Last Updated : 10 Jul, 2018 05:28 PM

 

Published : 10 Jul 2018 05:28 PM
Last Updated : 10 Jul 2018 05:28 PM

கேட் கீப்பர்கள் இல்லாததால் அவலம்: அறந்தாங்கியில் ரயிலை நிறுத்தி டிரைவரே ரயில்வே கேட்டை மூடித் திறக்கும் நிலைமை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ரயில்வே கேட் திறக்க, மூட ஆள் இல்லாததால், ரயில் ஓட்டும் டிரைவரே வண்டியை நிறுத்தி கேட்டை மூடிய பின் கேட்டை திறக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயின் கடைசி மீட்டர் கேஜ் ரயில் பாதையாக இருந்த புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வழியே காரைக்குடி, திருத்துறைப்பூண்டி இடையேயான பாதையை அகலப்படுத்தும் பணி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.

அதில், காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வரை 72 கிலோ மீட்டருக்கு பணிகள் முடிக்கப்பட்டு வாரத்தில் திங்கள் மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் டெமு ரயில் (டீசலில் இயங்கும் ரயில்)  கடந்த வாரத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில், தொடக்கத்தில் 6.30 மணிநேரம் இயக்கப்பட்டது. நேரம் அதிகமாக இருப்பதாக பயணிகள் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து பயண நேரத்தை பாதியாக தெற்கு ரயில்வே குறைத்துள்ளது.

எனினும், காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே 37 ரயில்வே கேட்டுகள் உள்ளன. இந்த கேட்டுகளை ஆபரேட் செய்வதற்கு கேட் கீப்பர்கள் நியமிக்கவில்லை.

மாறாக ரயிலில் செல்லும் 4 கேட் கீப்பர்கள் மற்றும் ரயில் டிரைவரே இறங்கி, கேட் உள்ள இடத்திற்கும் அருகே ரயில் நிறுத்தப்படும்போது ரயிலில் இருந்து ஒரு கேட் கீப்பர் இறங்கி கதவை மூடுவதும் பின்னர், கேட்டைக் கடந்து ரயில் சென்றதும் கதவை திறந்துவிட்டு மீண்டும் அதே ரயிலில் ஏறிக்கொள்வதுமாக உள்ளது.

ரயில் தண்டவாளத்தின் குறுக்கே செல்லும் சாலையைக் கடந்து ரயில் செல்லும் வரை நீண்ட வரிசையில் சாலையில் வாகனங்கள் காத்திருப்பதைத்தான் பார்த்திருக்க முடியும். ஆனால், இந்த ரயில் பாதையில் வாகனங்களுக்காக ரயில் காத்திருப்பது பார்வையாளர்களுக்கு அதிசயமாகவும், நகைச்சுவையாகவும் மாறி உள்ளது.

மேலும், இது பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால் உடனடியாக கேட் கீப்பர்களை நியமித்து ரயில் இயக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x