Published : 24 Jul 2018 04:31 PM
Last Updated : 24 Jul 2018 04:31 PM

ரயில்வே நிர்வாகத்தினர் அலட்சியம்; பரங்கிமலை ரயில் விபத்தில் 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழப்பு: ரயில் பாதை உள்ள பக்கவாட்டுச் சுவற்றை அகற்றப் பரிந்துரை

ரயில்வே நிர்வாகத்தினரின் தொடர் அலட்சியம் காரணமாக 24 மணிநேரத்தில் ஒரே இடத்தில் நடந்த விபத்தில் 6 பயணிகள் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர் என்று பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னையில் தினமும் ஏராளமான மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சாலையில் பேருந்து வழியாகச் செல்லும் நேரம் அதிகரிப்பதால் அனைவரும் ரயில்களையே நாடும் நிலை உள்ளது.

கடற்கரையிலிருந்து தாம்பரம் வரையிலும், சில ரயில்கள் செங்கல்பட்டு, திருமால்பூர் வரையிலும் இயக்கப்படுகின்றன. செங்கபட்டு, திருமால்பூர் வரை சில அதிவேக பயணிகள் ரயிலும் இயக்கப்படுகின்றன. இவை சில நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.

நகர விரிவாக்கம், புறநகர்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் காரணமாக சென்னையிலிருந்து திருமால்பூர்வரை பள்ளி, கல்லூரிக்கோ அல்லது பணிக்கோ ஆயிரக்கணக்கோனோர் காலை முதல் இரவு வரை பயணம் செய்கின்றனர். இவர்கள் அனைவரும் நேரத்திற்குச் செல்ல வேண்டும்.

இதனால் சென்னையில் காலையில் எப்போதும் ரயில்களில் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் வழக்கம்போல் இயங்கும் சென்னை தாம்பரம் ரயிலில் பயணம் செய்யும் ரயில் வழக்கமாக இயங்கினால் பயணிகள் அதற்கு ஏற்றார்போல் செல்வார்கள்.

ஆனால் இன்று கடற்கரை தாம்பரம் ரயில் மார்க்கத்தில் மாம்பலம் -கோடம்பாக்கம் இடையே உயர் மின் அழுத்த கேபிள் அறுந்து விழுந்ததால் ரயில் சேவை 2 மணி நேரம் தடைப்பட்டது. இதனால் வழக்கமாக கடற்கரை தாம்பரம் ரயிலில் செல்லும் பயணிகள் தவித்தனர்.

அப்போது திருமால்பூர் செல்லும் அதிவேக பயணிகள் ரயில் கிளம்பியுள்ளது. அதுவும் 45 நிமிடம் தாமதமாகக் கிளம்பியுள்ளது. இதனால் வழக்கமான ரயில் கிடைக்காத பயணிகள் அனைவரும் திருமால்பூர் செல்லும் ரயிலில் ஏறியதால் அதிக அளவில் பயணிகள் நெரிசலுடன் ரயில் கடற்கரையிலிருந்து கிளம்பியது.

எழும்பூர் வந்த ரெயில் வழக்கமான ரெயில் செல்லும் பாதையில் மாம்பலம் கோடம்பாக்கம் பாதையில் கேபிள் கட்டானதால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும்பாதையில் மாற்றி விடப்பட்டன.

வழக்கமாக ரயில் செல்லும் பாதை அகலமானது. அங்கு உள்ள மின் கம்பங்கள், பக்கச்சுவர்கள் ரயில் பெட்டியை விட இடைவெளிவிட்டு இருக்கும். ஆனால் எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும் பாதையில் கதவு மூடியிருக்கும், பயணிகள் வெளியே தொங்கிச்செல்ல வாய்ப்பில்லை என்பதால் பக்கவாட்டுச் சுவர் பெட்டிக்கு அருகில் இருக்கும்.

இதைப்பற்றி அறியாத திருமால்பூர் ரயிலை இயக்கியவர்கள் நேற்றிரவு பரங்கிமலையில் ரயில் பெட்டியில் தொங்கியபடி வந்த தூத்துக்குடியை சேர்ந்த ஸ்டீபன் மற்றும் தாம்பரத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற இருவர் மின் கம்பத்தில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பற்றி அறிந்திருந்தும் அந்த விபத்து நடந்து 20 மணி நேரம்கூட ஆகாத நிலையில் அதிக அளவு பயணிகள் தொங்கியபடி ரயில் வர எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும் பாதையில் அதிவேகத்தில் நேற்றிரவு விபத்து நடந்த அதே பரங்கிமலை ரயில் நிலையத்தைக் கடந்தது.

