Published : 06 Aug 2018 04:57 PM
Last Updated : 06 Aug 2018 04:57 PM

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி சமூக நீதியைப் பாதுகாக்க வேண்டும்: முதல்வரிடம் அன்புமணி மனு

 சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி சமூகநீதியை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பாமக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடர்பான மனுவை பாமக சார்பில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து திங்கள்கிழமை அளித்தார்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, “தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீடு செல்லாது என்று அறிவிக்கக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கை விரைவாக விசாரிக்கப் போவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்திருப்பதால் தமிழகத்தில் சமூக நீதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

சமூக நீதியைப் பொறுத்தவரை, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தமிழ்நாடு தான் வழிகாட்டியாகத் திகழ்ந்து வருகிறது. இந்தியாவிலேயே சமூக நீதிக் கொள்கையை முதன்முதலில் நடைமுறைப்படுத்திய பெருமை தமிழகத்திற்கு உண்டு. 1885 ஆம் ஆண்டிலேயே அப்போதைய மதராஸ் மாகாணத்தில் கல்வியைப் பரப்புவதற்காக சிறப்பு நிதி உதவிகள் வழங்கப்பட்டன. அதன்பின் 1893 ஆம் ஆண்டில் 49 சமுதாயங்களைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 1927 ஆம் ஆண்டில் மதராஸ் மாகாணத்தில் 100% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்திய விடுதலைக்குப் பிறகு இயற்றப்பட்ட புதிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட நிலையில், பெரியார் தலைமையில் நடத்தப்பட்ட போராட்டத்தின் பயனாக 1951 ஆம் ஆண்டில் பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு 16%, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 25% என மொத்தம் 41% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இது 1971 ஆம் ஆண்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 31%, பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடினருக்கு 18% என 49 விழுக்காடாகவும், 1980 ஆம் ஆண்டில் 68% ஆகவும் உயர்த்தப்பட்டது.

1989 ஆம் ஆண்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான 50% இட ஒதுக்கீடு இரண்டாக பிரிக்கப்பட்டு பிற்படுத்தப்பட்டோருக்கு 30%, புதிதாக உருவாக்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% வழங்கப்பட்டது. அத்துடன் பழங்குடியினருக்கு தனியாக 1% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 69% ஆக அதிகரித்தது.

மண்டல் ஆணையப் பரிந்துரைகள் தொடர்பான இந்திரா சகானி வழக்கில் கடந்த 1992 ஆம் ஆண்டு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்தது. அதனால் தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டபோது, அதைப் பாதுகாப்பதற்கான சட்டம் இயற்றப்பட்டு 1994 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது. அதன் மூலம் 69% இட ஒதுக்கீட்டுக்கு ஏற்பட்ட ஆபத்து தடுக்கப்பட்டது. ஆனால், இப்போது தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டுக்கு இப்போது மீண்டும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீடு ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டதன் மூலம் பாதுகாக்கப்பட்டாலும் கூட, அந்த இட ஒதுக்கீடு செல்லாது என்று அறிவிக்கக் கோரி, வாய்ஸ் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், இந்த வழக்கை அந்த அமைப்பு நடத்தாமல் நிலுவையில் வைத்துக்கொண்டே, 69% இட ஒதுக்கீட்டால் தகுதி படைத்த மாணவர்கள் பாதிக்கப்பட்டு விட்டதாகக் கூறி, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் 19% கூடுதல் இடங்களை உருவாக்கி அனுபவித்து வந்தது.

சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் 13.07.2010 அன்று தீர்ப்பளித்த அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான அமர்வு, தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு செல்லும். எனினும், அடுத்த ஓராண்டுக்குள் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு பெறுவோரின் எண்ணிக்கையை உறுதி செய்து, அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டை நிர்ணயிக்க வேண்டும் என்று ஆணையிட்டது.

அதைத் தொடர்ந்து 13.10.2010 அன்று அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியை பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் 27 சமுதாயங்களைச் சேர்ந்த 44 தலைவர்கள் சந்தித்து, உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணைப்படி தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதையேற்றுக் கொண்ட கருணாநிதி, தமது நோக்கமும் அதுதான் என்றும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஜனார்த்தனத்துடன் கலந்து பேசி இதுகுறித்த நல்ல முடிவை அறிவிப்பதாகவும் தெரிவித்தார். ஆனால், திமுக ஆட்சியில் இருந்தவரை அத்தகைய கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அதன்பின் 2011 ஆம் ஆண்டு மே மாதம் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பதவியேற்றது.

