Published : 20 Jul 2018 01:59 PM
Last Updated : 20 Jul 2018 01:59 PM

நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு; பாஜகவிடம் மண்டியிட்டு ஆதரிக்க வேண்டிய அவலநிலை: திருநாவுக்கரசர் சாடல்

மத்திய பாஜக அரசை எதிர்த்து கடுகளவு எதிர்ப்பையும் காட்ட அதிமுகவுக்கு துணிவில்லை என்பதையே நம்பிக்கையில்லாத் தீர்மான எதிர்ப்பு முடிவு காட்டுகிறது என, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் சாடியுள்ளார்.

இதுதொடர்பாக திருநாவுக்கரசர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “கடந்த தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நான்காண்டுகளில் மத்திய பாஜக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்படவில்லை என்பதை வலியுறுத்துகிற வகையில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளன.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெறுமா ? வெற்றி பெறாதா என்பதை விட நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்படுகிற குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகப் பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த விவாதத்தின் மூலம் பாஜக அரசுக்கு எதிராக மக்களிடையே நிலவுகிற எதிர்ப்பு கொதிநிலையை வெளிப்படுத்துவதற்கு அரிய வாய்ப்பாக இதை காங்கிரஸ் கட்சி கருதுகிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நேரத்தில் முழங்கினார். ஆனால் இந்தியத் தொழிலாளர் பணியக புள்ளிவிவரத்தின்படி 12 லட்சம் பேருக்கு தான் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மோடி கொடுத்த வாக்குறுதியோ 8 கோடி பேருக்கு நான்கு ஆண்டுகளில் வேலை வாய்ப்பு. ஆனால் வழங்கப்பட்டதோ 12 லட்சம் பேருக்குத் தான். வாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் மோடியைப் பார்த்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப அரிய வாய்ப்பு இன்றைக்கு கிடைத்திருக்கிறது. இதை அதிமுக பயன்படுத்த தயங்குவது ஏன்?

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடியை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடுமையாக விமர்சனம் செய்துதான் 37 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. அதை இன்றைய தலைமை மறந்தது ஏன்?

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தெலுங்கு தேசம் கொண்டு வருவதால் ஆதரிக்க முடியாது என்று கூறுகிற அதிமுக, தமிழ்நாட்டு உரிமைகளைப் பறித்து வருகிற பாஜகவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மற்ற எதிர்க்கட்சிகளைப் போல முன்மொழிந்திருக்கலாமே? ஏன் முன்மொழியவில்லை? ஏனிந்த தடுமாற்றம்?

மத்திய பாஜக அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்டிருக்கிற நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்ப்போம் என 37 மக்களவை உறுப்பினர்களைப் பெற்றிருக்கிற அதிமுக முடிவு செய்திருப்பது மிகுந்த துரதிர்ஷ்டவசமானது. ஆனால் பாஜகவை எதிர்க்கிற துணிவை அதிமுக இழந்து விட்டது என்பதை அனைவரும் அறிவார்கள்.

மத்திய பாஜக அரசால் தமிழ்நாடு பல முனைகளில் வஞ்சிக்கப்பட்டு வருவதை எவரும் மறுக்க முடியாது. தமிழக அரசின் சார்பாக 2015 டிசம்பர் வெள்ளம், 2016 வார்தா புயல், 2017 வறட்சி மற்றும் ஒக்கி புயல் பாதிப்புகளுக்காக மத்திய அரசிடம் கேட்ட நிவாரணத் தொகை ரூபாய் 97 ஆயிரத்து 350 கோடி. ஆனால் மத்திய அரசு மனமுவந்து அளித்தது ரூபாய் 2 ஆயிரத்து 395 கோடி. கேட்டது மலையளவு, வழங்கியது கடுகளவு. தமிழகம் இந்தளவுக்கு வஞ்சிக்கப்பட்டது குறித்து அதிமுக தலைமை கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

அதேபோல, தமிழகத்தைப் பாதிக்கிற நீட் தேர்விலிருந்து விலக்கு, 15-வது நிதிக்குழுவினால் ஏற்படுகிற பாதிப்புகள், மக்கள் மீது திணிக்கப்படுகிற 8 வழிச் சாலை, பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைத்துவிட்டு உயர்கல்வி ஆணையத்தை அமைப்பது என பல்வேறு பிரச்சினைகளில் மத்திய அரசுக்கு எதிராகக் குரல் எழுப்ப அதிமுக தயாராக இல்லை.

இந்தியாவிலேயே ஊழல் நிறைந்த மாநிலம் தமிழகம்தான் என்று பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா கூறியதை எதிர்த்து முணுமுணுக்கக் கூட அதிமுக முன்வரவில்லை. மாறாக மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட தவறு என்று பாஜக கூறாததை அதிமுக கூறி சப்பைக்கட்டு கட்ட வேண்டிய அவலநிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் சரியான மொழிபெயர்ப்பு என்று மொழி பெயர்த்தவரே கூறிவிட்டார். அமித் ஷாவின் கூற்று உண்மை நிலையைப் படம் பிடித்துக் காட்டுவதாக இருந்தாலும் அதைக் கூறிய பாஜகவை எதிர்க்கிற துணிவு அதிமுகவிடம் இல்லாமல் போனது ஏன்?

எதற்கெடுத்தாலும் ஏவுகணையை ஏவுகிற அமைச்சர் ஜெயக்குமார் இதில் ஓடி ஒளிந்தது ஏன்? மத்திய பாஜக அரசை எதிர்த்து கடுகளவு எதிர்ப்பையும் காட்ட அதிமுகவுக்கு துணிவில்லை என்பதையே நம்பிக்கையில்லாத் தீர்மான எதிர்ப்பு முடிவு காட்டுகிறது.

சமீபகாலமாக தமிழகத்தில் நடைபெற்று வருகிற வருமானவரிச் சோதனைகளில் கொத்து கொத்தாக, மூட்டை மூட்டையாக வாகனம் உள்ளிட்ட இடங்களில் மறைத்து வைக்கப்பட்ட ரூபாய் 180 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. 100 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட அரசு ஒப்பந்தக்காரர்கள் அதிமுக தலைமைக்கு மட்டுமல்ல, முதல்வருக்கும் உறவினர்களாக இருப்பதால் பாஜகவை எதிர்க்கிற துணிவை எதிர்பார்க்க முடியாது.

மடியில் கனம் இருப்பதால் பாஜகவிடம் மண்டியிட்டு ஆதரிக்க வேண்டிய அவலநிலை அதிமுகவுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதைவிட அவமானம் வேறு எதுவும் இருக்க முடியாது. எனவே, தமிழக நலன்களைப் பறிக்கிற மத்திய பாஜக அரசையும், அதை தட்டிக் கேட்காத அதிமுக அரசையும் தமிழக மக்கள் புரிந்து கொண்டு உரிய பாடம் புகட்ட வேண்டிய காலம் நெருங்கி விட்டது” என திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x