Last Updated : 10 Aug, 2018 08:09 AM

 

Published : 10 Aug 2018 08:09 AM
Last Updated : 10 Aug 2018 08:09 AM

திமுக தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்; மு.க.அழகிரிக்கு முக்கிய பதவி- செப்டம்பர் முதல் வாரத்தில் பொதுக்குழுவை கூட்ட திட்டம்

செப்டம்பர் முதல் வாரத்தில் நடக்கவுள்ள திமுக பொதுக் குழுவில் கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் கடந்த 2016 டிசம்பர் 1-ம் தேதி முதல் வீட்டிலேயே சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வந்தார். மூச்சு விடுவதை எளிதாக்க டிரக்யாஸ்டமி குழாய் பொருத்தப்பட்டதால் அவரால் பேச முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே, கடந்த 2017 ஜனவரி 4-ம் தேதி நடந்த கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு கட்சியின் அனைத்து முடிவுகளையும் ஸ்டாலினே மேற்கொண்டார்.

சுமார் 19 மாதங்கள் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த கருணாநிதி, கடந்த ஜூலை 27-ம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 11 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி கடந்த 7-ம் தேதி காலமானார். கருணாநிதி மறைவையடுத்து திமுகவுக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திராவிடர் கழகத்தில் இருந்து விலகிய அண்ணா, 1949 செப்டம்பர் 17-ம் தேதி திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) என்ற புதிய அமைப்பை தொடங்கினார். பின்னர் அரசியல் கட்சியாக மாறி 1957 முதல் தேர்தலில் திமுக போட்டியிட்டு வருகிறது. அப்போது திமுகவில் தலைவர் பதவி இல்லை. பொதுச்செயலாளராக அண்ணா தேர்ந்தெடுக்கப்பட்டார். 20 ஆண்டுகள் திமுகவின் தலைமைப் பொறுப்பில் இருந்த அண்ணா 1969-ல் காலமானார். அதன்பிறகு திமுகவில் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. 49 ஆண்டுகள் தலைவராக இருந்து திமுகவை கட்டுக்கோப்புடன் வலிமை மிக்க கட்சியாக நடத்தி வந்த கருணாநிதி 19 ஆண்டுகள் முதல்வராகவும் இருந்துள்ளார். 1969-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி திமுக தலைவராகப் பொறுப்பேற்ற கருணாநிதி, 50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த நிலையில் மறைந்துள்ளார்.

இதையடுத்து, செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின், திமுகவின் அடுத்த தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார். இது தொடர்பாக திமுக முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ‘’மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் கூட்டமும், படத் திறப்பு விழாவும் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் விரைவில் நடக்க உள்ளது. அதன்பிறகு ஆகஸ்ட் இறுதி வாரம் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடத்தப்பட உள்ளது. அதில் அண்ணா, கருணாநிதிக்கு பிறகு திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட இருக்கிறார்’’ என்றார்.

ஸ்டாலினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு மு.க.அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு இருவருக்கும் இடையே எவ்வித சமாதானமும் ஏற்படவில்லை. ஆனால், கருணாநிதி மருத்துவமனையில் இருந்த 11 நாட்களும் அழகிரி, ஸ்டாலின் இருவரும் பலமுறை பேசியுள்ளனர். அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, அழகிரிக்கும் திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x