அடுத்த இரு மாதங்களுக்குள் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீட்டை தீர்மானிக்க வேண்டிய தேவை இருந்ததால், உச்ச நீதிமன்றத்திடம் கூடுதல் காலக்கெடு வாங்கி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்யலாம் என்று கோரி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு ராமதாஸ் கடிதம் எழுதினார். ஆனால், அதன்படி சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஜனார்த்தனம் அளித்த உறுதி செய்யப்படாத புள்ளி விவரங்களின் அடிப்படையில் தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தார். இது தான் 69% இட ஒதுக்கீட்டுக்கு புதிய ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உறுதி செய்யப்படவில்லை என்றும், 1985 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட அம்பாசங்கர் தலைமையிலான இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முடிவுகளைக் கொண்டு 69% இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறி 2012 ஆம் ஆண்டில் வாய்ஸ் அமைப்பின் சார்பில் மீண்டும் வழக்குத் தொடரப்பட்டது.

அந்த வழக்கையும் நடத்தாமல் நிலுவையில் வைத்துக்கொண்டே, மருத்துவப் படிப்பில் 19% கூடுதல் இடங்களை உருவாக்கி அதை ஒரு பிரிவினர் அனுபவித்து வந்தனர். ஆனால், இந்த ஆண்டு 19% கூடுதல் இடங்களை ஏற்படுத்தும்படி ஆணையிட மறுத்துவிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அப்துல் நஸீர் ஆகியோர் கொண்ட அமர்வு, 69% இட ஒதுக்கீடு செல்லுமா, செல்லாதா? என்பது குறித்த வழக்கை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

69% இட ஒதுக்கீட்டை நாம் பாதுகாக்க வேண்டுமானால் தமிழகத்தில் இட ஒதுக்கீடு பெறும் சாதிகளின் மக்கள் தொகை தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 69 விழுக்காட்டுக்கும் அதிகம் என்பதை, உறுதி செய்யத்தக்க புள்ளி விவரங்களுடன், நிரூபிக்க வேண்டும். தமிழகத்தில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் அளவு 87% என்பது அம்பாசங்கர் ஆணையத்தின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது கணக்கெடுப்பின் மூலம் உறுதி செய்யப்பட்ட ஒன்று அல்ல என்பதால் இதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது.

இடஓதுக்கீடு தொடர்பான மற்றொரு வழக்கில், தமிழக மக்கள் தொகையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 68%, தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினரின் எண்ணிக்கை 19%, ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் எண்ணிக்கை 87% என்று தமிழக அரசின் சார்பில் முன்வைக்கப்பட்ட அம்பா சங்கர் ஆணைய அறிக்கையின் அடிப்படையிலான புள்ளிவிவரத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

இத்தகைய சூழலில் தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டுமானால், அதற்கு ஒரே வழி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி தமிழகத்தில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் அளவை உறுதி செய்வது தான். 2010 ஆம் ஆண்டில் கருணாநிதி ஆட்சியிலும், 2011 ஆம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியிலும் நடத்தப்படாத சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தற்போதைய அரசு செய்து சமூக நீதியைப் பாதுகாக்க வேண்டும்.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது கடினமான பணி அல்ல. கர்நாடகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 6 கோடி மக்கள் தொகையும், 1.35 கோடி குடும்பங்களையும் கொண்ட கர்நாடகத்தில் 45 நாட்களில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டது. மிகவும் விரிவான முறையில் நடத்தப்பட்ட இந்தக் கணக்கெடுப்பில் மக்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலையை உறுதி செய்வதற்காக ஒவ்வொருவரிடமும் 55 வினாக்கள் எழுப்பப்பட்டன. இந்தப் பணியில் மொத்தம் 1.60 லட்சம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்காக ஒட்டுமொத்தமாக ரூ.147 கோடி மட்டும் தான் கர்நாடகம் செலவிட்டது.

தமிழ்நாட்டிலும் இத்தகைய கணக்கெடுப்பை அதிகபட்சமாக 45 நாட்களில் நடத்தி முடித்துவிடலாம். இதற்காக அதிக செலவும் ஆகாது. இதன் மூலம் நீண்ட காலமாக ஆபத்தை எதிர்கொண்டு வரும் 69% இட ஒதுக்கீட்டுக்கு பாதுகாப்பை ஏற்படுத்த முடியும். சமூக நீதியின் தலைக்கு மேல் 25 ஆண்டுகளாக தொங்கிக் கொண்டிருக்கும் கத்தியை அகற்ற இயலும். அதற்காக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி சமூக நீதி வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டும்” என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x