Published : 20 Jul 2018 12:06 PM
Last Updated : 20 Jul 2018 12:06 PM

மேட்டூர் நீர்மட்டம் 112 அடியாக உயர்வு: அணையிலிருந்து 20,000 கன அடி நீர் திறப்பு

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர்ன் அளவு விநாடிக்கு 20,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை மொத்தம் 120 அடி கொள்ளளவு கொண்டது. அணை கடந்த 5 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது 100 அடியைக் கடந்துள்ளது. செவ்வாய்கிழமை காலை விநாடிக்கு 1,07,064 கனஅடியாக இருந்த நீர்வரத்து, புதன்கிழமை காலை விநாடிக்கு 1,04,436 கனஅடியாக குறைந்தது.

புதன்கிழமை இரவு அணை நீர்மட்டம் 105 அடியை எட்டியது. அணையின் நீர் இருப்பு 71 டிஎம்சி-யாக அதிகரித்தது. அணை பகுதிகளில் ஏற்கெனவே, மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓரிரு நாளில் அணை முழுக்கொள்ளளவை எட்டவுள்ள நிலையில், அணையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள காவிரி கரையோரப் பகுதி கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காவிரி டெல்டா பாசனத்துக்காக ஜூலை 19-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி, பாசனத்துக்காக வியாழக்கிழமை காலை முதல்வர் பழனிசாமி மேட்டூர் அணையை திறந்து வைத்தார். முதற்கட்டமாக விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டுள்ள நிலையில், படிப்படியாக நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு இரவு 10 மணி அளவில் விநாடிக்கு 20,000 கன அடியாக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.04 அடியாகவும், நீர் இருப்பு 81.33 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1,01,277 கனஅடியிலிருந்து 59954 கன அடியாக குறைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x