Published : 21 Jul 2018 03:33 PM
Last Updated : 21 Jul 2018 03:33 PM

விளையாட்டு மோதல் விபரீதமானது; ரெஸ்லிங் பாணியில் தூக்கி வீசியதில் சக நண்பன் மயக்கம்: உயிரிழந்ததாக எண்ணி மாணவர் தற்கொலை

கயத்தாறில் தனியார் பள்ளி ஒன்றில் சக நண்பர்களிடையே ஏற்பட்ட விளையாட்டுச் சண்டையில் ரெஸ்லிங் பாணியில் சக நண்பரைத் தூக்கி வீசியதில் மாணவர் மயங்கி விழ, தான் நண்பனைக் கொன்று விட்டதாக எண்ணி மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.

டபிள்யூ டபிள்யூ இ, ரா, ஸ்மாக்டவுன் என மல்யுத்தத்தில் நவீன முறை சண்டைக் காட்சிகள் தொலைக்காட்சிகளில் பிரபலமாகி வருகின்றன. ரசிகர்களை ஏமாற்றி பயிற்சி பெற்ற சண்டைக்காரர்களால் உண்மைபோன்று நடத்தப்படும் காட்சிகளை நம்பி கோடிக்கணக்கான ரூபாயை ரசிகர்கள் அள்ளிக் கொட்டுகிறார்கள்.

தொலைக்காட்சிகளிலும் இந்தக் காட்சி கோடிக்கணக்கான மக்களால் பார்க்கப்படுகிறது. இந்தக் காட்சிகளை யாரும் வீட்டிலோ , பள்ளியிலோ எங்கும் முயன்று பார்க்க வேண்டாம் என்று சிறிய அளவில் குறிப்பு போடுவார்கள். ஆனால் மாணவர்கள் தங்களிடையே ஏற்படும் சண்டைகளில் இது போன்ற முறைகளைப் பயன்படுத்துவதால் விபரீதம் நடக்கிறது.

தூத்துக்குடியில் சாதாரண வாய் வார்த்தைச் சண்டையில் இதுபோன்று ஒரு மாணவர் முயற்சி செய்ய, அது உயிரிழக்கும் விபரீதத்தில் போய் முடிந்தது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கடந்த 16-ம் தேதி 10-ம் வகுப்பு மாணவர்கள் இடையே நடந்த சம்பவம் மாணவர் ஒருவரின் உயிரிழப்பில் முடிந்தது.

வகுப்பு மாணவர்களுக்கிடையே மோதல் நடந்துள்ளது. இக்காட்சி பள்ளி அறையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் மோதலில் ஈடுபடும் மாணவர்களிடையே ஒரு மாணவரை வலுவாக இருக்கும் இன்னொரு மாணவர் கழுத்தைப் பிடித்து அழுத்தும் காட்சியும்,  இதனால் வெகுண்டெழுந்த மாணவர் அந்த மாணவரை திரும்பத் தாக்குகிறார். இதனால் கோபமடைந்த அந்த மாணவர் தன்னைத் தாக்கும் மாணவரை ரெஸ்லிங் பாணியில் தனது தோளுக்கு மேல் தூக்கி தரையில் ஓங்கி அடிக்கிறார்.

இதில் அருகில் உள்ள பெஞ்சில் தலை மோதியதாலும், தரையில் வேகமாக அடிக்கப்பட்டதாலும் மாணவர் மயக்கமானார். இதைப்பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து அந்த மாணவரை சோதித்தனர்.மயக்கத்தில் இருந்த மாணவர் இறந்து விட்டதாகக் கருதி, அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவன் உயிரிழக்கவில்லை அதிர்ச்சியில் மயக்கமாகி உள்ளார் எனத் தெரிய வந்தது. சிகிச்சைக்குப் பின் மாணவர் மயக்கம் தெளிந்தார்.

இதனிடையே, மாணவரை மற்ற மாணவர்கள் தூக்கிச் செல்லும்போது எவ்வித ரியாக்‌ஷனும் காட்டாத, தாக்குதல் நடத்திய மாணவர் அனைவரும் வகுப்பறையை விட்டு வெளியே சென்ற பின்னர் வகுப்பை விட்டு வெளியேறிய காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

அவ்வாறு வெளியேறிய மாணவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. அவர் வீட்டுக்குத் திரும்பாததால் மாணவர் பயந்துபோய் எங்காவது சென்றுவிட்டாரோ என்று அவரது வீட்டில் உள்ளவர்கள் தேடினர். ஆனால் அதிர்ச்சியூட்டும் விஷயமாக அந்த மாணவர் பள்ளியின் அருகில் உள்ள கிணற்றில் பிணமாக மிதப்பது தெரியவந்தது.

இது குறித்த தகவலின் பேரில் போலீஸார் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தன்னால் தாக்கப்பட்ட நண்பன் இறந்து போனதாக நினைத்து சிறைக்குச் செல்லவேண்டுமே என பயந்துபோய் அந்த மாணவன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.

மாணவனைக் கொலை செய்து கிணற்றில் வீசியுள்ளனர் என்று அவரது உறவினர்கள் புகார் அளித்ததால் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே உண்மை தெரியவரும் . இதனிடையே மாணவர் உயிரிழப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

சாதாரண விளையாட்டில் நடந்த தாக்குதல் உயிரையே பறிக்கும் அளவுக்கு விபரீதமாகியுள்ளது. பள்ளியில் இதுபோன்ற சம்பவம் நடந்த போது ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் எங்கே போனார்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்தும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

'காஷ்மோரா' படத்தில் நடிக்க விரும்பினேன்: விஜய் சேதுபதி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x