Published : 24 Jul 2018 01:18 PM
Last Updated : 24 Jul 2018 01:18 PM

சொத்து வரி உயர்வைக் கண்டித்து வரும் 27-ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு

சொத்து வரி உயர்வைக் கண்டித்து வரும் 27-ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமைக்கழகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், “மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்து வரியை திடீரென உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு மக்களை பேரதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

ஊழலில் ஊறித்திளைக்கும் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை நடத்தாமல் இருப்பதால் மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய ரூ.3,500 கோடிக்கும் மேற்பட்ட நிதி இன்னமும் பெறப்படாமல் உள்ளது.

மத்திய அரசின் மானிய உதவித் தொகைகளைப் பெற்று உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தாமல் வாடகைதாரர்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கும் வண்ணம் சொத்து வரியை உயர்த்தி மக்களை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது தமிழக அரசு.

எனவே கடுமையான இந்த சொத்து வரி உயர்வைக் கண்டித்தும், அதை உடனடியாக திரும்ப பெறக் கோரியும் அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் முன்பு வரும் 27-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில், மாவட்டச் செயலாளர்கள், மாநகர செயலாளர்கள், நகர செயலாளர்கள் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x