Published : 10 Jul 2018 12:59 PM
Last Updated : 10 Jul 2018 12:59 PM

முகவரி கூட இல்லாத ஜியோ பல்கலைக்கழகத்துக்கு உலகத்தர தகுதி வழங்குவதா? - அன்புமணி கண்டனம்

முகவரி இல்லாத ஜியோ பல்கலைக்கழகத்துக்கு உலகத்தர பல்கலைக்கழக தகுதி வழங்குவதா என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “உலகின் முன்னணி 500 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பெற போட்டியிடுவதற்காக இந்தியாவின் 3 அரசு பல்கலைக்கழகங்களுக்கும், 3 தனியார் பல்கலைக்கழகங்களும் உலகத்தர பல்கலைக்கழகங்கள் தகுதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இன்னும் தொடங்கப்படாத, முகவரி கூட இல்லாத, ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ பல்கலைக்கழகத்துக்கும் இந்தத் தகுதி வழங்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

10 அரசுப் பல்கலைக்கழகங்கள், 10 தனியார் பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 20 நிறுவனங்களை உலகத்தர பல்கலைக்கழகங்களாக அறிவிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனம், மும்பை இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், டெல்லி இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆகிய 3 அரசு நிறுவனங்களையும், பிட்ஸ் பிலானி, மணிப்பால் உயர்கல்வி நிறுவனம், ஜியோ பல்கலைக்கழகம் ஆகிய 3 தனியார் பல்கலைக்கழகங்களையும் மட்டும் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி தலைமையிலான குழு முதற்கட்டமாக தேர்வு செய்துள்ளது. மீதமுள்ள 14 இடங்களுக்கு தகுதியான நிறுவனங்கள் கிடைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் 5 நிறுவனங்களின் தகுதி குறித்து எந்த ஐயமும் இல்லை. ஆனால், ஆறாவதாக இடம் பெற்றுள்ள ஜியோ பல்கலைக்கழகத்துக்கு முகவரி கூட இல்லாத நிலையில் அதற்கு உலகத்தரத் தகுதி எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்பது தான் கல்வியாளர்கள் எழுப்பும் வினா ஆகும்.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்குக் கூட இத்தகுதி இல்லை என நிராகரிக்கப்பட்ட நிலையில், இன்னும் தொடங்கப்படாத ஜியோ பல்கலைக்கழகத்துக்கு அத்தகைய தகுதி இருப்பதை கோபாலசுவாமி குழு எவ்வாறு கண்டறிந்தது? 34 விழுக்காடு மதிப்பெண் பெற்ற மாணவனுக்கு தேர்ச்சி பெறத் தகுதி இல்லை என்று கூறிவிட்டு, தேர்வே எழுதாத மாணவனைத் தேர்ச்சி பெறச் செய்தால் அது எவ்வளவு அபத்தமானதாக இருக்குமோ, அதைவிட அபத்தமானதாகத் தான் இந்த தேர்வு அமைந்திருக்கிறது.

உலகத்தரம் வாய்ந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு அளிக்கப்படும் சலுகை மற்றும் அதிகாரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இவற்றில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு 5 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி நிதி உதவி அளிக்கப்படும். இந்த பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழக மானியக்குழு, இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு உள்ளிட்ட எந்த ஒழுங்குமுறை அமைப்பும் கட்டுப்படுத்த முடியாது. மொத்த மாணவர்கள் எண்ணிக்கையில் 30% இடங்களை வெளிநாட்டவருக்கு ஒதுக்கி, விருப்பம் போல கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம்.

25% அளவுக்கு வெளிநாட்டு பேராசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம். உலகின் 500 முன்னணி கல்வி நிறுவனங்களுடன் தன்னிச்சையாக ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும். மொத்தத்தில் எந்தக் கட்டுப்பாடுமின்றி கல்வியை உலக அளவில் விற்பனை செய்து கோடிகளைக் குவிக்க முடியும். இந்த சலுகைகள் அனைத்தையும் தொடங்குபோதே அனுபவிப்பதற்காகத் தான் ரிலையன்ஸ் ஜியோ பல்கலைக்கழகத்திற்கு இந்த தகுதி வழங்கப்பட்டிருக்கிறது.

