Published : 06 Aug 2018 07:38 PM
Last Updated : 06 Aug 2018 07:38 PM

கருணாநிதி உடல்நிலை நலிவு: காவேரி மருத்துவமனையில் குவிந்த தொண்டர்கள்

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்த தகவல் பரவியதால் திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன் குவிந்து வருகின்றனர்.

திமுக தலைவர் கருணாநிதி, சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று, காய்ச்சலுக்காக கோபாலபுரம் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 27-ம் தேதி இரவு அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்ததால் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறப்பு மருத்துவக் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். 29-ம் தேதி மாலை கருணாநிதிக்கு திடீரென இதயத்துடிப்பு குறைந்தது.

உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின், மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் படிப்படியாக உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த 31-ம் தேதி காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘கல்லீரல் செயல்பாடு, ரத்த ஓட்டத்தில் உள்ள பிரச்சினைக்காக கருணாநிதி இன்னும் சில தினங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று கருணாநிதியைப் பார்த்தார். இன்று மதியம் கருணாநிதியின் உடல் நிலை திடீரென இன்று பிற்பகல் மீண்டும் பாதிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொண்டர்களை எட்டியது.

மருத்துவமனைக்கு ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் பிற்பகல் வந்தனர். கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். இந்த தகவல் பரவியதும் தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன் குவிந்தனர்.

இதனால் காவேரி மருத்துவமனையில் கூட்டம் அலைமோதியது. மாலை 7 மணி அளவில் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதியின் உடல் நிலை குறித்து அடுத்த 24 மணி நேர தீவிரக் கண்காணிப்பை அடுத்தே கூற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் தொண்டர்கள் பதற்றத்துடன் பார்ப்பவர்களையெல்லாம் ஒருவருக்கொருவர் விசாரித்தபடி உள்ளனர்.

தகவல் அடுத்தடுத்து பரவி வருவதால் தொண்டர்கள் காவேரி மருத்துவமனையை நோக்கிப் படையெடுத்தவண்ணம் உள்ளனர். தலைவா வா, எழுந்து வா என்ற கோஷமிட்டபடி திமுக கொடியேந்தி காவிரி வாயிலில் தொண்டர்கள் காத்துக்கிடக்கின்றனர். இதனால் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவேரி மருத்துவமனை இருக்கும் ஆழ்வார்பேட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x