Published : 10 Jul 2018 09:33 PM
Last Updated : 10 Jul 2018 09:33 PM

தமிழகத்தை வஞ்சிக்கும் அமித் ஷாவின் மோசடிப் பேச்சு: மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

வழக்கம் போல தேர்தலுக்காக அள்ளிவிடும் வெற்று அலங்காரப் பேச்சு என்பதையும் தாண்டி அமித் ஷாவின் பேச்சு தமிழக மக்களை வஞ்சிக்கும் செயல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

சென்னையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, பி.சம்பத், அ.சவுந்தரராசன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் முதல்நாள் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தீர்மானம் 1: நீட் தமிழ்வழி தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நியாயம் அளிக்கும் தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடுத்த வழக்கில் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சரிசெய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். தரம் என்பதை முன்னிறுத்தி திணிக்கப்பட்ட நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் 49 கேள்விகளுக்கான மொழிபெயர்ப்பு அறிவுக்குப் பொருத்தமற்றதாகவும், மாணவர்களால் விளங்கிக் கொள்ள முடியாத வகையிலும் இருந்ததை சுட்டிக்காட்டி அந்த வினாக்களுக்கு உரிய 196 மதிப்பெண்கள் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கில் டி.கே. ரங்கராஜன் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத்தும், ஷாஜி செல்லன், சீனிவாச ராகவன் மற்றும் வாமணன் ஆகியோர் ஆஜராகினர்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டுமெனவும், இந்த மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு இரண்டு வார காலத்திற்குள் புதிய தர வரிசைப் பட்டியலை வெளியிட வேண்டுமெனவும், அதுவரையிலும் மருத்துவ கலந்தாய்வு நடத்த தடை விதித்தும் தீர்ப்பளித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு இந்தத் தீர்ப்பை மகிழ்ச்சியோடு வரவேற்கிறது. இந்தத் தீர்ப்பின் மூலம் அநீதி இழைக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைத்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. இதனால் பலனடையும் மாணவர்களுக்கு கூடுதல் இடங்களை உருவாக்கி வாய்ப்பளிக்க வேண்டுமென வலியுறுத்துவதோடு, காலம் தாழ்த்தாமல் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும்.

இந்தப் பிரச்சினையை கட்சியின் கவனத்திற்கு கொண்டு வந்த டெக் பார் ஆல் அமைப்பையும், வழக்குத் தொடுத்த டி.கே. ரங்கராஜன் எம்.பி.க்கும், வழக்கறிஞர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது.

கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதை சுட்டிக்காட்டி ஆரம்ப முதலே தமிழகத்திற்கு நீட்டிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கோரி வருகிறது. மாணவர்களின் நலனைப் பற்றி கவலைப்படாமல் இதை நடைமுறைப்படுத்தியதின் காரணமாக மாணவர்கள் ஏராளமான குழப்பங்களோடும், கடுமையாக மன உளைச்சலுக்கும், பாதிப்புக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். நீட் சில மாணவர்களின் உயிரையும் பறித்திருக்கிறது. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு, தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்களிக்க வேண்டும் என மத்திய அரசை மீண்டும் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2: தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக தலைவரின் மோசடிப் பேச்சு

தமிழகத்தில் நேற்று தன் கட்சி உறுப்பினர்களிடையே பேசிய பாஜக தலைவர் அமித் ஷா, தமிழகத்திற்கு ரூ.5,10,000 கோடி அள்ளிக் கொடுத்ததாக, உண்மைக்கு மாறான தகவலை சொல்லிச் சென்றிருக்கிறார். 13-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதி தமிழகத்திற்கு போதுமானதல்ல என்பது உண்மை. ஆனால், அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு வெறும் 10 ஆயிரம் கோடி ரூபாயை கூடுதலாகக் கொடுத்துவிட்டு, அது ஒரு இமாலய சாதனை என்பது போல பேசியிருக்கிறார். 15-வது திட்டக்குழுவிற்கான வரையறையில் இப்போது வரிவருவாயில் மாநிலங்களுக்கு இருக்கும் பங்கை 42 சதவிகிதத்திலிருந்து குறைக்க வேண்டுமென்று மத்திய அரசு கூறியிருக்கிறது.

இதே போன்று தென்மாநிலங்களையும், வளர்ச்சியடைந்த மாநிலங்களையும் பாதிக்கும் வகையில் 1971-ம் ஆண்டு மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படைக்கு பதிலாக, 2011ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் நிதி பங்கீடு செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறது. இதனால் எல்லாம் தமிழகம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும். இதேபோன்று பொதுவிநியோக முறையில் 18 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு மட்டுமே தற்போது மானிய விலை சர்க்கரையும், மண்ணெண்ணையும் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோன்று தலித் மாணவர்களுக்கான பிளஸ் 2விற்கு பிந்தைய கல்வி உதவித் தொகையை மத்திய அரசு கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறது.

தமிழகத்திற்கு மட்டும் சுமார் 1,900 கோடி ரூபாய் பாக்கியிருக்கிறது. தமிழக அரசு மிகக் கடுமையான கடன் சுமையில் சிக்கியிருக்கும் நிலையில் உரிய உதவிகளைச் செய்வதற்கு பதிலாக மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்ளும் பாஜகவின் தலைவர் அமித் ஷா தமிழக மக்களை வஞ்சித்ததுடன் அல்லாமல் வாரி வழங்கியது போன்று பேசியிருப்பது மிகப்பெரிய மோசடியாகும்.

பாஜக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு கடந்த நான்காண்டுகளில் தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பதோடு, படோடோபமாக அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எந்த நிதியும் ஒதுக்காமல், எப்போது முடியும் என்றும் தெரிவிக்காமல் மத்திய அரசு ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. வழக்கம் போல தேர்தலுக்காக அள்ளி விடும் வெற்று அலங்காரப் பேச்சு என்பதையும் தாண்டி அமித் ஷாவின் பேச்சு தமிழக மக்களை வஞ்சிக்கும் செயல்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x