Published : 09 Jul 2018 03:24 PM
Last Updated : 09 Jul 2018 03:24 PM

பாலபாரதி கைது ஏன்? அன்புமணி தருமபுரியில் தடுக்கப்பட்டாரா?- பேரவையில் முதல்வர் பழனிசாமி விளக்கம்

சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை விவகாரத்தில் பாலபாரதி கைது செய்யப்பட்டது குறித்தும், அன்புமணியை தருமபுரி தொகுதியில் தடுத்ததாக எழுந்த சர்ச்சை குறித்தும் முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத் தொடர் மற்றும் மானியக் கோரிக்கை மீதான இறுதி விவாதம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் பாலபாரதி கைது, அன்புமணியை தருமபுரி தொகுதியில் நுழையத் தடுத்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு முதல்வர் பழனிசாமி பதில் அளித்துப் பேசும்போது, ''கடந்த 7.7.2018 அன்று பிற்பகல், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் சாமியாபுரம் சாலை சந்திப்பு அருகில் சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக பொதுமக்களை சந்திப்பதற்காக முன்னாள் திண்டுக்கல் சட்டப்பேரவை உறுப்பினரும், சிபிஎம் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான பாலபாரதி தனது கட்சியினருடன் சென்றுள்ளார். அப்போது, அவ்விடத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறை ஆய்வாளரிடம், பாலபாரதி தான், விவசாயிகளையும் பொதுமக்களையும் சந்திக்கப் போவதில்லை என்றும், பசுமை வழிச்சாலை அமையவுள்ள இடத்தை பார்வையிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் அவ்விடத்தில் இருந்து சென்ற பாலபாரதி, கோட்டைமேடு என்ற இடத்தில் நிலங்களைப் பார்வையிட்டு, அங்கிருந்த விவசாயிகளையும் பொதுமக்களை அழைத்து சந்தித்து சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அச்சமயம், காவல்துறையினர், பாலபாரதி உள்ளிட்ட 14 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக, ஏ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அன்று மாலையே, அனைவரும் விடுவிக்கப்பட்டனர் என்பதைத் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொண்டு, ஜெயலலிதா அரசைப் பொறுத்தவரைக்கும், இன்றைக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன்.

நாங்கள் ஏற்கெனவே சொன்னதைப் போல, அதிக போராட்டங்கள் நடைபெற்று வரும் மாநிலம் தமிழ்நாடு. யார் போராட்டம் நடத்தினாலும், அவர்கள் கேட்கின்ற பாதுகாப்பு உட்பட அனைத்தையுமே கொடுக்கின்ற அரசு ஜெயலலிதாவின் அரசு. யாரையும் தடை செய்வதில்லை. சிலபேர் வேண்டுமென்றே இந்தத் திட்டத்தை முடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகின்ற காரணத்தினால் தான் இப்படிப்பட்ட பிரச்சினை உருவாகின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் வாய்பூட்டு என்று சொன்னார். உண்மையிலேயே, எத்தனையோ அரசு ஆட்சி செய்து கொண்டிருந்தது. ஆனால் ஜெயலலிதாவின் அரசில் தான் இவ்வளவு சுதந்திரமாக பேசிக் கொண்டு இருக்கிறோம் என்பதை இந்த நேரத்திலே நினைவூட்ட கடமைப்பட்டு இருக்கிறேன்.எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் உட்பட பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களும் அரசைப் பற்றி விமர்சனம் செய்கின்றார்கள். அதை எல்லாம் அரசு பொறுத்துக் கொண்டுதான் இருக்கிறது.

