Published : 10 Jul 2018 08:44 AM
Last Updated : 10 Jul 2018 08:44 AM

ஆந்திர தொழிலாளி மூச்சுகுழாயில் சிக்கிய இரும்பு நட்டு அகற்றம்: சென்னை அரசு பொது மருத்துவமனை சாதனை

சென்னை அரசு பொது மருத்துவமனையில் ஆந்திர கூலித்தொழிலாளியின் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த இரும்பு நட்டு வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த ஜோஜப்பா (54). கூலித் தொழிலாளி. வேலை செய்யும்போது, வாயில் வைத்திருந்த இரும்பு நட்டை தவறுதலாக விழுங்கிவிட்டார். அப்பகுதியில் இருந்த 2 தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றும் நட்டை எடுக்க முடியவில்லை. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்து பார்த்ததில், அந்த இரும்பு நட்டு மூச்சுக்குழாயில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. எண்டோஸ்கோபி மூலம் நட்டை எடுக்க முடியாது என்பதால், அறுவைச் சிகிச்சை செய்ய டாக்டர்கள் திட்டமிட்டனர்.

அதன்படி காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) துறை இயக்குநர் ஆர்.முத்துக்குமார் தலைமையில் டாக்டர்கள் செம்மனச்செல்வன், செண்பகவல்லி, பிரவீன்குமார் மற்றும் மயக்க டாக்டர் சுமதி ஆகியோர் கொண்ட குழுவினர் 2 மணி நேரம் போராடி அவரது தொண்டை பகுதியில் சிறிய துளை போட்டு (டிரக்யாஸ்டமி), அதன் வழியாக மூச்சுக்குழாயில் இருந்த அந்த இரும்பு நட்டை வெளியே எடுத்தனர். மூன்று நாட்களுக்குப் பின்னர் தொண்டையில் போடப்பட்ட துளை அடைக்கப்பட்டது. இந்த சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்த அவர் நன்றாக சாப்பிடுவதாகவும், பேசுவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

மருத்துவமனை டீன் ஆர்.ஜெயந்தி, மருத்துவக் கண்காணிப்பாளர் கே.நாராயணசாமி, காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) துறை இயக்குநர் ஆர்.முத்துக்குமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “ஆந்திராவில் இரண்டு தனியார் மருத்துவமனைகளில் பணம் செலவழித்தும் மூச்சுக்குழாயில் இருந்த நட்டை எடுக்க முடியவில்லை. இந்த மருத்துவமனைக்கு வந்த சில மணி நேரங்களில் அறுவைச் சிகிச்சை செய்து நட்டு எடுக்கப்பட்டது. தனியார் மருத்துவமனையில் ரூ.3 லட்சம் வரை செலவாகும் இந்த அறுவைச் சிகிச்சை, இந்த மருத்துவமனையில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x