Published : 24 Jul 2018 08:09 AM
Last Updated : 24 Jul 2018 08:09 AM

சீர்காழியில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி அமைச்சரின் உதவியாளர் கொலை: மர்ம நபர்களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு

நாகை மாவட்டம் சீர்காழியில் நேற்று பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அமைச்சரின் உதவியாளர் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி திரிபுரசுந்தரி நகரில் வசித்து வந்தவர் லட்சுமிகாந்தன் மகன்  ரமேஷ்பாபு(45). சீர்காழி அருகே உள்ள எடமணல் இவரது சொந்த ஊர். கொள்ளிடம் ஒன்

றிய அதிமுக மாணவரணி துணை செயலாளர். மேலும் ஒப்பந்ததாரராகவும், சவுடுமண் குவாரி தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை 11.30 மணியளவில் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் உள்ள ஒப்பந்ததாரர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றுவிட்டு தனது காரில் ஏறியபோது, திடீரென ஒரு கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்களில் வந்த சுமார் 10 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று ரமேஷ்பாபுவின் கார் மீது 3 நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளது.

இதில் ரமேஷ்பாபு நிலை குலைந்த நிலையில், அவரை சரமாரியாக அரிவாளால் மர்ம நபர்கள் வெட்டினர். இதில், அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். ரமேஷ்பாபுவின் கார் ஓட்டுநர் இளவரசன், குண்டு வெடித்த நிலையில் தப்பி ஒப்பந்ததாரர் வீட்டுக்குள் ஓடிவிட்டார்.

தகவலறிந்த, தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி. லோகநாதன், எஸ்.பி. தேஷ்முக் சேகர் சஞ்சய், சீர்காழி டி.எஸ்.பி. சேகர் மற்றும்  போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரமேஷ்பாபுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நாகையிலிருந்து கைரேகை, வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட அதிகமுகவினர் சம்பவ இடத்தில் கூடினர். இதுதொடர்பாக சீர்காழி போலீஸார் வழக்கு பதிவு செய்து, ரமேஷ்பாபு தனது பாதுகாப்புக்காக பயன்படுத்திய கைத்துப்பாக்கி, செல்போன் ஆகியவற்றைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், கொலையாளிகளைக் கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தொழில் போட்டி அல்லது அரசியல் விரோதத்தால் ரமேஷ்பாபு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட சில அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு நெருக்கமானவராக இவர் இருந்துள்ளார். கொல்லப்பட்ட ரமேஷ்பாபுவுக்கு மனைவி சுஜா, மகன் ஹர்ஷவரதன், மகள் வர்ஷா ஆகியோர் உள்ளனர்.

அதிமுகவில் தீவிர பணி

எடமணல் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்பாபு ஆரம்ப காலத்திலிருந்தே அதிமுகவுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டிருந்துள்ளார்.2001 தேர்தலின்போது முழுமையாக களப்பணியாற்றியுள்ளார். அப்போது சட்டப்பேரவை உறுப்பினராக என்.சந்திரமோகன் வெற்றி பெற்றார். அவருக்கு ரமேஷ்பாபு உதவியாளராகவும், எல்லாமுமாகவும் இருந்துள்ளார். அந்தக் காலகட்டத்தில்தான் சிறிய அளவில் ஒப்பந்தப் பணிகளை எடுத்துச் செய்யத் தொடங்கியுள்ளார்.

முதல்நிலை ஒப்பந்ததாரர்

அப்போதிலிருந்து ரமேஷ் பாபுவின் அரசியல் பயணம் வளர்ச்சியடையத் தொடங்கியது. சவுடு மண் குவாரி தொழிலில் ஈடுபட்டு வந்த ரமேஷ்பாபு பல நிறுவனங்களுக்கான வேலை களையும், அரசு வேலைகளையும் எடுத்துச் செய்யத் தொடங்கினார். 2006-க்குப் பிறகு அகல ரயில் பாதை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு சவுடு மண் சப்ளை செய்துள்ளார். தொடர்ந்து தொழிலில் நல்ல லாபம் கிடைக்கத் தொடங்கியது. தற்போது, முதல்நிலை ஒப்பந்ததாரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தின்போது, தற்போது அமைச்சராக உள்ள ஓ.எஸ்.மணியன், கட்சித் தலைமையால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த காலத்தில், அவருடன் ரமேஷ் பாபு இணக்கமாகவே இருந்துள்ளார். அதே காலக்கட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் நெருக்கமாக இருந்து அவர் மூலம் பல ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

உதவியாளர் போலவே...

தற்போது ஓ.எஸ்.மணியன் அமைச்சர் ஆனதும், அவரிடமிருந்த விசுவாசம் காரணமாக அமைச்சருக்கு உதவியாளர் போலவே ரமேஷ்பாபு இருந்து வந்தார். பெரும்பாலான ஒப்பந்தப் பணிகள் இவருக்கே கொடுக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இவரது கண்ணசைவின்றி ஒப்பந்தப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாது என்று கூறப்படுகிறது. இதனால் பல கோடிக்கணக்கான ரூபாய்க்கு அதிபதியாக உருவெடுத்தார். வடரெங்கம் மணல் குவாரியில் மண் அள்ளிப்போடும் ஒப்பந்தத்தையும் பெற்றார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி

இந்நிலையில் அவர் நேற்று கொலை செய்யப்பட்டார். அதிகமான ஒப்பந்தங்கள் அவருக்கே கொடுக்கப்படுகின்றன, அமைச்சர் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பன போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் மணல் குவாரி விஷயங்களிலும் அண்மைக் காலமாக கவனம் செலுத்தி வந்துள்ளார். அதனால் தொழில் போட்டி, அரசியல் ரீதியான காழ்ப்புணர்ச்சி போன்ற காரணங்களால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது அமைச்சருக்கு வேண்டாதவர்கள் யாரேனும் ஒரு எச்சரிக்கைக்காக இதனை செய்திருக்கலாம் என பல கோணங்களில் கருத்துகள் பேசப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x