Last Updated : 10 Jul, 2018 04:24 PM

 

Published : 10 Jul 2018 04:24 PM
Last Updated : 10 Jul 2018 04:24 PM

7-வயது சிறுமி கொலை: தஸ்வந்துக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

சென்னையில் முகலிவாக்கத்தில் 7-வயது சிறுமியை பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில், மகிளா நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளி எஸ் தஸ்வந்த் தாக்கல் செய்தமனுவைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்து இன்று தீர்ப்பளித்தது.

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த பாபு என்பவருக்கு 7 வயதில் ஒரு மகள் இருந்தார். கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த அந்தச் சிறுமி திடீரென காணாமல் போனார். பெற்றோர் பல இடங்களில் தேடியும் சிறுமியைக் கண்டுபிடிக்க முடியாததால், மாங்காடு போலீஸில் புகார் செய்தனர்.

போஸீலார் நடத்திய புலன் விசாரணையில் அதே குடியிருப்பில் வசிக்கும் தஸ்வந்த் என்ற இளைஞர் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார் என்றும், ஒரு டிராவில் பேக்கில் குழந்தையை எடுத்துச் சென்றுஎரித்தார் என்ற விவரம் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, தஸ்வந்தை கைது செய்த போலீஸார் அவரை குண்டர்சட்டத்தில் புழல்சிறையில் அடைத்தனர். சில மாதங்கள் சிறையில் இருந்த தஸ்வந்த், ஜாமீனில் வெளியே வந்தார். ஆனால், வீட்டில் தனது தாயுடன், மோதல் போக்கோடு இருந்த தஸ்வந்த் கடந்த டிசம்பர் மாதம் தனது தாய் சரளாவை செய்து நகைகளுடன் தலைமறைவானார். அதன்பின் தனிப்படை சென்று தஸ்வந்த் மும்பையில் வைத்து கைது செய்த அழைத்து வந்து, புழல் சிறையில் அடைத்தனர்.

சிறுமி பலாத்காரம் மற்றும் கொலை தொடர்பான வழக்கு செங்கல்பட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த. நீதிபதி பி. வேல்முருகன், தஸ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்துக் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி தீர்ப்பளித்தார்.

இந்நிலையில், மாவட்ட மகளிர் நீதிமன்றம் அளித்த தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளி தஸ்வந்த் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ் விமலா, ராமதிலகம் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. குற்றவாளி தஸ்வந்த் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள், தன் மீது முறையாக விசாரணை நடத்தப்படவில்லை, அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளும்,போதுமான ஆதாரங்களும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம் அரசுதரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிடுகையில், சிறுமியை முகலிவாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று அவரைக் கழுத்தை நெறித்து கொலை செய்து, பலாத்காரம் செய்து, ஒரு டிராவல் பேக்கில் வைத்து குப்பையில் போட்டுத் தீயிட்டு எரித்து கொடுஞ்செயல் செய்துள்ளார். ஐபிசி பிரிவின்படியும், குழந்தைகள் பலாத்கார தடுப்புச் சட்டமான போக்ஸோ சட்டத்தின் படியும் தஸ்வந்த் குற்றவாளி என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ் விமலா, ராமதிலகம் ஆகியோர் கொண்ட அமர்வு, குற்றவாளி தஸ்வந்த் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, மாவட்ட மகளிர் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை உறுதி செய்தனர்.

மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில், குற்றம்வாளிகள் 4 பேரில் 3 பேர் தாக்கல் செய்த சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்து தூக்கு தண்டனைடை உச்ச நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது. அந்தத் தீர்ப்பு நேற்று வந்தநிலையில், இன்று தஸ்வந்துக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தவிர தஸ்வந்த் தனது தாயைக் கொலை செய்தது தொடர்பான வழக்கின் விசாரணை தனியாக நீதிமன்றத்தில் நடந்துவருகிறது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x