Published : 17 Jul 2018 04:44 PM
Last Updated : 17 Jul 2018 04:44 PM

தனது உறவினர், நெருக்கமானவர்கள் வீட்டில் நடக்கும் ரெய்டு குறித்து வாய் திறக்காதது ஏன்?- முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் கேள்வி

தன்னுடைய பினாமி வீட்டில் நடைபெற்று வரும் ரெய்டு குறித்தும், கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான பணம் குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாய் திறக்காமல் மெளனியாக இருப்பது ஏன்? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் எடப்பாடி பழனிசாமியின்  நட்சத்திர ஒப்பந்ததாரர், நெடுஞ்சாலைத்துறையில் மிகவும் ஆழமாகத் தடம் பதித்துள்ள நாகராஜன் - செய்யாதுரையின் அனைத்து நிறுவன அலுவலகங்கள், வீடுகள், உறவினர்களின் வீடுகள் எல்லாவற்றிலும் அதிரடியாக வருமான வரித்துறை சோதனை இரண்டு நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இரவு, பகலாக நடைபெறும் அந்த வருமான வரிச்சோதனை பற்றி நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. “கான்டிராக்டர், உறவினர் வீடுகளில் 120 கோடி ரூபாய் ரொக்கம், 100 கிலோ தங்கம் சிக்கியது. கார்களில் கோடி கோடியாக பணம் பதுக்கி வைத்தது அம்பலம்” என்று தனியார் தமிழ் "நாளிதழ் தலைப்புச் செய்தி வெளியிட்டிருக்கிறது.

“இரு கார்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கோடி ரூபாயையும் சேர்த்து 150 கோடி ரூபாயும், 100 கிலோவிற்கும் மேற்பட்ட தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்” எஸ்.பி.கே ஸ்பின்னர்ஸ் பிரைவேட் லிமிடெட், எஸ்.பி.கே ஹோட்டல்ஸ், எஸ்.பி.கே அன்ட் கோ எக்ஸ்பிரஸ்வே பிரைவேட் லிமிடெட், ஸ்ரீ பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டது” என்றும் வருமான வரித்துறையில் உள்ள “சோர்ஸ்” அடிப்படையில் “இந்து ஆங்கில நாளிதழ்” முதல் பக்கத்திலேயே அம்பலப்படுத்தியிருக்கிறது.

“நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை. 110 கோடி ரொக்கம், 100 கிலோ தங்கம் பறிமுதல்” என்றும், “விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரரான செய்யாத்துரை தமிழக அளவில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப்புள்ளிகளை எடுத்து, சாலைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்” என்று தனியார் தமிழ் நாளிதழின் முதல் பக்கச் செய்தி கூறுகிறது.

“120 கோடி ரூபாய் பறிமுதல்” என்று செய்தி வெளியிட்டிருக்கும் தனியார் தமிழ் நாளிதழ், “எஸ்.பி.கே. நிறுவனத்துடன் தொடர்புடைய ஜோன்ஸ் என்பவரது வீட்டில் இருந்து 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தீபக் என்பவரின் காரில் 28 கோடி ரூபாயும், ஜோன்ஸ் என்பவரின் காரில் 25 கோடி ரூபாயும், ரவிச்சந்திரன் காரிலிருந்து 24 கோடி ரூபாயும் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. எஸ்.பி.கே நிறுவனத்துக்கும் மாநில அரசின் அதிகார மையத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் இந்த சோதனை மேலும் தீவிரமடையும்” என்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

“நெடுஞ்சாலைத்துறையில் 7,940 கோடி ரூபாய் டெண்டர் எடுத்த கான்டிராக்டர் வீடு, ஆபிசில் ஐ.டி. ரெய்டு. 180 கோடி ரொக்கம், 150 கிலோ தங்கம் பறிமுதல். இரண்டு மூத்த அமைச்சர்களுக்கு தொடர்பு” என்று மற்றொரு தனியார் தமிழ் நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி - உள்பட இன்றைய நாளேடுகளில் வெளிவந்துள்ள வருமான வரித்துறை ரெய்டு பற்றிய தகவல்கள் ஆச்சரியமூட்டுவதாகவும், அதிர்ச்சியளிப்பதாகவும் இருக்கின்றன.