இன்னும் தொடங்கப்படாத ஜியோ பல்கலைக்கழகத்திற்கு உலகத்தர பல்கலைக்கழகத்திற்கு தகுதி வழங்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், உயர்கல்வியில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் புதிய தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் இத்தகுதி வழங்க தீர்மானிக்கப்பட்டதாகவும், அதற்காக விண்ணப்பம் செய்த 11 நிறுவனங்களில் இருந்து ஜியோ தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஜியோ பல்கலைக்கழகம் ரூ.9,500 கோடியில் அடுத்த 3 ஆண்டுகளில் தொடங்கப்பட இருப்பதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. இதுபோல் இன்னும் எத்தனை விளக்கங்களைக் கொடுத்தாலும் அடிக்கல் கூட நாட்டப்படாத பல்கலைக்கு உலகத்தர தகுதி கொடுத்ததை நியாயப்படுத்த முடியாது.

ஒரு கல்வி நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட வேண்டுமானால் அங்கு ஆராய்ச்சி மற்றும் புதுமைக் கண்டுபிடிப்பு சார்ந்த முதுநிலைக் கல்வி வழங்கப்பட வேண்டும்; குறைந்தது 10 ஆண்டுகளாக அக்கல்வி நிறுவனம் செயல்பட்டு வந்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 18 விதிமுறைகளை பல்கலைக்கழக மானியக்குழு வகுத்துள்ளது. அதன்படி நிகர்நிலைப் பல்கலையாகவே தகுதி பெற முடியாத ஜியோ கல்வி நிறுவனம் எப்படி உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக முடியும்?

இந்த சர்ச்சை ஒருபுறமிருக்க உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உருவாக்கியுள்ள வரையரையே தவறாகும். ஒழுங்குமுறை அமைப்புகளின் கட்டுப்பாட்டை நீக்கி விட்டால் ஒரு கல்வி நிறுவனம் உலகத்தரம் பெற்று விடும் என்பதே அபத்தமானதாகும். அது ஒழுங்குமுறை அமைப்புகளின் கடந்த கால செயல்பாடுகளை கொச்சைப்படுத்தும் செயலாகும். அதுமட்டுமின்றி, இத்தகைய கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி நிதி உதவி வழங்குவதும் அறிவார்ந்த செயலல்ல.

இந்தியாவில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள் கற்பித்தலுக்கும், ஆராய்ச்சிக்கும் பணமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு நிதி உதவி வழங்குவதற்கு வசதியாக உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும்பகுதியை சில குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் ஒதுக்குவது மீதமுள்ள பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளை பாதிக்கும். இது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

உண்மையில், உலகத்தரப் பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கான மூலத் திட்டம் இதுவல்ல. பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அர்ஜுன்சிங் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது, கோவை பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 14 பல்கலைக்கழகங்களை உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களாக அறிவித்து, அவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி மேம்படுத்துவது தான் மூலத் திட்டமாகும்.

அதன்பின் கிடப்பில் போடப்பட்ட அத்திட்டத்தை தான் தற்போதையை பாஜக அரசு மாற்றியமைத்து தனியார் பல்கலைக்கழகங்களுக்கு சாதகமாக செயல்படுத்த துடிக்கிறது. இதனால் பல்கலைக்கழக மேம்பாட்டுக்கு ஏற்படும் நன்மைகளை விட தீமைகளே அதிகமாகும்.

எனவே, ஒரு சில பல்கலைக்கழகங்களை மட்டும் மேம்படுத்தும் திட்டத்தை கைவிட்டு, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு பல்கலைக்கழகத்தை தேர்வு செய்து, அதை மாநில அரசுகளின் உதவியுடன் மேம்படுத்தும் முந்தைய அரசின் திட்டத்தையே செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x