Published : 10 Jul 2018 06:57 PM
Last Updated : 10 Jul 2018 06:57 PM

நீட் தேர்வு; கருணை மதிப்பெண் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சிபிஎஸ்இ மேல் முறையீடு செய்யக்கூடாது: திருமாவளவன்

நீட் தேர்வு விவகாரத்தில் கருணை மதிப்பெண் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சிபிஎஸ்இ மேல் முறையீடு செய்யாமல் தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நீட் தேர்வைத் தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கூடுதலாகத் தருமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தேர்வின் போது 49 வினாக்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டி தொடரப்பட்ட வழக்கில் இந்தத் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். இந்தத் தீர்ப்பை எதிர்த்து சிபிஎஸ்இ மேல் முறையீடு செய்யாமல் பார்த்துக் கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

நீட் தேர்வை தமிழிலேயே எழுதக் கூடிய வசதி கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. அதனடிப்படையில் 24,000க்கும் மேற்பட்டோர் தமிழில் நீட் தேர்வை எழுதினார்கள் ஆனால் வினாக்களை தமிழில் மொழி பெயர்க்கும் போது ஏராளமான குளறுபடிகள் நேர்ந்தன 49 வினாக்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. அதனால் அந்த வினாக்களுக்கு மாணவர்கள் உரிய முறையில் பதிலளிக்க முடியவில்லை. தமிழில் தேர்வெழுதிய மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பை இழந்தனர்.

இந்நிலையில் தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் எனக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நாளில் அவசர அவசரமாக நீட் தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதனால் தமிழில் தேர்வெழுதிய மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பால் அவர்களில் சிலர் மருத்துவப் படிப்பில் சேரும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடும். அப்படி செய்தால் தமிழில் தேர்வெழுதிய மாணவர்களின் வாய்ப்பு பறிபோகும். எனவே, மேல்முறையீடு செய்யாமல் தமிழக அரசு சிபிஎஸ்இ அமைப்பைத் தடுக்க வேண்டும், உயர்நீதிமன்ற உத்தரவை முழுமையாக நிறைவேற்ற உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்'' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x