அப்போது எக்ஸ்பிரஸ் ரயில் பாதையில் பெட்டிக்கு அருகிலேயே அமைக்கப்பட்டிருந்த பக்கவாட்டுச் சுவர் மீது மோதிய பயணிகள் பத்துக்கும் மேற்ப்பட்டோர் சடசடவென கீழே விழுந்தனர். ரயில் செல்லும் வேகத்தில் ரயிலுக்கும் பக்கவாட்டுச் சுவருக்கும் இடையில் சிக்கிய அவர்களில் இரண்டுபேர் தலை துண்டானது. பலர் படுகாயமடைந்தனர்.

பரங்கிமலைப்பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும் பாதை குறுகலாக இருந்ததை கவனிக்காமல் சென்றதும், கூட்ட நெரிசல் காரணமாக பயணிகள் தொங்கியபடி சென்றதும் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

அதில் இருவர் கல்லூரி மாணவர்கள். 5 பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவருக்கு இரண்டு கால்களும் துண்டானது. நேற்று இருவர் உயிரிழந்த நிலையில் மறுநாளே அதே இடத்தில் மேலும் நான்கு பேர் உயிரிழந்தது பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பரங்கிமலை ஸ்டேஷனில் முற்றுகையிட்டு பயணிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புறநகர் பயணிகள் ரயில் இல்லாததால் வேறு வழியில்லாமல் தொங்கியபடி வரவேண்டிய நிலை, பக்கவாட்டுச் சுவர் நெருக்கமாக இருப்பது குறித்து பல முறை புகார் அளித்தும் ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. ரயில் மாற்றுப்பாதையில் செல்லும்போது அங்குள்ள நிலையை அனுசரித்துப் பயணிகள் பாதுகாப்பையும் கவனத்தில் வைத்து மெதுவாக இயக்கி இருந்தால் நான்கு உயிர்கள் இன்று இழந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று பயணிகள் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து வேலைக்கு செல்பவர்களில் பெரும்பாலோனோர் இந்த ரயில்களையே பெரிதும் நம்பியிருக்கின்றனர். கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கத்தில் வேலை நேரங்களில் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும்.

ஆனால் அந்தப் பயணிகள் வழக்காமான பாதையில் சென்றால் அவர்களுக்கு மின்கம்பங்கள் குறித்து தெரியும், இது எக்ஸ்பிரஸ் ரயில் பாதை என்பதால் பயணிகளுக்கு ரயில் பக்கவாட்டுச்சுவர் பற்றி தெரியவில்லை என்று தெரிவித்தனர்.

சென்னை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்த விபத்து குறித்து ரயில்வே ஐஜி வீரேந்திர குமார் எதிராபாராமல் நடந்த இந்த விபத்துக்கு காரணம் அதிக அளவில் ரயில் பயணிகள் தொங்கிச் சென்றதே என்று தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்தைப் பார்வையிட்ட ரயில்வே போலீஸ் கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு, ''பயணிகளின் கவனக்குறைவே விபத்துக்குக் காரணம். ரயில் தாமதம் என்பதால் அனைத்துப் பயணிகளும் ஒரே ரயிலில் பயணம் செய்துள்ளனர். விபத்துக்குக் காரணமான சுவர் பல ஆண்டுகளாக அங்குள்ளது.

ஆனாலும் இந்த விபத்துக்கு காரணமான சுவரை அகற்ற ரயில்வே நிர்வாகத்துக்கு தெரிவித்துள்ளோம். அதுவரை அந்தப்பாதையில் ரயிலை இயக்கவேண்டாம். பாசஞ்சர் ரெயில்களில் எப்போதும் படியில் தொங்கியபடி பயணம் செய்வதை பயணிகள் தவிர்க்கவேண்டும்.

ரயிலில் அதிக கூட்டம் இருந்தால் அடுத்த ரயிலில் செல்லலாம் அல்லது பேருந்தில் பயணம் செய்யலாம், இதுபோன்று தொங்கிக்கொண்டு செல்வதால் விபத்துதான் ஏற்படும் என்பதை எப்போதும் கவனத்தில் கொள்ளவேண்டும்'' என்றார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரும் இந்த விபத்து துரதிஷ்டவசமானது விபத்துக்கு காரணமான பக்கவாட்டுச் சுவரை அகற்ற கேட்டுக்கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x