Published : 14 Jul 2018 09:08 AM
Last Updated : 14 Jul 2018 09:08 AM

அக்.11 முதல் 22 வரை தாமிரபரணி மகா புஷ்கரம்: 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அபூர்வம்

திருநெல்வேலியில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி மகா புஷ்கரம் விழா, வரும் அக்.11-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. மகா புஷ்கரம் நடைபெறும் 12 நாட்களும் 1 கோடி பக்தர்கள் வரை தாமிரபரணியில் தீர்த்தமாட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புஷ்கரம் என்ற சொல்லுக்கு தீர்த்தமாடுதல் என்று பொருள். புஷ்கரணி என்றால் தீர்த்த கட்டம். அதாவது குளியலுக்கான சாதாரண படித்துறை அல்ல. அதைவிடப் புனிதமான ஆன்மிக தீர்த்தமாடும் தலம்.

தற்போது, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் திருநெல்வேலி மண்டல கிளை யின் ஆதரவுடன், ஸ்ரீ ராம கிருஷ்ண தபோவனத்தின் திருநெல்வேலி மையத் தலைவரும், திருநெல்வேலி சாரதா மகளிர் கல்லூரியின் தாளாளருமான சுவாமி பக்தானந்த மகராஜ் தலைமையில், தாமிரபரணி மகா புஷ்கரம் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப் பட்டுள்ளது.

200 படித்துறைகள் சீரமைப்பு

இக்குழுவின் சார்பில், தாமிரபரணி நதியின் இருகரைகளிலும் உள்ள 200 புஷ்கரணி படித் துறைகள் (தீர்த்தக்கட்டம்) சீரமைக்கப்பட்டு, பக்தர்களின் தீர்த்தமாடுதலுக்காக தயார் செய்யப்பட்டு வருகின்றன. பாபநாசம் தொடங்கி புன்னைக்காயல் வரை தாமிரபரணி நதி பாய்ந்துசெல்லும் 127 கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் தீர்த்தமாடலாம். இதையொட்டி, தாமிரபரணி தாய்க்கு நன்றி சொல்லும் விதமாக மகா ஆரத்தி விழா நடத்தப்பட உள்ளது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் இந்த மகா ஆன்மிக விழாவின் அபூர்வம் கருதி தாமிரபரணி கரையை சுத்தப்படுத்தும் முகாம்கள் பலகட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின் றன.

தாமிரச் சிலைகள்

தாமிரபரணி மகா புஷ்கரத்தையொட்டி அன்னை தாமிரபரணிக்கு தாமிரத்தால் ஆன இரண்டரை அடி உயர சிலை மற்றும் 1 அடி உயர தாமிர அகத்தியர் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அபிஷேக ஆராதனை பூஜைக்காக இச்சிலைகள் சிருங்கேரிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு, இச்சிலைகளுக்கு, சாரதா பீடம் ஸ்ரீபாரதி வித்யா தீர்த்த சுவாமிகள் பல்வேறு தீர்த்த அபிஷேகங்களைச் செய்தார்.

பின்னர், தனது கொடியையும் வழங்கி தாமிரபரணி மாதா மந்திர புத்தகத்தை வெளியிட்டு, திருவுருவச் சிலைகள் யாத் திரையை தொடங்கி வைத்தார்.

அங்கிருந்து சிலைகள் ஓசூர், தருமபுரி, ஒகேனக்கலுக்கு பவனியாக எடுத்து வரப்பட்டு, வரும் 16-ம் தேதி திண்டுக்கல், மதுரையிலும், 17-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்திலும், 18. 19, 20-ம் தேதிகளில் திருநெல் வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பவனியாக இச் சிலைகள் எடுத்து வரப்படுகின்றன. வரும் 20-ம் தேதி இரவில் பாபநாசத்தில் பவனி நிறைவடை கிறது.

தொடர்ந்து, தாமிரபரணியில் உள்ள 200 தீர்த்தக்கட்டங் களுக்கும் இச்சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு, புஷ்கரம் விழா குறித்து அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

மகாபுஷ்கரம் விழா அக்.11-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. மகா புஷ்கரம் நடைபெறும் 12 நாட்களும் 1 கோடி பக்தர்கள் வரை தாமிரபரணியில் தீர்த்தமாட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x