Last Updated : 20 Jul, 2018 05:04 PM

 

Published : 20 Jul 2018 05:04 PM
Last Updated : 20 Jul 2018 05:04 PM

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன் கூட்டியே முடித்தது ஏன்?- கிரண்பேடி கேள்வி

சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்தது ஏன் என்று மக்களுக்கு தெரிவிக்கும் கடமை உள்ளதாக வாட்ஸ் அப்பில் ஆளுநர் கிரண்பேடி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரை வரும் 27-ம் தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் சட்டப்பேரவையில் ஆட்சியாளர்களுக்கான அதிகாரம் குறித்து விவாதம் எழுந்தபோது, டெல்லி சென்று அமைச்சரவைக்கே அதிகாரம் கிடைக்கச் செய்யும் வகையில் குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து வலியுறுத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

இதனால் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 19-ம் தேதி முடிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக சட்டப்பேரவையில் விவாதமும் நடைபெற்றது. அதேசமயம் பட்ஜெட் நிதி ஒதுக்கலுக்கு ஆளுநர் கிரண்பேடியின் ஒப்புதல் பெற்று, சட்டப்பேரவையில் வைத்து நிறைவேற்ற வேண்டும். அதன்பிறகுதான் பட்ஜெட் நிதியை அரசு எடுத்து செலவு செய்ய முடியும் என்பதால் ஆளுநர் கிரண்பேடியின் அனுமதிக்காக செயலர் மூலம் ராஜ்நிவாஸுக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்காததால், பட்ஜெட் நிறைவேற்றப்படாமலேயே பட்ஜெட் கூட்டத்தொடர் காலவரையரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

இத்தகவலை சபாநாயகர் வைத்திலிங்கம் பேரவையில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி கடும் விமர்சனம் தெரிவித்திருந்தார்.

இதற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதில் அளிக்கும் வகையில் வாட்ஸ் அப்பில் பதிவு செய்துள்ள கருத்தில், ''ஜூலை 26-ம் தேதி வரை சட்டப்பேரவையை நடத்த அனுமதி பெற்றிருந்தனர். தற்போது எதற்காக 19-ம் தேதியே சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடித்துள்ளனர்? எதற்கு முன்கூட்டியே சட்டப்பேரவையை முடித்தார்கள் என்பதை மக்களுக்கு சொல்ல கடமைப்பட்டிருக்கின்றனர். ஏன் சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்தீர்கள் என மக்களும் கேட்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x