Last Updated : 06 Aug, 2018 09:27 PM

 

Published : 06 Aug 2018 09:27 PM
Last Updated : 06 Aug 2018 09:27 PM

கருணாநிதி மருத்துவச் சவால்களை எதிர்கொண்டு வருவார்: தமிழிசை

கருணாநிதி மருத்துவச் சவால்களை எதிர்கொண்டு வருவார் என்ற மெல்லிய நம்பிக்கை மட்டும் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்திருக்கிறார்.

கடந்த 27-ம் தேதி இரவு திமுக தலைவர் கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் குறைந்ததால் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறப்பு மருத்துவக் குழுவினர் அவருக்குதீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று(ஆகஸ்ட் 6) பிறபகல் கருணாநிதியின் உடல் நிலை மீண்டும் பாதிக்கப்பட்டது.

மாலை 7 மணி அளவில் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதியின் உடல் நிலை குறித்து அடுத்த 24 மணி நேரத் தீவிரக் கண்காணிப்பை அடுத்தே கூற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பரபரப்பாகி இருக்கிறது அரசியல் களம்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்ததரராஜன் கூறுகையில், 'மருத்துவமனை அறிக்கையைப் பார்க்கும் போது மனவருத்தத்தையும், மனக்கலக்கத்தையும் தருகிறது. ஏனென்றால் முக்கிய உறுப்புகளைச் செயல்பட வைப்பதே சவாலாக இருப்பதாகச் சொல்கிறது மருத்துவ அறிக்கை. அந்த அறிக்கையை மிகுந்த கவலையைத் தருகிறது. பல சவால்களைக் கருணாநிதி எதிர்கொண்டவர்.

மருத்துவச் சவால்களை எதிர்கொண்டு வருவார் என்ற மெல்லிய நம்பிக்கை மட்டும் இருக்கிறது. வயது மூப்பு காரணமாக உறுப்புகளைச் செயல்பட வைப்பதே சவாலாக இருக்கிறது என்று சொல்லும் போது கலக்கத்தைத் தெரிகிறது.

தலைவர் மீது அதிக அன்பு கொண்டவர்கள் திமுக தொண்டர்கள். எந்தவொரு அவசர முடிவையும் அவர்கள் எடுக்கக்கூடாது. அவர்களுடைய வேண்டுதல் மட்டுமே அவரை மீட்டெடுத்து வரும். எந்த விதத்திலும் பதட்டப்படக் கூடாது. நம்பிக்கையோடு காத்திருங்கள்'' என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x