Published : 24 Jul 2018 09:17 AM
Last Updated : 24 Jul 2018 09:17 AM

சென்னை கந்தன்சாவடி கட்டிட விபத்து குறித்து சிபிஐ விசாரணை கோரி டிராபிக் ராமசாமி மனு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை கந்தன்சாவடி கட்டிட விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

சென்னை கந்தன்சாவடியில் தனியார் மருத்துவமனைக்கான அடுக்குமாடி கட்டுமானப் பணியின்போது, சாரம் சரிந்து விழுந்து பிஹாரைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒடிஸா, பிஹார் மாநிலங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்துக்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் என்.கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி நேற்று முறையீடு செய்தார்.

இதுதொடர்பாக மனு தாக்கல் செய்தால் 24-ம் தேதி (இன்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் டிராஃபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

கந்தன்சாவடி பகுதியில்  உள்ள புறம்போக்கு நிலத்தை அதிகாரிகள் முறைகேடாக தனியாருக்கு தாரை வார்த்துள்ளனர். இதற்கு முன்னாள் எம்எல்ஏவும், பெருங்குடி பேரூராட்சி முன்னாள் தலைவருமான கே.பி.கந்தன் முக்கிய காரணம். அவர் 3 முறை பெருங்குடி பேரூராட்சித் தலைவர், ஒருமுறை எம்எல்ஏ என 20 ஆண்டுகாலம் பதவியில் இருந்துள்ளார்.

இவரது பதவிக் காலத்தில் பல கட்டுமானங்களுக்கு முறைகேடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள 99 சதவீத கட்டுமானங்களுக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்படவில்லை. தற்போது கந்தன்சாவடி எம்ஜிஆர் சாலை பகுதியில் தனியார் மருத்துவமனை அடுக்குமாடி கட்டிடத்தின் சாரம் சரிந்து 2 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

20 அடி மட்டுமே அகலம் உள்ள சாலையில் 10-க்கும் மேற்பட்ட அடுக்குமாடிகள் கட்ட அதிகாரிகள் எப்படி அனுமதி வழங்கினர் என்பது தெரியவில்லை. மவுலிவாக்கம் கட்டிட விபத்து, சரவணா ஸ்டோர்ஸ், சென்னை சில்க்ஸ் கட்டிட தீ விபத்துகள் ஆகிய சம்பவங்களுக்குப் பிறகும் அதிகாரிகள் இன்னும் பாடம் கற்கவில்லை.

அதேபோல பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியை ஒட்டியுள்ள பெருங்குடி, கந்தன்சாவடி பகுதிகள் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்ட தகுதியற்றவை. எனவே அரசுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள  நிலங்களை மீட்க, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கே.பி.கந்தனின் சொத்து மதிப்புகள் குறித்து வருமானவரித் துறை சோதனைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x