Published : 27 Jul 2018 05:40 PM
Last Updated : 27 Jul 2018 05:40 PM

தலைவர் கருணாநிதி எப்படியிருக்கிறார்?- கவிஞர் மனுஷ்யபுத்திரன் உருக்கமான கவிதை

திமுக தலைவர் கருணாநிதிக்கு வயது மூப்பின் காரணமாக உடல்நலம் குன்றியுள்ளதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோபாலபுரம் இல்லத்துக்கு வருகை தந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்து செல்கின்றனர். அதேபோல், அங்கு திமுக தொண்டர்களும் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், கவிஞர் மனுஷ்யபுத்திரன் கருணாநிதிக்காக கவிதையொன்றினை எழுதி தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்த கவிதை:

“தலைவர் எப்படியிருக்கிறார்?”

இன்று இந்தக் கேள்வியைத்தவிர

வேறு எந்தக்கேள்வியும்

எங்கும் இல்லை

வீடுகளில் தொடங்கி

தெருக்கள்,

நகரங்கள்,

சிற்றூர்கள்,

தேசங்கள் கடந்து அந்தக் குரல்

வியாபித்துக்கொண்டே இருக்கிறது

எந்த பதிலிலும் யாருக்கும் சமாதானம் இல்லை

மக்கள் தெருக்களில்

அமைதியிழந்து நின்றுகொண்டிருக்கிறார்கள்

ஒரே ஒரு பதில் மட்டுமே

எல்லோராலும் வேண்டப்படுகிறது

அந்த ஒரே ஒரு பதிலைத்தேடித்தான்

ஒவ்வொருவரும் கூட்டதில்

முண்டியடித்துக்கொண்டு

முன்னெறிச் செல்கிறார்கள்

'நலமாக இருக்கிறார்'

என்ற ஒற்றை வாக்கியத்தை வேண்டி

லட்சோப லட்சம் மனங்கள் துடிக்கின்றன

லட்சோப லட்சம் கண்ணீர் துளிகள் துளிர்க்கின்றன

எப்போதும் காலத்தை எதிர்த்து நின்ற தலைவன்

இப்போதும் காலத்தோடுதான் போராடுகிறான்

காலத்தை வென்ற மனிதன்

காலத்தின் சதுரங்கக் கட்டத்தில்

தளர்ந்த கைகளோடு காய்களை

மெல்ல நகர்த்துகிறான்

எளியவர்களிலும் எளிய மனிதர்கள்

அச்சம் கவிந்த இரவுகளில்

சூரியன் உதிக்கும் திசை நோக்கி

தூங்காமல் விழித்திருக்கிறார்கள்

தங்கள் விதியை மாற்றிய தலைவன்

தன் விதியோடு நிகழ்த்தும் போரை

மனம் கசிய பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

வாழ்க எனும் முழக்கங்கள்

அவரது பாதித் துயிலில்

ஒரு கனவுபோல கேட்கிறது

அரை நூற்றாண்டுகளாக

ஒரு கணமும் ஓயாத முழக்கம் அது

வாழ்வித்த தலைவனை

வாழ்வித்த முழக்கம்

காலத்தின் காற்றில் கலையாத முழக்கம்

அவர் இப்போது தன் கனவில்

கரகரத்த குரலில்

உரையாற்றிக்கொண்டேதான் இருக்கிறார்

இந்த நிலத்தின் மீது தான் கண்ட கனவுகளை

அவர் இப்போதும் உரத்துச்சொல்லிக்கொண்டிருக்கிறார்

அந்தக் குரல் எனக்குக் கேட்கிறது

உங்களுக்குக் கேட்கிறது

கேளாத காதுகளுக்கும்கூட

அது இப்போது கேட்கிறது

இடிமுழக்கம்போல அது கேட்கிறது

அவர் அருகில் யாரோ குனிந்து

என்னைத் தெரிகிறதா என்று கேட்கிறார்கள்

அவர் புன்னகைக்கிறார்

எத்தனை கோடி மனிதர்களுக்கு அடையாளம்

வழங்கிய மனிதரிடம்

தங்கள் அடையாளம் தெரிகிறதா

என்று கேட்கிறார்கள்

கோடானு கோடி நினைவுகளில்

வாழும் மனிதரின் நினைவுகள் தளும்புகின்றன

இந்த நாளில்

உன் பெயர்

ஒரு வன நெருப்பாய்

எங்கும் படர்ந்துகொண்டிருக்கிறது

எல்லோரும் அந்த நெருப்பின் வெளிச்சத்தில்

உன்னை தங்களுக்கு இவ்வளவு பிடிக்குமா என்று

தம்மைத்தாமே வியந்துகொள்கிறார்கள்

நீ ஏன் காலத்தோடு போராடுகிறாய்

நீதானே காலம்

காலத்தின் சக்கரங்களை உருட்டி

வரலாற்றின் ஓடாதே தேர்களையெல்லாம்

ஓடவைத்தவன்தானே நீ

கடைக்கோடி மனிதனின் கொடியை

நீ கோட்டைச்சுவர்களில் ஏற்றியபோது

நீ சுவாசிக்கும் காற்றால்

அதைப்பறக்க வைத்தாய்

நாங்கள் இந்த இரவுகளுக்கு அஞ்சுகிறோம்

நாங்கள் இந்தப் பகல்களுக்கு அஞ்சுகிறோம்

வதந்திகளுக்கும் உண்மைகளுக்கும் நடுவே

புலரியின் பார்வை மயங்கும்

சாம்பல் வெளிச்சத்தில்

வீடு திரும்பிக்கொண்டிருக்கிறோம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x