Published : 09 Aug 2018 05:05 PM
Last Updated : 09 Aug 2018 05:05 PM

காமராஜரை கவுரவப்படுத்தினார் கருணாநிதி; இளைய தலைமுறை புரிந்துக்கொள்ளுங்கள்: பழ.நெடுமாறன்

முகநூல், வலைதளங்களில் காமராஜருக்கு மெரினாவில் அடக்கம் செய்ய கருணாநிதி அனுமதி மறுத்ததாக வரும் செய்திகளை இளைய தலைமுறையினர் நம்பி ஷேர் செய்கின்றனர். உண்மை என்ன என்று அப்போதைய காங்கிரஸ் செயலாளர் பழ நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இன்று இலங்கை பிரச்சினை, தமிழனப்பிரச்சினை முதல் அனைத்திலும் முன்னிற்கும் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் ஒரு காலத்தில் காங்கிரஸ் தலைவர் என்பது இன்றைய இளம் தலைமுறை அறியாத ஒன்று. காமராஜர்பால் பற்றுக்கொண்டு தீவிர காங்கிரஸ்காரராக இருந்தவர் பழ.நெடுமாறன். இந்திரா காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்தார்.

1973 முதல் 1979 வரை காமராஜர் மறைவின்போதும், இந்திரா தமிழகம் வந்தபோது மதுரையில் திமுக கருப்புக்கொடி காட்டி நடந்த கல்லெறி சம்பவத்திலும், கல்லெறியிலிருந்து இந்திரா காந்தியை தலையணையால் மூடி காத்தபோது மண்டை உடைந்து ரத்தம் ஆறாக பெருகிய நிலையிலும் அகலாது நின்றார்.  பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 1979-ல் காங்கிரசிலிருந்து விலகினார்.

கருணாநிதி மறைவின்போது அவருக்கு மெரினாவில் இடம் தர தமிழக அரசு மறுத்தபோது அதற்கு ஆதரவாக முகநூல், வலைதளங்களில் காமராஜருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தவர் கருணாநிதி, அதனால் இது சரிதான் என்று மீம்ஸ்களும், செய்திகளும் பரப்பப்பட்டது.

இதை பலரும் மறுத்தாலும் அப்போதைய காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்த பழ.நெடுமாறனிடம் கேட்டறிந்தால்தான் சரியாக இருக்கும் என ஆங்கில நாளேடு ஒன்று பேட்டி கண்டுள்ளது.

அதில் பழ நெடுமாறன் கூறியதாக அந்த செய்தியில் வந்திருப்பதாவது:

“காமராஜர் மறைந்ததும், அவரது உடலுக்கு தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் இறுதி சடங்குகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், அப்போதைய முதல்வர் கருணாநிதி, காமராஜர் ஒரு சுதந்திர போராட்ட வீரர் என்பதால், காந்தி மண்டபத்தில் வைத்து இறுதி சடங்குகள் செய்யுங்கள், அதுவே பொருத்தமாக இருக்கும் என்று தானே முன்வந்து கூறினார்.

பின்னர் அங்குதான், காமராஜர் உடல் தகனம் செய்யப்பட்டது. மேலும், காந்தி மண்டபத்தில், காமராஜருக்கு நினைவிடம் அமைக்க நிலம் அளித்தவரும் கருணாநிதிதான். மெரினாவில் காமராஜருக்கு இடம் ஒதுக்க காங்கிரஸ் சார்பில் கோரிக்கைவிடுக்கப்படவில்லை.

இப்போதுள்ள தலைமுறையினர், பேஸ்புக், வாட்ஸ்அப்பில் வரும் அறியாத கருத்துக்களை உண்மை என நினைக்கிறார்கள். அதை பரப்புகிறார்கள். உண்மையை கண்டறிய அக்கறை காட்டுவதில்லை.” என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் ஆவல் கணேசனிடம் கேட்டபோது நெடுமாறன் தெரிவித்தது உண்மைதான், கருணாநிதி காமராஜருக்கு உரிய மரியாதை அளித்தார், வலைதளங்களில் வரும் தகவல்கள் தவறானது என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x