Published : 20 Jul 2018 01:54 PM
Last Updated : 20 Jul 2018 01:54 PM

சத்துணவுப் பணியாளரை மாற்றக் கோரி மிரட்டல்; ஆதிக்க சாதியினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தேவை: கே.பாலகிருஷ்ணன்

அவினாசி சத்துணவு சமையலர் பாப்பம்மாளை பணி செய்யவிடாமல் தடுத்து இடமாறுதல் செய்ய வைத்த ஆதிக்க சாதியினர் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள குட்டகம், திருமலைக் கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த பாப்பம்மாள் சத்துணவு சமையலராக சமீபத்தில் மாற்றலாகி வந்துள்ளார்.

இவர் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவ்வூரைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர், இவர் சமைத்து எங்களது குழந்தைகள் சாப்பிடக் கூடாது என அவமானப்படுத்தி, இவரைப் பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி, சமையலறையையும், பள்ளியையும் பூட்டி அங்கிருந்த ஆசிரியர்கள், ஊழியர்களையும் மிரட்டியுள்ளனர்.

மாணவர்களையும் பள்ளிக்குச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதையடுத்து மாவட்டக் கல்வி அதிகாரிகள் மற்றும் அவிநாசி பி.டி.ஓ. ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் பாப்பம்மாள் ஏற்கெனவே பணிபுரிந்து வந்த ஒச்சாம்பாளையம் பள்ளிக்கு அவரைப் பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளனர். ஆதிக்க சாதியினர் மற்றும் அதிகாரிகளின் இச்செயல் கண்டிக்கத்தக்கது. 

12 வருடங்களுக்கு முன்னால் பாப்பம்மாள் சமையலராக முதன்முதலில் இப்பள்ளியில் பணியில் சேர்ந்த போதும் இவ்வூரைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் இவரைப் பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். பிறகு கந்தாபாளையம் என்ற பள்ளிக்கு மாற்றிய போதும் அங்கும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ஒரே மாதத்தில் 3 இடங்களுக்குச் சென்று கடைசியாக ஒச்சாம்பாளையம் பள்ளிக்கு மாறுதல் ஆகி 12 வருடங்களாக பணியாற்றி வருகிறார். தற்போது சொந்த ஊரான திருமலைக் கவுண்டம்பாளையம் பள்ளியில் சமையலர் பணியிடம் காலியாக இருப்பதை அறிந்து மாறுதல் வாங்கிப் பணியில் சேர்ந்த போது வேண்டுமென்றே ஆதிக்க சாதியினர் திட்டமிட்டு இவரைப் பணி செய்யவிடாமல் தீண்டாமை வன்கொடுமைச் செயலைப் புரிந்துள்ளனர்.

எனவே, பாப்பம்மாளை பணி செய்யவிடாமல் தடுத்து, பள்ளியையும் பூட்டி மிரட்டிய அவ்வூரைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் மீது தமிழக அரசு உடனடியாக எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவர்களுக்கு உறுதுணையாக இருந்த அரசு அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாப்பம்மாள் தொடர்ந்து திருமலைக் கவுண்டம்பாளையம் பள்ளியிலேயே பணிபுரிய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

நவீன காலத்திலும் தலித் மக்களுக்கு இழைக்கப்படும் இத்தகைய தீண்டாமை கொடுமை தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள தலைக்குனிவாகும். இந்தக் கொடுமையை எதிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க முன்வர வேண்டும்'' என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x