Published : 02 Aug 2018 02:06 PM
Last Updated : 02 Aug 2018 02:06 PM

பதைபதைத்துப் போய் விசாரித்தார்; என்ன உதவி வேண்டும் என்றார்: ஸ்டாலின் நேரில் வந்ததால் நெகிழ்ந்த பிரியாணி கடைக்காரர் பேட்டி

 சம்பவம் நடந்ததைக் கேள்விப்பட்டவுடன் என்னை அழைத்து பதைபதைத்துப்போய் கேட்டார், என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன் என்றார், அவர் அன்பால் நெகிழ்ந்து போனோம் என்று பிரியாணி கடை உரிமையாளர் கூறியுள்ளார்.

பிரியாணி கடையில் ஊழியர்களை திமுகவினர் தாக்கிய வீடியோ வைரலாகி கடும் விமர்சனம் எழுந்த நிலையில் இது செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதுபோன்ற வன்முறைகளை எந்நாளும் திமுக ஏற்றுக்கொள்ளாது என்று அவர் தெரிவித்து அவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றார்.

இதனிடையே, வன்முறையில் ஈடுபட்டு ஓட்டல் ஊழியர்களைத் தாக்கிய யுவராஜ், திவாகர் இருவரையும் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்வதாக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார்.

ஸ்டாலின் தனது ஹோட்டலுக்கு நேரில் வந்து ஆறுதல் கூறிச் சென்றதில் பெரிதும் நெகிழ்ந்து போன பிரியாணிக்கடைக்காரர் தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “நேற்றே எங்களை அறிவாலயத்துக்கு ஸ்டாலின் அழைத்தார், அண்ணா அறிவாலயம் சென்றோம், தாக்கப்பட்டவர்களையும் அழைத்துச் சென்றோம். அவர்களுக்கு ஆறுதல் சொன்ன அவர் மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டார். பின்னர் எந்தப் பகுதியில் கடை உள்ளது என்று கேட்டார்.

விருகம்பாக்கத்தில் கடை அமைந்துள்ள இடம் பற்றிக் கூறினோம். நாளை நான் நேரில் வருகிறேன் என்றார்.  நாங்கள் பதறிப்போய், உங்களுக்கு பல்வேறு பணிகள் உள்ளன. எங்களைத்தான் அழைத்து பார்த்துவிட்டீர்கள், உங்கள் பணிகளுக்கு இடையூறாக எதற்கு வரவேண்டும் என்று தெரிவித்தோம். இல்லை எனக்கு மனது கேட்கவில்லை வந்தே தீருவேன் என்று நேரில் வந்தார்.

ஊழியர்களிடம் நலம் விசாரித்தார். சம்பவம் நடந்த இடத்தையும் பார்வையிட்டார், தாக்கியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும், உங்களுக்கு வேறு என்ன மாதிரி உதவி வேண்டும் என்று தயங்காமல் கேளுங்கள் என்றார்.

நாங்கள் நெகிழ்ந்து போனோம். நீங்கள் வந்ததே எங்களுக்குப் போதும் வேறு உதவி வேண்டாம் என்று மறுத்துவிட்டோம்'' என்று தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x