Last Updated : 09 Jul, 2018 10:15 PM

 

Published : 09 Jul 2018 10:15 PM
Last Updated : 09 Jul 2018 10:15 PM

"தமிழகத்தில் அதிகமான ஊழல்": பாஜக தலைவர் அமித் ஷா வேதனை

மிகவும் அதிகமான ஊழல் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கிறது. இது வேதனையானதாகும். இந்த ஊழல் களையப்படும். புதிய நண்பர்களுடன் சேர்ந்து தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என்று பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா ஆவேசமாகப் பேசினார்.

மத்தியில் ஆளும் பாஜக 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு இப்போதே பாஜக தயாராகி வருகிறது. இதற்காக மாநிலந்தோறும் அந்த கட்சியின் தலைவர் அமித் ஷா சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

தமிழகத்துக்கு ஏற்கனவே இருமுறை வருவதற்கு அமித் ஷா திட்டமிட்ட நிலையில் அது ரத்தானது. இந்நிலையில், இன்று சென்னை வந்த அமித் ஷா கட்சி பொறுப்பாளர்கள் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் வளாகத்தில் பாஜக ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தை நினைத்தால் எனக்கு வேதனையாக இருக்கிறது. மிகவும் ஊழல் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் இருக்கிறது. இந்த ஊழல்கள் அனைத்தும் களையப்படும். சட்டம் ஒழுங்கு முறையாகக் கையாளப்பட்டு பிரச்சினைகள் சரிசெய்யப்படும். தமிழக்தில் புதிய நண்பர்களுடன் கூட்டணி ஏற்பட்டால், தமிழகத்தில் பா.ஜ., கட்சி ஆட்சி அமைக்கும். இதற்குத் தொண்டர்கள் உறுதி ஏற்க வேண்டும்.

என்னைப் போன்ற கட்சி நிர்வாகிக்கு இன்றைய தினம் மகத்துவமான நாள். தமிழகத்திற்கு நான் வரும் போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கேலியும், கிண்டலும் செய்தனர். தமிழகத்தில் 2019 மார்ச் மாதத்துக்குள் பா.ஜ., எங்கிருக்கிறது என பார்ப்பீர்கள்.

விருந்தினருக்கு விருந்தோம்பல் செய்து காத்திருப்பவர்களுக்குச் சொர்க்கத்தில் இடம் இருக்கும் என்பது வள்ளுவர் வாக்கு. எனக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் வள்ளுவர் வாக்கை அறிய வேண்டும்.

தமிழ் மொழியை நாங்கள் அவமானம் செய்துவிட்டதாக சிலர் பிரச்சினையை உருவாக்கி, எங்களுக்கு எதிராக தவறான தகவலை பரப்பிவருகின்றனர். தமிழின் பெருமையை எந்த கட்சியும் காப்பாற்றவில்லை. தமிழ் மொழியை பாஜகவும், தமிழக பாஜகவும்தான் காப்பாற்றக் கடமைப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, ரயில்வே டிக்கெட்டுகள் இந்தியில்தான் அச்சடிக்கப்பட்டன. ஆனால், பாஜக ஆட்சியில் தமிழலில் கொண்டு வந்துள்ளோம். இது நரேந்திரமோடியின் ஆட்சியில்தான் நடக்கும். அனைத்து மாநிலங்களின் மாண்புகளையும், பாஜக மதிக்கிறது, நமது கலாச்சாரத்தோடு இணைந்ததாகும்.

பாஜக மத்தியில் பதவி ஏற்றவுடன், பாஜக வெற்றி பெற்ற தொகுதியில் அலுவலகம் திறகப்பட்டுவிட்டது. தமிழகம் மட்டுமல்லாமல், மற்ற மாநிலங்களிலும் தமிழைக் கற்க விருப்பம் உள்ளவர்கள் கற்க ஏற்பாடு செய்துள்ளோம்.

தமிழகத்துக்கு பிரதமர் மோடி அதிகமான முன்னுரிமை கொடுத்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளில் 5 லட்சம் கோடிமதிப்பிலான திட்டங்களை ஒதுக்கியுள்ளார்.

மத்தியில் திமுக ஆட்சியில் பங்கெடுத்து இருநத போது, 13-வது நிதிக்குழுவில் தமிழகத்துக்கு ரூ.94 ஆயிரத்து 540 கோடிதான் ஒதுக்கப்பட்டது. ஆனால், 14-வது நிதிக்குழுவில் நாங்கள் ரூ.1.99லட்சம் கோடி ஒதுக்கி இருக்கிறோம்.

கடந்த 70 ஆண்டுகளாக செய்தாததை, கடந்த 4 ஆண்டுகளில் மோடி தமிழகத்துக்கு செய்துள்ளார். மத்திய அரசின் திட்டங்கள், மாநில அரசோடு இணைந்து செயல்படுத்தும் திட்டங்களை அளித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுக்கால காங்கிரஸ் கட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சட்டீஸ்கர், மஹாராஷ்டிரா, ஹரியானா, அசாம், நாகாலாந்து, உத்தரப்பிரதேசம், உத்தகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஊழல் ஒழிந்துள்ளது. தமிழகத்திலும் ஊழலை ஒழிப்போம்.

எங்களுடன் ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கும் நன்கு மதிப்பளிப்போம், புதிதாகக் கூட்டணிக்குள் வரும் நண்பர்களையும் அரவணைத்து, நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்போம். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் புதிய கூட்டணியை அறிவிப்போம்.

இவ்வாறு அமித் ஷா பேசினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x