Published : 24 Jul 2018 08:42 PM
Last Updated : 24 Jul 2018 08:42 PM

ஓபிஎஸ்ஸை சந்திக்க நிர்மலா சீதாராமன் மறுப்பு: எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என சென்னையில் பேட்டி

டெல்லி சென்ற ஓபிஎஸ்ஸை சந்திக்க நிர்மலா சீதாராமன் மறுத்ததால் ஏமாற்றத்துடன் அவர் சென்னை திரும்பினார். ஏன் உங்களை சந்திக்க அனுமதியில்லை என்ற கேள்விக்கு அண்ணாவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டிவிட்டுச் சென்றார்.

துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று திடீரென டெல்லி சென்றார். அங்கு பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரைச் சந்திப்பதாக இருந்தது. டெல்லி சென்று நிர்மலா சீதாராமனை ஓபிஎஸ் எதற்காகச் சந்திக்கிறார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

அரசியல் ரீதியான சந்திப்பு எதுவும் இல்லாத நிலையில் எதற்காக ஓபிஎஸ் செல்கிறார் என்ற கேள்வியை பலரும் எழுப்பினர். ஆரம்பத்திலிருந்தே ஓபிஎஸ் பாஜக சொற்படிதான் செயல்படுகிறார் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. டிடிவி தினகரனை ஓரங்கட்டி ஓபிஎஸ்ஸை இணைத்ததில் டெல்லி மேலிடம் அதிக முயற்சி எடுத்ததாக அப்போது கருத்து முன்வைக்கப்பட்டது.

என்னதான் ஓபிஎஸ் அதிமுகவில் மீண்டும் இணைந்தாலும் எடப்பாடி அணி ஓபிஎஸ் அணி என இரு அணிகள் எப்போதும் தனியாகவே இயங்கி வந்தன. ஓபிஎஸ் மட்டுமே ஆதாயம் அடைந்த இந்த இணைப்பில் அவரது ஆதரவாளர்கள் மைத்ரேயன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், செம்மலை, மனோஜ் பாண்டியன், பி.எச்.பாண்டியன் என ஒருவரும் பயன்பெறவில்லை.

இதில் நத்தம் விஸ்வநாதன் போன்ற சிலர் ஒதுங்கிப் போய்விட்டனர். சிலர் வேறு எங்கும் போக முடியாது என்பதால் அமைதியாக உள்ளனர். வழிகாட்டும்குழு என்று அமைக்கப்பட்டதும் செயல்பாட்டில் இல்லை. அதேபோல் கட்சி அணிக்குள் எடப்பாடி ஆதரவாளர்கள் ஓபிஎஸ்ஸை சம்பிரதாயப்பூர்வமாகவே ஏற்றுக்கொள்கின்றனர்.

ஆட்சி என்ற ஒரு கயிறும், டிடிவி எதிர்ப்பும் அதிமுகவுக்குள் ஒற்றுமை உள்ளது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் நாளுக்கு நாள் பனிப்போர் அதிகரித்து வருகிறது.

இதன் எதிரொலியே ஓபிஎஸ்ஸின் டெல்லி பயணம் என்று அதிமுக தரப்பில் கூறுகின்றனர். டெல்லியில் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜக தலைவர் அமித் ஷாவையும் சந்திப்பதாக ஓபிஎஸ்ஸின் எண்ணம் என்று டெல்லி வட்டாரத் தகவல் கூறுகிறது. ஆனால் ஓபிஎஸ் டெல்லி சென்று இறங்கும் முன்னர் அவர் ஏன் டெல்லி செல்கிறார் என்று இங்கே எடப்பாடி பேட்டி அளித்தார்.

வண்டலூரில் புதிதாக பிறந்துள்ள சிங்கக்குட்டிக்கு ஜெயா என பெயர் சூட்டிவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓ.பி.எஸ் டெல்லி விசிட் பற்றி கேள்விக்கு, ஓ.பி.எஸ் தம்பி ராஜாவின் உடல்நிலை மோசமாக இருந்ததால் அவரை மதுரையிலிருந்து சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ராணுவ ஆம்புலன்ஸ் விமானத்தை நிர்மலா சீதாராமன் அனுப்பி வைத்தார்.

அதற்கு நன்றி தெரிவிக்கவே ஓ.பி.எஸ் டெல்லி சென்றுள்ளார் என்று தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்த நேரம் ஓபிஎஸ் மற்றும் மைத்ரேயன் என நிர்மலா சீதாராமனின் அலுவலகத்தில் இருந்தனர். உடனடியாக நிர்மலா சீதாராமன் அலுவலகம் சார்பில் ட்விட்டரில் ஓபிஎஸ்ஸுக்கு அனுமதி இல்லை, மைத்ரேயனை சந்திக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது என்று பதிவு செய்திருந்தனர்.

இதையடுத்து ஓபிஎஸ் உடனடியாக வெளியே கிளம்பி வந்துவிட்டார். நிர்மலா சீதாராமன் அலுவலகத்துக்குச் செல்லும் முன் பேட்டி அளித்த ஓபிஎஸ், தனது தம்பிக்கு சிகிச்சைக்கு விமானம் அனுப்பியதற்கு நன்றி தெரிவிக்கச் செல்கிறேன் என்று தெரிவித்தார்.

வெளியே வந்த ஓபிஎஸ் அமித் ஷாவையும் சந்திக்கவில்லை, உடனடியாக சென்னை திரும்பினார். ஏமாற்றத்துடன் சென்னை திரும்பிய ஓபிஎஸ் விமான நிலையத்தில் வழக்கமான சிரிப்புடன் கேள்வியை எதிர்கொண்டார்.

நிர்மலா சீதாராமனை சந்திக்கச் சென்று அவர் மைத்ரேயனுக்கு மட்டுமே அனுமதி என்று கூறியது பற்றி கேட்டதற்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று அண்ணா ஏற்கெனவே கூறியுள்ளார் என்று தெரிவித்துவிட்டுச் சென்றார்.

இதுகுறித்து அரசியல் விமர்சகர் ஒருவரைக் கேட்டபோது, ''ஓபிஎஸ் தம்பி எந்த அரசியல் சார்ந்தவரோ, அரசின் பொறுப்பிலோ இல்லாத ஒருவர், அவருக்காக ராணுவ விமானத்தை அனுப்புவதே சர்ச்சைக்குரிய ஒன்று, இதில் நன்றி சொல்வது சாதாரணமாக தனிப்பட்ட நிகழ்வாக இருக்கும். இதற்காக ஓபிஎஸ் டெல்லிக்கு விமானத்தில் சென்று அங்கு பேட்டியும் கொடுத்துவிட்டா செல்வார்'' என்று பதில் கேள்வி எழுப்பினார்.

எப்போதும் எந்தப் பிரச்சினையிலும் அமைதி தவழும் முகத்துடன் இக்கட்டான கேள்விகளை எதிர்கொண்டு சமாளிக்கும் திறன் பெற்ற ஓபிஎஸ் இன்று தன்னை மீறி அண்ணாவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டியதை அவர் ஏமாற்றம் அடைந்துள்ளார் என்பதையே காட்டுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x