய்யப்பட்டது” என்றார்.

ராஜாஜி அரங்கில் பாதுகாப்பில் குழப்பம் ஏற்பட்டது எப்படி என்று அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “ஒருகட்டத்தில் கருணாநிதி உடலுக்கு அருகே பொதுமக்கள் செல்வதை ஒரு மணிநேரம் நிறுத்தி வைத்திருந்தோம். பிரதமர் நரேந்திர மோடி வந்து சென்றவுடன், மக்கள் தடுப்புகளை முந்திக்கொண்டு வந்தனர். அதுமட்டுமல்லாமல், முக்கியப் பிரமுகர்களுக்கான வழியிலும் மக்கள் வந்தனர். அதனால், அவர்கள் மீது சிறியளவில் தடியடி நடத்த வேண்டியதாகிவிட்டது. இருப்பினும் நிலைமை ஒருகணத்தில் எங்களின் கட்டுப்பாட்டை மீறிவிட்டது” என்றார்.

ராகுல் காந்தி நெரிசலில் சிக்கியிருந்தபோது ஒரேயொரு காவலர் மட்டுமே அவருக்கு சற்று அருகில் நின்று கொண்டிருந்தார். வெகுநேரம் கழித்தே ஏடிஜிபி சுனில்குமார் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களிடம் சிக்கியிருந்த ராகுல் காந்தியைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். அந்த இடத்தில் கண்காணிப்பு கேமரா கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல் காந்தியின் கான்வாய் வரும்போது ஏற்பட்ட தொடர்பு இடைவெளிதான் இந்தப் பிரச்சினைக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. ராகுல் காந்தியின் சிறப்பு பாதுகாப்புக் குழுவினர் குறிப்பிட்ட நேரத்தில் அவர் வரும் இடம் குறித்து கூறவில்லை எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

“அங்கு திரண்டிருந்த சுமார் 2 லட்சம் பேரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் கட்டுப்படுத்தினர். அதேசமயம், பெருமளவிலான காவல்துறையினர் மெரினாவிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்” என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.

ஒவ்வொரு முக்கியப் பிரமுகரும் பல கார்களில், ஏராளமான ஆதரவாளர்களுடன் ராஜாஜி ஹாலுக்கு வந்ததும் குழப்பத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

ராகுல் காந்தி மட்டும் இப்படி நெரிசலில் சிக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி வருகைக்குப் பின்னர் வந்த பல்வேறு மாநில முதல்வர்களும், முன்னாள் முதல்வர்களும் இதே நிலைமைக்கு ஆளானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x