Published : 10 Jul 2018 04:49 PM
Last Updated : 10 Jul 2018 04:49 PM

ஹாட்ரிக் கின்னஸ் சாதனை: ஒற்றை விரலில் ஹாக்கி மட்டையை ஒரு மணிநேரம் 11 நிமிடங்கள் கீழே விழாமல் நிறுத்தி சாதனை படைத்த மருத்துவ மாணவர்

ஒரே இடத்தில் நகராமல் ஒற்றை விரலில் ஹாக்கி மட்டையை ஒரு மணி நேரம் 11 நிமிடங்கள் கீழே விழாமல் நிறுத்தி மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இது இவருடைய மூன்றாவது கின்னஸ் சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கும் விளையாட்டுக்கும் ரொம்ப தூரம் என்பதை உடைத்து விளையாட்டில் ஹாட்ரிக் கின்னஸ் சாதனை நிகழ்த்தி மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் சாதனை படைத்துள்ளார். சேலம் குகை பகுதியைச் சேர்ந்தவர் பி.கவுதம் நாராயணன் (வயது 23). தற்போது இறுதி ஆண்டு மருத்துவக் கல்வி படித்து வருகிறார்.

அடிப்படையில் கிரிக்கெட் வீரரான இவர், சிறுவயது முதலே பள்ளி அணியிலும், தற்போது மதுரை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ பல்கலைக்கழக அணிகளுக்காக கிரிக்கெட் விளையாடி வருகிறார். இதுதவிர டென்னிஸ், ஹாக்கியையும் பொழுதுபோக்காக விளையாடுவார்.

பள்ளிப் பருவத்தில் நண்பர்களுக்காக மைதானத்தில் காத்திருந்தபோது பொழுதுபோகாமல் ஒரே இடத்தில் நகராமல் நின்றபடி பந்தை கீழே விழாமல் கிரிக்கெட் பேட்டில், டென்னிஸ் பேட்டியில் தட்டிக் கொண்டிருந்துள்ளார். இப்படி விளையாட்டாக செய்த விஷயங்களையே தற்போது கவுதம் நாராயணன் ஹாட்ரிக் கின்னஸ் சாதனையாக்கி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

முதல் முறையாக 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி, ஒரே இடத்தில் நகராமல் நின்று 2 மணி நேரம் 16 நிமிடம், 1 விநாடிகள் கிரிக்கெட் பேட்டில் பந்தை கீழே விழாமல் தட்டியபடி நின்று கின்னஸ் சாதனை படைத்தார். தொடர்ந்து 2016-ம் ஆண்டு 4 மணி நேரம் 20 நிமிடங்கள் ஒரே இடத்தில் நகராமல் நின்று இரண்டாவது முறையாக டென்னிஸ் பேட்டில் டென்னிஸ் பந்தை கீழே விழாமல் ஒரே நேரத்தில் மேலும், கீழுமாக தட்டியபடி நின்று கின்னஸ் சாதனை படைத்தார்.

இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி ஒரே இடத்தில் நகராமல் ஹாக்கி மட்டையை ஒற்றை விரலில் ஒரு மணி நேரம் 11 நிமிடங்கள் 38 வினாடிகள் நிறுத்தி கின்னஸ் சாதனைக்கு அனுப்பினார். இந்த விளையாட்டை தொடரும்போது குடிநீர் கூட அருந்த முடியாது, சிறுநீர் கழிக்கவும் முடியாது. இதையெல்லாம் கடந்து இவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். இதை தற்போது கின்னஸ் நிறுவனம், கின்னஸ் சாதனையாக அங்கீகரித்து அவருக்கு அதற்கான சான்றிதழை அனுப்பி உள்ளது. இந்த சாதனையைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக கவுதம் நாராயணன் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இதற்காக கடந்த ஏப்ரல் 22-ம் தேதி கல்லூரி வளாகத்தில் டீன் மருதுபாண்டியன், கல்லூரி விளையாட்டு ஆலோசகர் டாக்டர் தாமோதரன் ஆகியோர் முன்னிலையில் இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டினார்.

இதுகுறித்து பயிற்சி மருத்துவர் கவுதம் நாராயணன் கூறுகையில், “ஒரே இடத்தில் மணிக்கணக்கில் நின்று கொண்டு பேட்டில் பந்துகளைத் தட்டுவதற்கு முதலில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயாராக வேண்டும். ஒரே இடத்தில் நிற்பதால் கால், கழுத்து தசைகள் இறுகிவிடும். ரத்த ஒட்டம் குறையும். மூளைக்குச் செல்லும் ரத்தம் பாதிக்கப்படும். இதய செயல்பாடும் குறையும். ஒரே இடத்தில் நகராமல் உடலில் மூளைக்கு நிறைய வேலை கொடுக்க வேண்டும்.

உடலில் 70 சதவீதம் நீர்ச்சத்து இருக்க வேண்டும். நீர்ச்சத்து விரைவாகக் குறையும். அதனால், 40 சதவீதம் நீர்ச்சத்து உடலில் இருந்தாலும் விளையாட்டை தொடரக்கூடிய அளவுக்கு பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நிமிடத்திற்கு 16 முறை மூச்சு விட வேண்டும். இதைக் குறைத்தால் மட்டுமே இந்த சாதனையை நிகழ்த்த முடியும். விளையாட்டாக நான் செய்த இந்த விஷயங்களை நண்பர்கள் ஊக்கப்படுத்தியதால் தற்போது அதையையே கின்னஸ் சாதனையாக்கி உள்ளேன். மருத்துவரானாலும் விளையாடுவதை என்னால் நிறுத்த முடியவில்லை.

கல்வியைத் தாண்டி நமக்கென்று ஒரு அடையாளம் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த சாதனையை செய்துள்ளேன்.

ஒவ்வொரு நாட்டிலும் கின்னஸ் சாதனையாளர்களுக்கு சில சலுகைகள் உள்ளன. இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் அவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் விழாக்களிலும், பொது வெளிகளிலும் விஐபி அந்தஸ்து கொடுக்கிறது. அவர்களுக்கு நிறுவனங்கள் தொடங்குவதற்கு முன்னுரிமை கொடுக்கிறது. விஐபிகளுக்கு அந்தஸ்து கிடைக்கும். இந்தியாவில் கின்னஸ் சாதனைக்கான தனி பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை. நான் செய்தது தனி மனித சாதனை. இதுவே குழுவாக நிகழ்த்தும்போது அந்த அங்கீகாரத்தை அவர்கள் விளம்பரத்திற்கும், அவர்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்கும் பயன்படுத்தலாம்” என்றார் கவுதம் நாராயணன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x