Published : 24 Jul 2018 07:51 AM
Last Updated : 24 Jul 2018 07:51 AM

முதல்வர் நாராயணசாமி தலைமையிலான குழுவினர் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தல்: சட்டப்பேரவையில் நிறைவேறிய தீர்மானத்தை அளித்தனர்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி பேரவையில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தை, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், காங் கிரஸ், திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டாக அளித்தனர். இந்நிகழ்வை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணா ராவ் புறக்கணித்துள்ளார்.

யூனியன் பிரதேசமாக உள்ள புதுச்சேரியில் மத்திய அரசால் நியமிக்கப்படும் துணை நிலை ஆளுநருக்கு இருக்கும் அதிகாரம், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமைச்சரவைக்கு இல்லை. புதுச்சேரியில் ஒரு கட்சி ஆட்சியும், மத்தியில் வேறொரு கட்சியின் ஆட்சியும் அமையும்போது புதுச் சேரி ஆட்சியாளர்களுக்கு துணை நிலை ஆளுநர்களால் நெருக்கடி கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு கள் எழுவது வாடிக்கை. அந்த வகையில் தற்போது துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மூலம் மத்திய அரசு புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

அதில் ஒன்றாக பாஜகவைச் சேர்ந்த 3 பேரை நியமன எம்எல்ஏக் களாக மத்திய அரசு ஆளுநர் மூலம் நியமித்துள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று கடந்த வாரம் நடைபெற்ற புதுவை சட்டப் பேரவையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை டெல்லி சென்று குடியரசுத் தலை வர், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் மற்றும் அனைத்து தேசியக்கட்சி தலைவர்களைச் சந்தித்து அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக முதல்வர் நாராயண சாமியும் சட்டப்பேரவை நடக்கும் போது அனைத்து கட்சி எம்எல்ஏக் களுக்கும் தனித்தனியாக அழைப்புக் கடிதமும் அளித்தார்.

டெல்லி விரைந்தனர்

இதற்காக முதல்வர் நாராயண சாமி, அமைச்சர்கள் கடந்த 2 தினங்களுக்கு முன்பே டெல்லி சென்றனர்.

அவர்களைத் தொடர்ந்து நேற்று சபாநாயகர் வைத்திலிங்கம், அதிமுக, திமுக எம்எல்ஏக்கள் ஆகியோர் டெல்லி சென்றனர்.

தொடர்ந்து நேற்று மதியம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை முதல்வர் நாராயணசாமி தலைமையிலான குழு சந்தித்தது. அக்குழு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் அளித்தது.

இந்நிகழ்ச்சியின்போது சபாநாய கர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண் ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்எல்ஏக்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், தீப்பாய்ந்தான், தனவேலு, விஜயவேணி, திமுக எம்எல்ஏக்கள் சிவா, கீதா ஆனந்தன், அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், அசனா, பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.

உள்துறை அமைச்சரை சந்தித்த பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, திமுக எம்பி கனிமொழி ஆகியோரை சந்தித்து பேசியுள்ளனர்.

மேலும் அதிமுகவைச் சேர்ந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை சந்திக்க உள்ள னர். இன்று காலை மத்திய நிதி அமைச்சரையும் சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளனர்.

இன்றைய சந்திப்பில் மாநில அந்தஸ்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும், ஏனாம் பகுதியைச் சேர்ந்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பங்கேற்கவில்லை.

மாநில அந்தஸ்து அளித்தால் மாஹே, ஏனாம் ஆகிய பிராந் தியங்கள் அங்குள்ள கேரளம், ஆந்திரத்துடன் இணைய வாய்ப் புள்ளதால் அங்குள்ள மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் ஏனாம் பகுதிக்கு உட்பட்ட அமைச்சர் இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை. அதேபோல் மாஹே பகுதியைச் சேர்ந்த சுயேட்சை எம்எல்ஏ ராமச்சந்திரனும் டெல்லி செல்லவில்லை.

மேலும், இந்த சந்திப்பில் காங் கிரஸ் எம்எல்ஏக்கள் ஜெயமூர்த்தி, எம்.என்.ஆர்.பாலன் ஆகியோரும் டெல்லி செல்லவில்லை.

இதுபற்றி எம்எல்ஏ பாலனிடம் கேட்டதற்கு, “வாரிய கூட்டம் இருப்ப தால் டெல்லி செல்லவில்லை” என்று குறிப்பிட்டார்.

அதுபோல் சட்டப்பேரவையில் மாநில அந்தஸ்துக்கு ஆதரவு தெரிவித்த என்.ஆர்.காங்கிரஸ் தரப்பு எம்எல்ஏக்களும் டெல்லி செல்லவில்லை.

இதுபற்றி அக்கட்சி எம்எல்ஏக்களிடம் கேட்டதற்கு, “பிரதமர் வெளிநாட்டு பயணத்தில் உள்ளார். டெல்லிக்கு தற்போது சென்றாலும் பிரதமரை சந்தித்து மாநில அந்தஸ்து கேட்டு வலியுறுத்த இயலாது. என்.ஆர்.காங்கிரசின் கொள்கை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதுதான். எனவே பிரதமர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பியவுடன் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சார்பில் தனியாக சென்று சந்தித்து வலியுறுத்துவோம்” என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x