கடந்த காலத்திலே, நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும், எத்தனை வழக்குகள் போட்டார்கள் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். ஆனால், சுதந்திரமாக கருத்து சொல்லக்கூடியவர்களுக்கு அனுமதி அளிக்கக்கூடிய ஒரே அரசு ஜெயலலிதாவின் அரசு. வாய்பூட்டு என்று சொல்வது, பேச்சிற்கு வேண்டுமானால் சொல்லலாமே ஓழிய கருத்து சுதந்திரம், இங்கே அனுமதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி, அங்கே அவருடைய நாடாளுமன்ற தொகுதிக்கு கூட செல்ல முடியவில்லை என்று சொன்னார். அது தவறான கருத்து. அவர் பல இடங்களிலே சென்று, விவசாயிகளையும், பொதுமக்களையும் சந்தித்து கருத்து கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையின் அடிப்படையிலே, சேலத்திலே சென்று கருத்துகளைக் கேட்டிருக்கின்றார். அதேபோல, பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று கருத்துகளைக் கேட்டிருக்கின்றார். அங்கே தருமபுரியிலே, நீங்கள் ஒரே இடத்திலே இருந்து இன்று எந்தெந்தப் பகுதியிலே இருக்கின்ற மக்கள் பாதிப்புக்குள்ளாகிறார்களோ அவர்கள் எல்லாம் உங்களிடத்திலே கருத்துகளைச் சொன்னால், நீங்கள் கேட்கலாம் என்று சொன்னோம். தருமபுரி அவருடைய தலைமையிடம். பல்வேறு ஊர்களுக்கு செல்லும்போது, அங்கே சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகின்றது.

ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்பட்டுவிட்டால், அது அரசினுடைய பொறுப்புக்கு வந்துவிடுகிறது. ஆகவே தான், ஓரிடத்திலே இருந்து நீங்கள் கருத்துகளைக் கேட்கலாம் என்று அன்புமணியிடம் தெரிவித்தோமே தவிர, அவரை எந்த விதத்திலும் தடுக்கவில்லை. வாசனும் அதேபோலத்தான், அந்தப் பகுதியிலே சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் காவல்துறையால் முன்னெச்சரிக்கையாக அவரிடத்திலே எடுத்துக் கூறப்பட்டது. இருந்தாலும் அவர் உள்அரங்குகளில் ஏற்பாடு செய்து அந்தக் கூட்டத்தை நடத்தினார் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டு இருக்கின்றேன்.

ஆகவே, சிலபேர் இந்த திட்டத்தை தமிழகத்திற்கு கொண்டுவரக் கூடாது என்று முழுமூச்சுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். இது ஒரு மிகப் பெரிய சிறந்த திட்டம். நான் ஏற்கெனவே, பலமுறை தெரிவித்திருக்கின்றேன். திமுக ஆட்சியில் கூட பல்வேறு நிலங்களை எடுத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 3000-க்கும் மேற்பட்ட ஹெக்டெர் நிலங்களை நீங்கள் கையகப்படுத்தி சாலை அமைத்தார்கள். 17 சாலைக்காக தேவையான நிலங்களை எல்லாம் கையகப்படுத்தி சாலை அமைத்தார்கள். ஆகவே, சாலை என்பது மிக மிக முக்கியமான ஒன்று. இது தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு பசுமை வழிச்சாலை.

நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, இது ஏதோ சேலத்திற்கு தான் இந்த சாலை அமைக்கப்படுவதைப் போல ஒரு தவறான கருத்தை பரப்பிக் கொண்டு வருகிறார்கள். அது முற்றிலும் தவறு. மேற்கு மாவட்டம், அதாவது சேலத்திற்குப் பிறகு நாமக்கல் இருக்கின்றது, கரூர் இருக்கின்றது, திண்டுக்கல் இருக்கின்றது, மதுரை இருக்கின்றது. அதேபோல இந்தப் பக்கம் பார்த்தீர்கள் என்றால், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், கேரளா வரை அந்த வழியாகச் செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. ஆகவே, அந்த மேற்கு மாவட்டம், மற்றும் அண்டை மாநிலத்திலே இருக்கின்ற கனரக வாகனங்கள் எல்லாம் அந்த வழியாகச் செல்கின்ற போது, பாதுகாப்பு கருதி தான், இந்த திட்டம் கொண்டுவரப்படுகிறது. இது ஒரு சிறந்த திட்டம்.

சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் குறைவதால், பயண நேரம் குறைகிறது. 60 கிலோ மீட்டர் என்று சொன்னால், அதில் வெளிவருகின்ற புகை எல்லாம் தடுக்கின்ற விதத்திலே, அதாவது சுற்றுச்சூழலை பாதுகாக்கக்கூடிய அளவிலே, இந்த திட்டம் உருவாக்கப்படுகின்றது. நவீன முறையிலே இந்த சாலை அமைக்கப்படுகின்றது.

திமுக ஆட்சியிலே 2009-10ல் உளுந்தூர்பேட்டை சாலை அமைத்தார்கள். கிருஷ்ணகிரி - சேலம் சாலை அமைக்கப்பட்டது. அப்பொழுது வாகனத்தினுடைய எண்ணிக்கை தமிழ்நாட்டிலே 1 கோடியே 7 லட்சம் வாகனம் தான் இருந்தது. இப்போது தமிழ்நாட்டில் 2 கோடியே 57 லட்சம் வாகனங்கள் உள்ளன. இந்தத் திட்டம் நிறைவேற 5 ஆண்டு காலம் ஆகும். ஆண்டொன்றுக்கு 14 லட்சம் வாகனங்கள் இன்றைக்கு அதிகரித்துக்கொண்டே போகின்றன. ஒரு 5 ஆண்டு பார்க்கும் போது 70 லட்சம் வாகனங்கள் உயர்கின்றன. ஆக 2 கோடியே 57 லட்சம் வாகனங்கள் தற்போது இருக்கின்றன. இந்த 70 லட்சம் வாகனங்கள் வருகின்றபோது, கிட்டத்தட்ட 3 கோடியே 27 லட்சம் வாகனங்கள் தமிழ்நாட்டிலே இருக்கும்.

ஆகவே, இந்த வாகனங்கள் எல்லாம் செல்வதற்கு தகுந்த தொழில்நுட்பத்துடன் கூடிய சாலை வசதி தேவை. அதற்காகத்தான் இந்த சாலை வசதியை நாம் ஏற்றுக் கொண்டோம். மத்திய அரசாங்கம் நிதியுதவி செய்கின்றது. அதன் அடிப்படையிலே, நாம் சாலை அமைக்கின்றோம். அந்த நிலம் கொடுப்பவர்களுக்கு போதிய அளவிற்கு, தேவையான அளவிற்கு நில இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தருவதற்கு அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

31.3.2008 அன்று திமுக ஆட்சியிலே இருசக்கர வாகனங்கள் 82 லட்சத்து 60 ஆயிரம் தான். இலகு ரக வாகனங்கள் 18 லட்சத்து 8 ஆயிரத்து 991. ஆகவே இப்படி கணக்கெடுப்பு. 31.3.2018 தற்போது இருசக்கர வாகனங்கள் 2 கோடியே 15 லட்சத்து 86 ஆயிரத்து 210. நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் மட்டும் 41 லட்சத்து 92 ஆயிரத்து 286. ஆக மொத்தம் 2 கோடியே 57 லட்சத்து 78 ஆயிரத்து 496. கடந்த கால திமுக ஆட்சியிலே, 31.3.2008-ல் கனரக வாகனத்தினுடைய எண்ணிக்கை, நான்கு சக்கர வாகனங்களுடைய எண்ணிக்கை 18 லட்சத்து 8 ஆயிரத்து 992. ஆகவே, இன்றைக்கு வாகனங்களுடைய எண்ணிக்கை அதிகரிக்கின்ற காரணத்தினாலே, அதற்கு தேவையான சாலையை அரசு அமைத்து கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் விபத்தை தடுக்க முடியும்.

ஆகவே, இன்றைக்கு சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் ஒரு சிறந்த திட்டம். இந்தத் திட்டத்தை வேண்டுமென்றே சிலபேர் எதிர்க்கிறார்கள். இது தவறு என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டி, அரசிற்கு ஒத்துழைப்பு நல்கி, இந்த சாலை அமைப்பதற்கு உண்டான பணியை செய்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்'' என்று முதல்வர் பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x