Published : 24 Jul 2018 05:30 PM
Last Updated : 24 Jul 2018 05:30 PM

பரங்கிமலை ரயில் விபத்துக்கு ரயில்வே துறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம்: பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

பரங்கிமலை ரயில் விபத்துக்கு ரயில்வே துறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக பாலகிருஷ்ணன் செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த மின்சார ரயில், கோடம்பாக்கம் - மாம்பலம் இடையே உயர்மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. இதனால் பரங்கிமலை ரயில்நிலையத்தை கடந்த போது, கூட்ட நெரிசலில் ரயிலில் தொங்கிக் கொண்டு பயணித்தவர்கள் பக்கவாட்டுச் சுவரில் அடிபட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 4 பேர் சம்பவ இடத்திலும், ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. திங்கள்கிழமை இரவு இதே ரயில் நிலையத்தில் செங்கல்பட்டு விரைவு மின்சார ரயில் சென்ற போது 2 இளைஞர்கள் இதே தடுப்புச் சுவர் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஏற்கெனவே முதல்நாள் இதே ரயில் நிலையத்தில் பக்கவாட்டு சுவரில் அடிபட்டு 2 பேர் இறந்திருக்கும் நிலையில், சென்னை கடற்கரையிலிருந்து கிண்டி வரை அனைத்து ரயில்நிலையங்களிலும் ரயில்வே அதிகாரிகள் ஒலி பெருக்கி மூலம் முன்கூட்டியே எச்சரிக்கை செய்ய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம். ஆனால் ரயில்வே துறை அதிகாரிகள் இதைச் செய்யவில்லை. இந்த விபத்திற்கு ரயில்வே துறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கும், அலட்சியமுமே காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது; வன்மையாக கண்டிக்கிறது.

உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ. 50 லட்சமும், அவர்தம் குடும்பத்தினரில் ஒருவருக்கு ரயில்வேயில் வேலையும் வழங்கிட வேண்டுமெனவும், படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசையும், ரயில்வே துறையையும் வலியுறுத்துகிறது.

இனிமேல் இதுபோன்ற விபத்துக்கள் நிகழாமல் இருக்கவும், கூட்ட நெரிசலை சமாளிக்கவும் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என்பதை மாற்றி 5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்பட வேண்டும். தற்போது உள்ள 12 பெட்டிகளை 15 பெட்டிகளாக அதிகரிக்க வேண்டும். பரங்கிமலை ரயில் நிலையத்தில் உள்ள பக்கவாட்டுச்சுவரை உடனடியாக அகற்ற வேண்டும், மேலும் இதுபோன்ற ஆபத்தாக இருக்கும் அனைத்து பக்கவாட்டுச் சுவர்களையும் கண்டறிந்து அகற்றிட வேண்டுமெனவும், இதுபோன்ற விபத்துக்களை தடுப்பதற்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசையும், ரயில்வேத்துறையும் வலியுறுத்துகிறது.

உயிரிழந்த குடும்பத்தாருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது” என பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x