Published : 17 Jul 2018 09:21 AM
Last Updated : 17 Jul 2018 09:21 AM

தமிழகத்தில் நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளும் எஸ்பிகே நிறுவனங்களில் ரூ.120 கோடி, 100 கிலோ தங்கம் பறிமுதல்

தமிழகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வரும் எஸ்பிகே கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான வீடு, அலுவலகம், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட 30 இடங்களில் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரி அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

சென்னை, மதுரை, அருப்புக் கோட்டை அருகே நடந்த இந்த சோதனைகளில் ரூ.120 கோடி ரொக்கம், 100 கிலோ தங்கம்  மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கீழ்முடி மன்னார் கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் செய்யாதுரை. இவர் தொடக்கத்தில் தோல் வியாபாரம் செய்து வந்தவர், பின்னர் ஒப்பந்ததாரராக மாறினார். படிப்படியாக வளர்ந்தவர், எஸ்.பி.கே. கன்ஸ்ட்ரக்‌ஷன் என்ற பெயரில் கட்டுமான நிறுவனத்தை தொடங்கினார். மாநிலத்தின் முக்கிய ஒப்பந்ததாரர்கள் பட்டிய லில் செய்யாதுரைக்கு முக்கிய இடம் உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னைக்கு குடிபெயர்ந் தார். எப்போதாவது கிராமத்துக்கு வந்து செல்வார்.

செய்யாதுரையின் மகன்கள் 2 பேர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் வசிக்கின்றனர். கிரஷர், நூற்பாலை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்யாதுரை குடும்பத்தினர், உறவினர்கள் செய்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைகளை 5 ஆண்டு களுக்கு பராமரிப்பு செய்வதற்காக சுமார் ரூ.620 கோடியில் ஒப்பந்தம் எடுத்துள்ளதாகவும் இதேபோல் ராமநாதபுரம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மதுரை ரிங் ரோட்டை நான்கு வழிச் சாலையாக மாற்றும் ரூ.200 கோடி மதிப்பிலான பணிகளை செய்யாதுரை நிறுவனமே செய்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவல்களின்பேரில் செய்யா துரைக்குச் சொந்தமான சென்னை யில்  5-க்கும் மேற்பட்ட இடங்கள் மற்றும் மதுரை, அருப்புக்கோட்டை பாளையம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்கள், ஹோட்டல்கள் என 30 இடங்களில் நேற்று அதிகாலை முதல் வருமான வரி அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் உள்ள அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.120 கோடி ரொக்கம், 100 கிலோ தங்கம் மற்றும் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அருப்புக்கோட்டையில் பாளையம்பட்டியில் உள்ள எஸ்.பி.கே. நிறுவனத்திலும், இந்நிறுவனத்துக்குச் சொந்தமான வணிக வளாகம் மற்றும் அதன் பின்பகுதியில் அமைந்துள்ள 4 வீடுகளிலும் நேற்று காலை 5 மணிக்கு 7 வாகனங்களில் வந்த வருமான வரி அதிகாரிகள் 20 பேர் சோதனையை தொடங்கினர்.

செய்யாதுரையின் மூத்த மகன் கருப்பசாமி, கடைசி மகன் பாலு ஆகியோர் அருப்புக்கோட்டையில் வசிக்கின்றனர். இரண்டாவது மகன் நாகராஜன் சென்னையிலும், மூன்றாவது மகன் ஈஸ்வரன் மதுரையிலும் வசிக்கின்றனர். இவர்களில் அருப்புக்கோட்டையில் வசிக்கும் கருப்பசாமி, பாலு ஆகியோரது வீடுகளிலும் வருமான வரி அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். நேற்று பிற்பகலில் கருப்பசாமியை தங்களுடன் அழைத்துச் சென்று வருமான வரி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் உள்ள செய்யாதுரையின் உறவினரின் நூற்பாலையிலும் சோதனை நடந்துள்ளது. கமுதி அருகே உள்ள அவரது சொந்த கிராமத்துக்கு வருமானவரித் துறையினர் வருவதாக கிடைத்த தகவலின்பேரில் ஏராளமான பத்திரிகையாளர்கள் குவிந்திருந்தனர். ஆனால், மாலை 5 மணி வரை யாரும் வரவில்லை. வீட்டில் பணிப்பெண் மட்டுமே இருந்தார்.

விடுதியில் சோதனை

மதுரை கேகே.நகர் லேக்வியூ சாலையில் செய்யாதுரைக்குச் சொந்தமான அடுக்குமாடி தங்கும் விடுதிக்கும் நேற்று காலை வருமான வரி அதிகாரிகள் தனியார் வாகனங்களில் வந்து சோதனை செய்தனர். அங்குள்ள கட்டுமானப் பணி அலுவலகத்தில் சோதனை நடந்தது.

லாட்ஜ் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் வாடிக்கையாளர்கள் பதிவேடு உட்பட சில ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். சில ஆவணங்களை விசாரணைக் காக எடுத்துச் சென்றனர். ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய அமைச்சர் மதுரை வரும் போதெல்லாம் இந்த ஹோட்டலில் தங்குவதுதான் வழக்கம்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் முக்கிய சாலை ஒப்பந்தங்களை எஸ்பிகே நிறுவனம் அதிகளவில் எடுத்து வந்துள்ளது. இதற்கு ஆளும் கட்சியின் அதிகாரம் மிக்கவர்களின் ஆதரவே காரணம் என தகவல் பரவி வந்தது. சத்துணவு திட்டத்துக்கு முட்டை கொள்முதலில் நடந்த முறைகேடு தொடர்பாக ஏற்கெனவே சோதனை முடிந்த நிலையில், எஸ்பிகே நிறுவனங்களில் சோதனை நடந்துள்ளது அரசியல்வாதிகள், அதிகாரிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் 4 இடங்கள்

சென்னையில் முகப்பேர் மேற்கு, பெசன்ட் நகர், நொளம்பூர், அபிராமபுரம் ஆகிய 4 இடங்களில் உள்ள அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் போயஸ் கார்டன் பார்த்தசாரதி சாலையில உள்ள செய்யாதுரையின் உறவினர் தீபக் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. எஸ்.பி.கே குழுமத்துடன் தொழில் ரீதியாக தொடர்புடையதாக கூறப்படும், டி.வி.எச் என்ற கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரும், முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரருமான ரவிச்சந்திரனின் இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. சென்னையில் 65 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "பல முக்கிய ஆவணங்கள், சொத்து விவரங்களை பறிமுதல் செய்துள்ளோம். இன்றும்  சோதனை நடைபெறும். எஸ்.பி.கே குழுமத்தின் 4 இயக்குநர்கள் விவரங்கள் குறித்தும் சேகரிக்க உள்ளோம். பறிமுதல் செய்யப்பட்ட பணம், ஆவணம், சொத்து விவரங்கள் குறித்து தேவைப்பட்டால் தெரிவிப்போம். விசாரணைக்காக அழைக்கப்பட வேண்டியவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்துவோம். அதுவரை தற்போது நடத்தியுள்ள சோதனை குறித்து முழு விவரத்தையும் வெளியிட இயலாது என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x