Published : 17 Jul 2018 09:27 AM
Last Updated : 17 Jul 2018 09:27 AM

8 வழிச் சாலை திட்டத்தை ஆதரிக்கும் ரஜினிக்கு மக்களின் பிரச்சினை தெரியவில்லை:  அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை - சேலம் 8 வழிச் சாலை திட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் ரஜினிக்கு மக்களின் பிரச்சினை பற்றி தெரியவில்லை என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமகவின் 30-வது ஆண்டு தொடக்க விழா, சென்னை தி.நகர் பர்கிட் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநில துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி தலைமையில் நடந்த விழாவில் கட்சிக் கொடியை பாமக  நிறுவனர் ராமதாஸ் ஏற்றிவைத்தார். கட்சித் தலைவர் ஜி.கே.மணி, இளைஞர் அணித் தலைவரும் தருமபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி கூறியதாவது:

சமூக நீதிக்காகவும், அடித்தட்டு மக்களின் பொருளாதார முன்னேற் றத்துக்காகவும் தொடங்கப்பட்ட கட்சி பாமக. தமிழகத்தில் எந்தப் பிர்ச்சினை வந்தாலும் முதலில் குரல் கொடுப்பது பாமக. வரும் காலத்தில் பாமக ஆட்சியைப் பிடிக்கும். நேர்மையான, ஊழலற்ற ஆட்சியை எங்களால் மட்டுமே கொடுக்க முடியும்.

மதுரையில் 2008-09-ம் ஆண்டு 100 ஏக்கர் நிலப்பரப்பில் முதல்தவணையாக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்து எய்ம்ஸுக்கு நாங்கள்தான் அடிக்கல் நாட்டினோம். பின்னர் ரூ.1,000 கோடி நிதிஒதுக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், எங்களுக்குப் பிறகு வந்தவர்கள் திட்டத்தை செயல்படுத்தவில்லை.

மக்களவை, சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் வந்தாலும், தனித்தனியாக வந்தாலும் கூட்டணி உள்ளிட்ட அரசியல் முடிவுகளை தேர்தல் நெருக்கத்தில் எடுப்போம்.

பசுமை வழிச் சாலை திட் டம் குறித்து காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம் மாவட்ட மக்களிடம் கருத்து கேட்டேன். அப்போது ஒருவர்கூட இத்திட்டம் வேண்டும் என்று சொல்லவில்லை. அந்த அறிக்கை மத்திய,மாநில அரசுகளிடம் கொடுக்கப் படும். 8 வழிச்சாலை திட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்திருக்கிறார். சினிமாக்காரர்கள் குறுகிய வட்டத்தில் இருக்கின்றனர். எது உண்மை, எது அரசியல், மக்களின் பிரச்சினைகள் பற்றியெல்லாம் அவர்களுக்கு தெரியவில்லை. மக்களை சந்திக்காமல், யாரோ சொல்வதைக் கேட்டு ரஜினி இப்படி சொல்கிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x