Published : 10 Jul 2018 04:02 PM
Last Updated : 10 Jul 2018 04:02 PM

வேலை வாங்கித் தருவதாக ரூ.29 லட்சம் மோசடி: போலிப் பணி நியமன ஆணையை அளித்த அரசு பள்ளித் தலைமை ஆசிரியர் மீது வழக்கு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.29 லட்சம் மோசடி செய்து போலி பணிநியமன ஆணையை வழங்கிய அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியை மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிலக்கோட்டை அருகேயுள்ள சின்னமநாயக்கன் கோட்டையைச் சேர்ந்தவர் அழகுராஜா. இவர் வான்வழிப் போக்குவரத்துத் துறையில் பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர். இவருக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார் நிலக்கோட்டை அரசுப்பள்ளியைச் சேர்ந்த தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி.

இதனையடுத்து உமா மகேஸ்வரியிடம் 13.5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார் அழகுராஜா. இந்நிலையில் உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழகுராஜாவை அழைத்துச் சென்றுள்ளார், இவருடன் ரெய்மாண்ட் என்பவரும் சென்றுள்ளார், இவரும் பொறியியல் பட்டதாரி, எனவே தனக்கும் வேலை வேண்டும் என்று ரூ.15 லட்சத்தை உமா மகேஸ்வரியிடம் கொடுத்துள்ளார்.

இதன் பிறகு கடந்த ஜனவரி மாதம் சென்னை தியாகராய நகரில் உள்ள வீடு ஒன்றிற்கு அழகுராஜா மற்றும் ரெய்மாண்ட் ஆகியோரை உமா மகேஸ்வரி அழைத்து பணி நியமன ஆணையை வழங்கியுள்ளார்.

மேலும் இந்த ஆணையை தற்போது யாரிடமும் காட்ட வேண்டாம், அரசியல் சூழ்நிலை சரியில்லை எனவே தான் சொல்லும் போது ஆணையைக் காட்டலாம் என்று அறிவுறுத்தியுள்ளார் உமா மகேஸ்வரி.

இதனை நம்பித் திரும்பிய அழகுராஜாவும் ரெய்மாண்டும் அதன் பிறகு சில காலங்களாக உமா மகேஸ்வரியிடமிருந்து எந்த ஒரு தகவலும் வராததால் சந்தேகம் அடைந்து பலரிடமும் இந்த பணி நியமன ஆணையைக் காட்ட அது போலியானது என்பது தெரியவந்தது.

உடனே உமாமகேஸ்வரியை அணுகி பணத்தைத் திருப்பித்தருமாறு கேட்டுள்ளனர், ஆனால் உமா மகேஸ்வரி பணத்தைத் திருப்பித் தர முடியாது என்று கூறியதோடு இவர்களைத் திட்டி அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து போலீஸ் உயரதிகாரிகளிடம் புகார் பதிவு செய்ய தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x