Published : 24 Jul 2018 01:10 PM
Last Updated : 24 Jul 2018 01:10 PM

லாரிகள் வேலைநிறுத்தம்; தமிழகத்தில் ரூ.7000 கோடிக்கு சரக்குகள் தேக்கம்: முத்தரசன் தகவல்

நாடு முழுவதும் கடந்த 5 தினங்களாக நடைபெற்று வரும் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான சரக்குகள் தேக்கமடைந்துள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.7000 கோடிக்கு சரக்குகள் தேக்கமடைந்துள்ளன என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

மேலும், மத்திய அரசு இனியும் காலம் கடத்தாது, உடனடியாக லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முன் வரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''லாரி உரிமையாளர்கள் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, தீர்வுகாண பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்ட போதும், பேசித் தீர்வுகாண வேண்டிய மத்திய அரசு அவர்களை தொடர்ந்து அலட்சியப்படுத்தியதன் காரணமாக, வேறு வழியின்றி, நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம் நடந்த நிலையில், சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண வேண்டிய பொறுப்பும் கடமையும், இருப்பதை மத்திய அரசு மறந்துவிடக் கூடாது. மத்திய அரசு அலட்சியப்படுத்திய காரணத்தால், வேலைநிறுத்தப் போராட்டம் 5-வது நாளாக தொடர்கின்றது.

லாரி உரிமையாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் அவர்களுக்கு மட்டும் உரியதன்று, பொதுமக்களுக்கான கோரிக்கையும்தான் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். அத்தியாவசியப் பண்டங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை ஏற்றம் தொடர்வதற்கு லாரி வாடகை உயர்வும் மிக முக்கிய காரணமென்பதை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்.

நாடு முழுவதும் கடந்த 5 தினங்களாக நடைபெற்று வரும் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான சரக்குகள் தேக்கமடைந்துள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.7000 கோடிக்கு சரக்குகள் தேக்கமடைந்துள்ளன. இதன் விளைவாக கட்டுமானப் பொருட்கள், காய்கறிகள், கனிகள், தேங்காய், உணவுப் பொருட்கள், பூ உள்ளிட்ட அனைத்தும் தட்டுப்பாடும், விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு இனியும் காலம் கடத்தாது, உடனடியாக லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முன் வரவேண்டும்.

சங்க நிர்வாகிகள், பேச்சுவார்த்தைக்கு தாங்கள் தயாராக உள்ளோம். அரசு அழைத்தால் பேச்சுவார்தைக்கு தயார் என்று திரும்பத் திரும்பக் கூறிய போதும், மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x