Published : 17 Jul 2018 07:35 PM
Last Updated : 17 Jul 2018 07:35 PM

12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; குற்றவாளிகளை சரமாரியாகத் தாக்கிய வழக்கறிஞர்கள்: வழக்கில் ஆஜராக மாட்டோம் என உறுதி

அயனாவரத்தில் 12 வயது சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்கள் மீது சரமாரித் தாக்குதல் நடத்தப்பட்டது. குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபர் ஷிவாங்கி. இவரது 12 வயது மகள் மாற்றுத்திறனாளி. 7-ம் வகுப்பு படித்து வரும் அச்சிறுமியை கடந்த 7 மாத காலமாக, அவர் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் பணிபுரிந்து வரும் பாதுகாவலர்கள், லிப்ட் ஆபரேட்டர்கள், பிளம்பர், எலக்ட்ரீசியன் உள்ளிட்டோர் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

குடியிருப்பில் விசாரணை நடத்திய போலீஸார் சிறுமி அடையாளம் காட்டிய 18 பேரை நேற்றிரவு கைது செய்தனர். பின்னர் அவர்கள் மீது கொலை மிரட்டல், போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்து கைது செய்தனர்.

தமிழகம் தாண்டி இந்தியா முழுவதும் உலுக்கியுள்ள இந்த சம்பவத்தில் கைதான 18 பேரையும் உயர் நீதிமன்ற கூடுதல் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த போலீஸார் அழைத்து வந்தனர். அவர்களை வரும் 31-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டப்பின் வெளியே அழைத்து வரப்பட்ட அவர்களை உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சிலர் தாக்கினர். கை, கால்,முகம், முதுகு என சரமாரியாகத் தாக்கப்பட்ட அவர்கள் அலறினார்கள். அவர்களை தாக்குதல் நடத்தும் வழக்கறிஞர்களிடமிருந்து காப்பாற்ற போலீஸார் போராடி மீட்டனர். நீதிமன்றத்தில் நடந்த தாக்குதலால் அந்த இடமே பரபரப்பாக காணப்பட்டது.

குற்றவாளிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து வழக்கறிஞர் சங்கத்தலைவர் மோகனகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''12 வயது சிறுமிக்கு கடந்த பல மாதங்களாக இந்தக் கொடுமை நடந்துள்ளது. அந்த சிறுமி காது கேட்காத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. அவருக்கு இத்தகைய கொடுமை பல மாதங்களாக தொடர்ந்து நடந்துள்ளது.

இந்த வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பாலியல் குற்றத்துக்கு எதிராகவும், சிறுமிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தும் வழக்கறிஞர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்கள்.

கொடூர குற்றச்செயலில் ஈடுபட்ட அந்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாட மாட்டோம் என்று ஒட்டுமொத்த வழக்கறிஞர்களும் முடிவு செய்துள்ளோம். இந்த முடிவை அனைத்து வழக்கறிஞர் சங்கங்களுக்கும், அனைத்து நீதிமன்றங்களுக்கு இந்த முடிவு எழுத்துப்பூர்வமாக வழங்கப்படும்'' என்று மோகனகிருஷ்ணன் தெரிவித்தார்.

வழக்கறிஞர்கள் தாக்குதலிலிருந்து குற்றவாளிகளை பாதுகாப்பாக அழைத்துச்செல்ல இணை ஆணையர் அன்பு தலைமையில் போலீஸார் வரவழைக்கப்பட்டு புழல் சிறைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x