Published : 23 Jul 2018 08:22 AM
Last Updated : 23 Jul 2018 08:22 AM

வேலூர் சிஎஸ்ஐ தேவாலய தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல்: கைத்துப்பாக்கி, வீச்சரிவாள்கள் பறிமுதல்

வேலூர் சிஎஸ்ஐ மத்திய ஆலயத்தில் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரில் கைத்துப்பாக்கி மற்றும் வீச்சரிவாள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, 10 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

வேலூர் அண்ணா சாலையில் சிஎஸ்ஐ மத்திய தேவாலயம் உள்ளது. இங்கு, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் முக்கிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், சிஎஸ்ஐ மத்திய ஆலயத்துக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கான ஆலோசனைக் கூட்டம் சிஎஸ்ஐ மத்திய ஆலயத்தில் நேற்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயர் சத்தியராஜ் தலைமை வகித்தார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு தேர்தல் தொடர்பான கருத்துகளைத் தெரிவித்தனர். அப்போது, காட்பாடியைச் சேர்ந்த தேவா (35) என்பவருக்கும், வேலூரைச் சேர்ந்த இஸ்ரவேல் (45) என்பவருக்கும் இடையே வரவு - செலவு கணக்கு தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டு மோதலாக உருவெடுத்தது.

அப்போது, ஆவேசமடைந்த சிலர் பரஸ்பரம் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். பின்னர், அங்குள்ள நாற்காலிகளை தூக்கி வீசினர். இதையடுத்து பிரார்த்தனைக்காக வந்தவர்கள் தேவாலயத்தில் இருந்து வெளியேறினர். நாற்காலிகளை வீசிக் கொண்டதில் ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டது.

தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர், பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர சிஎஸ்ஐ ஆலயத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர்.

இதற்கிடையில், சிஎஸ்ஐ ஆலயத்தில் நிறுத்தப்பட்டிருந்த தேவாவின் காரில் சோதனை நடத்திய போலீஸார், அதில் இருந்து ஒரு கைத்துப்பாக்கி, 2 வீச்சரிவாள்களைப் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, தேவா உட்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x