Published : 10 Jul 2018 11:19 AM
Last Updated : 10 Jul 2018 11:19 AM

லோக் ஆயுக்தா சட்டம்; இனியாவது தமிழகத்தில் காமராஜர் ஆட்சி ஏற்பட வேண்டும்: ஜி.கே.வாசன்

தமிழகத்தில் ஊழல், லஞ்சத்துக்கு இடம் இல்லை என்ற நிலையை லோக் ஆயுக்தா சட்டம் ஏற்படுத்த வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவு திங்கள்கிழமை ஒருமித்த கருத்தோடு நிறைவேற்றப்பட்டது.இது வரவேற்கத்தக்கது. குறிப்பாக எதிர்கட்சிகளும், பொதுமக்களும் லோக் ஆயுக்தா மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி மேலும் சில அம்சங்களை சேர்த்து, திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

எனவே இந்த அமைப்பு முழு அதிகாரம் பெற்ற தன்னிச்சையான அமைப்பாக செயல்படுவதற்கும், வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதற்கும், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் ஏதுவாக இந்த மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி மேலும் வலுப்பெறச் செய்ய வேண்டும் என்பது தான் தமாகாவின் எதிர்பார்ப்பாகும்.

லஞ்சம், ஊழல், சுரண்டல் போன்றவற்றில் ஈடுபடுகின்ற முதல்வர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மிக்க அமைப்பாக லோக் ஆயுக்தா செயல்பட வேண்டும். அதாவது காமராஜர் ஆட்சியை பிரதிபலிக்கும் வகையில் ஆட்சியாளர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும், அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் செயல்பட வேண்டும்.

குறிப்பாக காமராஜர் ஆட்சியில் அவர் தன்னலமின்றி, பொதுநலத்தோடு, மக்கள் நலனுக்காக தானும் பாடுபட்டதோடு அவரது அமைச்சரவையில் இருந்த அமைச்சர்களையும், சட்டப்பேரவை உறுப்பினர்களையும், அரசு அதிகாரிகளையும் நேர்மையாக, எளிமையாக, வெளிப்படைத்தன்மையோடு செயல்பட வழிகாட்டியவர். ஆனால் தற்காலங்களில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் லஞ்சம், ஊழல், முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் பல நேரங்களில் எழுந்துள்ளது.

இதற்கெல்லாம் யார் காரணம்? ஆளும் ஆட்சியாளர்களா, சட்டமன்ற உறுப்பினர்களா, அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களா, அரசு அதிகாரிகளா ? யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற ரீதியில் - லோக் ஆயுக்தா சட்டம் லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் இடம் இல்லை என்பதை முன்னிறுத்தி செயல்பட்டால் தான் மக்களிடையே நம்பிக்கையை பெறும்.

லோக் ஆயுக்தா அதிகார வரம்புக்குள் வருபவர்கள் பொது ஊழியர்களாக கருதப்பட்டு அவர்கள் மீது ஏதேனும் ஊழல் குற்றச்சாட்டு எழப்பப்படும்போது அதுகுறித்து விசாரித்து, நடவடிக்கை எடுப்பதற்காக அமைக்கப்படும் லோக் ஆயுக்தா சட்டம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அதே நேரத்தில் இந்த சட்டம் முறையாக, நேர்மையாக, வெளிப்படைத்தன்மையோடு செயல்படுத்தப்பட்டு மக்களுக்கு உண்மைத் தன்மையை வெளிப்படுத்தினால் தான் ஊழல், லஞ்சத்துக்கு இடம் கொடுப்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அந்த அடிப்படையில் தற்போது தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவு - சட்டமாக செயல்பாட்டுக்கு வந்து தமிழகத்தில் ஊழல், லஞ்சத்துக்கு இடம் இல்லை என்ற நிலை ஏற்பட வேண்டும். எனவே தமிழகத்தில் காமராஜர் ஆட்சிக்குப் பிறகு நேர்மையான, நியாயமான, வெளிப்படைத்தன்மையான ஆட்சி இனி வரும் காலங்களில் காமராஜரை பின்பற்றும் வகையில் நடைபெற வேண்டும், தொடர வேண்டும் என்பது தான் தமாகாவின் எதிர்பார்ப்பாகும்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x