Published : 10 Jul 2018 07:45 PM
Last Updated : 10 Jul 2018 07:45 PM

லோக் ஆயுக்தா மசோதாவில் உள்ள 5 குறைகள்: வேல்முருகன் பட்டியல்

தமிழ்நாடு லோக் ஆயுக்தா மசோதாவில் உள்ள 5 குறைகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் பட்டியலிட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பொது ஊழியர்கள் அதாவது அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க லோக் ஆயுக்தா எனும் அமைப்பை ஏற்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது மத்திய அரசு. ஆனால் 2013லிருந்தே தமிழக அதிமுக அரசு லோக் ஆயுக்தாவை உருவாக்காமல் தட்டிக்கழித்தே வந்தது. அதனால் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் நேற்று சட்டப்பேரவைக் கூட்டத்தின் கடைசி நாளன்று லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கென்று தமிழ்நாடு மாநிலத்துக்காக லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவ அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்ட முன்வடிவு அதற்கு செயல்வடிவம் கொடுக்கவுள்ளது என்று சொல்லி லோக் ஆயுக்தா மசோதாவைத் தாக்கல் செய்தார் அமைச்சர் ஜெயக்குமார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியைப் பொறுத்தவரையில் இம்மசோதா நிறைவாக இல்லை. எனவே, இதன் குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. பொது ஊழியருக்கு எதிராக பொய்ப் புகார் கொடுத்தால் ஓராண்டு சிறை தண்டனையுடன் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் வழக்குச் செலவுக்கான தொகையை இழப்பீடாக வசூலிக்கவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் எந்த சாமானிய மனிதர்தான் ஊழல் புகார் தெரிவிக்க முன்வருவார்?

குற்றம் சாட்டப்படும் நபர் அவருடைய அளவுக்கு எட்டாத வகையில் சம்பவம் நடத்திருந்தாலோ அல்லது குற்றம் நடைபெறாமல் இருப்பதற்காக அனைத்து உரிய முயற்சிகளையும் எடுத்திருந்தாலோ அவர் தண்டிக்கப்படக் கூடாது என்று மசோதாவில் இருக்கிறது. குற்றம் சாட்டப்படும் நபர் இப்படி வாதிடுவார் எனில் அதனை எங்ஙனம் உறுதி செய்வது?

அரசு ஏற்படுத்திக்கொள்ளும் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்தோ, அரசு செய்யும் பணி நியமனம், பணி மாறுதல், பணி நீக்கம், பணி ஓய்வுகள் குறித்தோ முறையீடு செய்ய மசோதா இடம் தரவில்லை. ஊழலின் உறைவிடங்களாகத் திகழும் முக்கியமான விடயங்கள் இவை. இவை குறித்து புகார் கூற முடியாது என்றால் எப்படி?

உள்ளாட்சி நிதி தணிக்கையாளரின் கீழ் வரும் நபர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மீதும் ஊழல் புகார் கூறக் கூடாது என்கிறது மசோதா.இது ஊழலை மறைக்கும் உள்நோக்கமன்றி வேறென்ன?

ஊழல் புகாரில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாக அரசு ஊழியருக்கு தமிழக அரசும், சட்டப்பேரவை உறுப்பினருக்கு சபாநாயகரும், அமைச்சர்களுக்கு முதல்வரும், முதல்வருக்கு ஆளுநரும் செயல்படுவர் என்கிறது மசோதா. இந்தக் கூட்டுறவினர் குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பதையே தங்கள் அறமாகக் கொண்டால் என்ன செய்வது?

எனவேதான் சொல்கிறோம். லோக் ஆயுக்தா தன்னிச்சையான அமைப்பாக இருக்க வேண்டும்; ஆளுங்கட்சி சார்ந்ததாக இருக்கக் கூடாது.ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிதான் லோக் ஆயுக்தாவுக்கு தலைமை தாங்க வேண்டும். அதன் அமைப்புக் குழுவில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், பணியில் உள்ள உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்ளிட்ட 3 நீதிபதிகள் ஆகிய 5 பேர் இடம்பெற்றால்தான் உண்மையில் அது சரியான நீதி அமைப்பாக இருக்கும்.

ஆனால் உச்ச நீதிமன்றத்திடம் சாக்குப்போக்கே சொல்ல முடியாத நிலையில் வேறு வழியின்றி இந்த சட்ட முன்வடிவை நிறைவேற்றி முறையைக் கழித்திருக்கிறது அதிமுக அரசு. இதன்மூலம் ஊழல் குற்றம் புரியும் பொது ஊழியரை விசாரித்து தண்டனைக்குள்ளாக்க முடியுமா என்கின்ற ஐயம் வலுவாகவே எழுகிறது. எனவே பொது விவாதத்திற்கு விட்டு ஆலோசனை பெற்று, வேண்டிய திருத்தங்களைச் செய்து, அதன் பிறகே இம்மசோதாவைச் சட்டமாக்க வேண்டும்'' என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x