அதிமுகவின் “டெண்டர் ராஜ்யம்” எப்படி ஊழல் சாயம் பூசப்பட்ட கோரமுகத்துடன் உலா வருகிறது என்பதை எல்லோர்க்கும் உரைத்திடும் விதத்தில் அமைந்திருக்கிறது. முதல்வரின் “பினாமி”யாக இருக்கும் ஒரு ஒப்பந்ததாரர், அதே முதல்வரின் சம்பந்தியுடன் கைகோத்துக்கொண்டு தமிழ்நாட்டில் ஊழல் கொண்டாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை வருமான வரித்துறை சோதனை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது.

இவ்வளவு தகவல்கள் வெளிவந்த பிறகும் முதல்வர் வாய்மூடி மௌனியாக அமைதி காக்கிறார்; நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் கட்டுக் கட்டாகப் பறிமுதல் செய்யப்பட்ட பிறகும் எவ்வித பதிலும் சொல்லாமல் பாராமுகமாக விரதம் இருக்கிறார்.

வருமான வரித்துறை சோதனை மேலும் தீவிரமடையும் இந்த நேரத்தில் கூட, மாநில மக்கள் என்ன நினைத்தால் எனக்கென்ன என்று வாயே திறக்காமல், முதல்வர் கனத்த அமைதி காப்பதைப் பார்க்கும் போது “ஊழல் ராஜ்யம்” பற்றி மக்களுக்குப் பதில் சொல்ல முதல்வரிடம் ஏதுமில்லை என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது.

ஒரு முதல்வரே உறவினர்களை வைத்து டெண்டர் எடுப்பது “பொது வாழ்வில்” தூய்மை என்ற கோட்பாட்டின் குரல் வளையை நெறித்திருக்கிறது. அதுவும் தனது துறையிலேயே ஆயிரம் கோடி மதிப்புள்ள டெண்டர்களை எடுக்க வைத்து “கமிஷன்” பார்ப்பது தமிழ்நாட்டின் வரலாற்றில் அதிமுக ஆட்சியால் உருவாக்கப்பட்டுள்ள மிக மோசமான கருப்பு அத்தியாயமாக அமைந்துள்ளது.

தனது சம்பந்தி பங்குதாரராக உள்ள நிறுவனங்களுக்கு டெண்டர் கொடுத்ததன் மூலம் “அரசியல் சட்டப்படி செயல்படுவேனே தவிர யாருக்கும் சாதகமாகச் செயல்பட மாட்டேன்” என்று முதல்வராகப் பொறுப்பேற்ற போது எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாண உறுதிமொழியை சுக்கு நூறாக உடைத்து நொறுக்கி விட்டார்.

ஊழலுக்கு விளக்கம் அளிக்கவும் முன்வராமல், தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்யவும் முன் வராமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி “மௌனியாக” இருப்பது தமிழ்நாட்டிற்கு இழிவையும் பெருத்த தலைகுனிவையும் தந்திருக்கிறது. ஆகவே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு சுதந்திரமான விசாரணைக்கு நியாயமான வழி விட வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன்.

நாகராஜன்- செய்யாதுரை மற்றும் முதல்வரின் சம்பந்தி உள்ளிட்டோரின் நெடுஞ்சாலைத்துறை டெண்டர்கள் அனைத்தையும் உடனடியாக ரத்து செய்து விட்டு, மறு டெண்டர் கோர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த டெண்டர்களில் கைமாறிய "கமிஷன்" குறித்து விரிவாக விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்குத் தாமதமின்றி உத்தரவிட வேண்டும்’’ என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x