Published : 24 Jul 2018 12:18 PM
Last Updated : 24 Jul 2018 12:18 PM

சொத்து வரியை ஒரேயடியாக உயர்த்தியது கண்மூடித்தனமான செயல்: வாசன் கண்டனம்

தமிழக அரசு சொத்து வரியை ஒரேயடியாக 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தியது கண்மூடித்தனமான செயல் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசு நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதி, வாடகை குடியிருப்புப் பகுதி மற்றும் குடியிருப்பு இல்லாத பகுதி என மூன்று விதமாக பிரித்து, புதிய சொத்து வரியை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர்.

குறிப்பாக சொத்து வரி 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல.

மத்திய பாஜக அரசின் பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட இன்னல்களில் இருந்து மீளாத நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகின்ற சூழலில், விலைவாசி அதிகரித்து வருகின்ற வேளையில், பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கின்ற நிலையில் வாழ்கின்ற தமிழக மக்கள் குறிப்பாக ஏழை, எளிய, நடுத்தர மக்களின் பொருளாதாரத்தை நினைத்துப் பார்க்காமல், கவனத்தில் கொள்ளாமல் திடீரென்று 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்த தமிழக அரசு முடிவு எடுத்திருப்பது கண்மூடித்தனமான ஒன்று.

ஏற்கெனவே பொருளாதாரம் இல்லாமல், சொத்துவரியை உரிய நேரத்தில் செலுத்த முடியாமல் கஷ்டப்படுகின்ற சூழலில் அதிரடியாக சொத்துவரியை உயர்த்தினால் ஏழை, எளிய மக்களின் நிலை என்னவாகும். இவர்களுக்கு மேலும் பொருளாதாரத்தில் கூடுதல் சுமை ஏற்பட்டு அன்றாடப் பிழைப்பிற்கே அல்லல்படுவார்கள்.

ஆளும் ஆட்சியாளர்கள் அரசுக்கு வருவாய் ஈட்ட வேண்டும் என்றால் அதற்காக பொதுமக்கள் மீது சுமையை குறிப்பாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது சுமையை ஏற்றாமல், சேவை மனப்பான்மையுடன் ஆட்சி செய்ய நடவடிக்கைகளில் ஈடுபடலாம். அதுவும் குடியிருப்பு சம்பந்தமான சொத்து வரியில் அனைத்து தரப்பு மக்களும் உட்படுவார்கள் என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். சொத்து வரியை உயர்த்தும் போது வாடகைக்கு குடியிருக்கும் சாதாரண மக்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

எனவே தமிழக அரசு மக்கள் நலன் காக்க வேண்டும் என்றால் அவர்களுக்காக சலுகைகள், உதவிகள் செய்யும் வகையில் ஆட்சி செய்ய வேண்டுமே தவிர, மக்கள் மீது பொருளாதாரச் சுமையை திணிக்கும் விதமான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. அந்த வகையில் தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் அனைத்து விதமான சொத்துகளுக்கு தற்போதைய சூழலில் சொத்து வரியை மிகக்குறைவாக நிர்ணயம் செய்ய வேண்டும்.

அதாவது தமிழக அரசு சொத்துவரி சம்பந்தமாக திருத்தம் மேற்கொண்டு அதிகபட்சம் 50 சதவீதம் வரை சொத்து வரியில் மாற்றம் செய்ய வேண்டும்” என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x