Published : 24 Jul 2018 04:56 PM
Last Updated : 24 Jul 2018 04:56 PM

ஸ்பென்சர் விபத்து சோகம்: மகளுக்குத் திருமணம் நடக்க 25 நாட்களே இருந்த நிலையில் தாய், மகன் பலி

அண்ணா சாலை ஸ்பென்சர் அருகே நடந்த சாலை விபத்தில் தனது மகளுக்கு திருமணம் ஆக 20 நாட்கள் இருந்த நிலையில் அழைப்பிதழ் வைக்க மகனுடன் சென்ற தாய் விபத்தில் உயிரிழந்த சோகம் தெரியவந்துள்ளது.

ஒரு நொடி தாமதமாகச் சென்றிருந்தால் மொத்த குடும்பத்தினரின் சந்தோஷமும் பறிக்கப்பட்டிருக்காது. சில நொடிகளில் நடந்த அந்தக் கோர விபத்து ஒரு குடும்பத்தில் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் பறித்துச்சென்றுவிட்டது. விபத்து வழக்கமானதுதான் என்று எண்ணிக் கடக்க முடியாத அளவுக்கு இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா சாலை ஸ்பென்சர் சிக்னல் அருகே அண்ணா சாலையிலிருந்து பக்கவாட்டு வழியாக ஜிபி சாலைக்கு செல்ல வலதுபுறமாக 24 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட டாரஸ் வகை லாரி வேகமாகச் சென்றது. அப்போது பக்கவாட்டிலிருந்து கிளப் அவுஸ் சாலையிலிருந்து எத்திராஜ் கல்லூரி நோக்கி வேகமாக தனது தாயாரை பின்புறம் அமர்த்தியபடி இளைஞர் மகேஷ் தனது இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

சில நொடிகளில் இருவரில் யார் பக்கம் தவறு என்பதைத் தீர்மானிக்கும் முன்னர் அந்தக் கோர விபத்து நிகழ்ந்தது. அருகில் உள்ள வாகன ஓட்டிகள், சாலையில் செல்வோர் அய்யோ என்று அலற ஓட்டுநரின் கட்டுப்பாட்டையும் மீறி லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோத, வாகனத்துடன் லாரியின் அடியில் சிக்கிய நிர்மலாவும், அவரது மகன் மகேஷும் லாரியின் சக்கரத்தில் சிக்கி நொடியில் உயிரிழந்தனர்.

அக்கம் பக்கத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்தக் கோர விபத்து நிர்மலா குடும்பத்தில் அடுத்த மாதம் நடக்கவிருந்த சந்தோஷமான நிகழ்வையே சோகமாக்கி விட்டது. சேத்துப்பட்டு லோகாம்பாள் தெருவில் வசிப்பவர் தட்சிணாமூர்த்தி (56). இவரது மனைவி நிர்மலா (52). இவர்களுக்கு நாகராஜ், மகேஷ் என்ற 2 மகன்களும், ஹேமமாலினி என்ற மகளும் உள்ளனர்.

மூத்த மகன் பி.ஈ பட்டதாரி, இளைய மகன் மகேஷ் ஐடிஐ முடித்திருந்தார். மகள் ஹேமமாலினி எம்.ஏ.படித்துள்ளார். ஹேமமாலினிக்கு வரன் பார்த்து வந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்த ராஜ்சேகரன் என்பவரது மகன் ஹேமசுராஜ் (எ) சுராஜ் என்பவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. ஆவடியில் உள்ள திருமண மண்டபத்தில் அடுத்த மாதம் 18-ம் தேதி திருமணம் நடக்க இருந்தது.

இதற்காக தட்சிணாமூர்த்தி குடும்பத்தினர் உறவினர்களுக்கு திருமணப் பத்திரிகை கொடுத்து வந்ததனர். இந்நிலையில் சிலருக்கு அழைப்பிதழ் வைக்கவேண்டி இருந்ததால் நிர்மலா தனது இளையமகன் மகேஷை அழைத்துக்கொண்டு அண்ணாசாலைக்கு வந்தார். பின்னர் வீடு திரும்பும் போதுதான் ஸ்பென்சர் அருகே கோர விபத்தில் சிக்கினர்.

மகளுக்குத் திருமணம் நடக்க 25 நாட்களே இருக்கும் நிலையில் மனைவி மற்றும் இளைய மகனை விபத்தில் பறிகொடுத்த தட்சிணாமூர்த்தி மற்றும் குடும்பத்தினர் வாழ்வில் இந்த விபத்து தீராத சோகத்தை ஏற்படுத்திவிட்டது. நிர்மலா குடும்பத்தாருக்கு நேர்ந்த இந்தக் துயரத்தை கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x