Published : 07 Aug 2018 01:13 PM
Last Updated : 07 Aug 2018 01:13 PM

ராஜநாகத்தை துன்புறுத்தி செல்ஃபி: கூடலூர் அருகே 5 பேர் கைது; வனத்துறை கடும் எச்சரிக்கை

கூடலூர் அருகே ராஜநாகத்தை துன்புறுத்தி செல்ஃபி எடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சேரம்பாடி பஜாரை ஒட்டிய கன்னம்பையல் சாலையில் கடந்த 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிலர் மரத்தில் இருந்த ராஜநாகத்தை பிடித்து துன்புறுத்தி செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தனர். இந்த காட்சி வைரலாக பரவிய நிலையில், கூடலூர் வன அலுவலர் திலீப்புக்கு புகார் வந்தது.

விசாரணை நடத்திய சேரம்பாடி வனச்சரகர் தலைமையிலான குழுவினர் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், ராமானுஜம், தினேஷ் குமார், யுகேஸ்வரன், விக்னேஷ் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். தலைமறைவாகி இருக்கும் மேலும் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு வனத்துறையினர் கடுமையாக எச்சரித்துள்ளனர். வனத்துறையினர் கூறும் போது, “வனப்பகுதியில் உயிரினங்ளை துன்புறுத்துவது வனக்குற்றமாகும். அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x