Published : 06 Aug 2018 12:56 PM
Last Updated : 06 Aug 2018 12:56 PM

ஐஸ் ஹவுஸில் மின்சாரம் தாக்கி ஆட்டோ டிரைவர் பலி: விபத்துக்குக் காரணம் மின்வாரியமா? மாநகராட்சி தெருவிளக்கா?

ஐஸ் ஹவுஸில் மழை நீரில் மின்சாரம் பாய்ந்த நிலையில், அதைக் கடந்த ஆட்டோ டிரைவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். விபத்துக்குக் காரணம் மின்வாரியமா? மாநகராட்சி தெருவிளக்கா? என்ற குழப்பம் நீடிக்கிறது.

சென்னை ஐஸ் ஹவுஸ் பெசன்ட் சாலையில் சாதாரண மழைக்கே சாலையில் முழங்காலைத் தாண்டி இடுப்பளவு தண்ணீர் தேங்கிவிடும். வாகனங்கள் செல்வதிலும் சிரமம் ஏற்படும்.

பெசன்ட் சாலையில் யானைக்குளம், பேகம் சாகிப் தெரு, ஜவஹர் உசேன் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் தேக்கத்தால் இதுவரை மின்சாரம் தாக்கி சமீப மாதங்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன் தினம் இரவு நல்ல மழை பெய்தது. இதனால் பெசன்ட் சாலையில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியிருந்தது. நள்ளிரவு 12 மணி அளவில் அதே பகுதியில் வசிக்கும் இஜாஸ் முகமது (33) என்பவர் தனது ஆட்டோவில் சவாரி முடித்து வீடு திரும்பியுள்ளார். ஜவஹர் உசேன் முதல் தெருவில் உள்ள மின்மாற்றி இணைப்பில் மின்கசிவு ஏற்பட்டு தண்ணீரில் மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதை அறியாமல் ஆட்டோவில் திரும்பிய எஜாஸின் ஆட்டோ மீது தண்ணீர் மூலம் மின்சாரம் பாய அவர் தூக்கி வீசப்பட்டார். தண்ணீரில் விழுந்த அவர்மீது மேலும் மின்சாரம் பாய சம்பவ இடத்திலேயே பலியானார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

காலையில் இந்த சம்பவம் தீயாகப் பரவியது. சில மாதங்களில் மின்சாரம் தாக்கி ஐஸ் ஹவுஸ் பகுதிகளில் இதுவரை 3 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீஸார் அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். உயிரிழந்த எஜாஸ் முகமதுவுக்கு மனைவியும், ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

எஜாஸை நம்பித்தான் அவரது குடும்பம் உள்ளது. இந்நிலையில் அவரது மரணத்திற்குப் பொறுப்பேற்பது யார் என்ற நிலையில் மின்சார வாரியமும், மாநகராட்சி தெருவிளக்கு பராமரிப்புப் பிரிவும் ஆளுக்கு ஆள் மற்றவரை கைகாட்டுவதால் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் எஜாஸ் குடும்பத்திற்கு இழப்பீடு கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளரிடம் 'இந்து தமிழ்' இணையதளம் சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:

மின்சாரம் தாக்கி ஆட்டோ டிரைவர் உயிரிழந்த விவகாரத்தில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டுள்ளதா?

அந்த இடத்தில் போலீஸ் முன்னிலையில் கேபிள் தோண்டிக் காண்பித்தோம். எங்கள் பக்கம் லீக்கேஜ் எதுவும் இல்லை.

பிறகு எப்படி அவர் மின்சாரம் தாக்கித்தான் இறந்ததாகச் சொல்கிறார்கள்?

ஆமாம். அப்படித்தான் அவர்கள் சொல்கிறார்கள். நாங்கள் ஒரு சந்தேகத்தை போலீஸிடம் கூறியுள்ளோம். பக்கத்தில் ஒரு தெருவிளக்கில் மின்சார வயர் கருகி உள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளோம்.

அதை மாநகராட்சி ஏடியிடம் எங்கள் ஏடி தகவல் கொடுத்துள்ளார். மின் கம்பம் மாநகராட்சி பராமரிப்பில் வருகிறது. அவர்களுக்கு முறைப்படி கூறியிருக்கிறோம். அதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறிய்யுள்ளோம்.

சமீபத்தில் சில மாதங்களுக்குள் 3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக சொல்கிறார்களே?

அப்படித்தான் சொல்கிறார்கள், நான் தற்போதுதான் இப்பகுதியில் பொறுப்பேற்றுக்கொண்டேன். அந்தத் தகவல்களை எல்லாம் எங்கள் சேர்மன் கேட்டுள்ளார். அனைத்து தகவல்களையும் திரட்டி தகவல்களை அனுப்ப உள்ளோம்.

அந்தப் பகுதியில் பல தெருக்களில் சாலைகளில் தண்ணீர் தேங்குவதும், சாலையில் பல இடங்களில் மின்சாரப்பெட்டிகள் திறந்த நிலையில் தாழ்வாக உள்ளதாக புகார் வந்துள்ளதே?

நாளை இதற்கான விரிவான கூட்டம் ஒன்று நடத்த உள்ளோம். நான் புதிதாக பொறுப்பேற்றுள்ளதால் முக்கியமாக திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ் பகுதி செயற்பொறியாளர்களை அழைத்துக் கூட்டம் போட உள்ளோம்.

அதில் இதுபோன்ற பகுதிகளைக் கண்டறிந்து கேபிளைத் தோண்டி ஆழத்தில் பதிப்பது உள்ளிட்டவேலைகளை ஆகஸ்ட் மாதத்துக்குள் சிறப்பாகச் செய்துவிடவேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். நீங்கள் பொதுமக்களுக்கு உதவும் வகையில் இனங்காட்டினால் அதையும் சரி செய்து தருகிறோம்.

வருவது மழைக்காலம் அல்லவா?

கண்டிப்பாக இந்த முறை அதிக மழையை எதிர்பார்க்கிறோம், அதற்குள் இதுபோன்ற வேலைகளை முடித்துவிட வேண்டுமென்று செயலில் இறங்கியுள்ளோம். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பருக்குள் முடித்துவிடுவோம்.

இப்போது நடந்த இந்த விபத்துக்கு மின்வாரியம் காரணமா? மாநகராட்சி தெருவிளக்குதான் காரணமா?

இது சந்தேகம் தான். நாங்கள் காரணம் இல்லை என்பது தெளிவாகிறது. நாங்கள் மின் கேபிளை சரி செய்து செக் செய்த பின்னர் மின்கசிவே இல்லை. ஆகவே சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாரிடம் மின்சாரக் கம்பத்தில் வயர் கருகியுள்ளதை சுட்டிக்காட்டி சந்தேகத்தைக் கூறியுள்ளோம்.

இவ்வாறு மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x