Published : 09 Jul 2018 12:46 PM
Last Updated : 09 Jul 2018 12:46 PM

56 அரசுப் பள்ளிகளுக்கு புதுமைப்பள்ளி விருது; 140 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது: முதல்வர் பழனிசாமி வழங்கினார்

56 அரசுப் பள்ளிகளுக்கு 'புதுமைப்பள்ளி' விருதுகளையும், 140 ஆசிரியர்களுக்கு 'கனவு ஆசிரியர்' விருதுகளையும் முதல்வர் பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''2017-18 ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது, 'மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக சிறப்பாகச் செயல்படும் பள்ளிகளைக் கண்டறிந்து, ஒரு மாவட்டத்துக்கு ஒரு தொடக்கப் பள்ளி, ஒரு நடுநிலைப் பள்ளி, ஒரு உயர்நிலைப் பள்ளி, ஒரு மேல்நிலைப் பள்ளி, என 4 பள்ளிகளுக்கு 'புதுமைப்பள்ளி' என்ற விருதும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்படும்.

அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சிறந்த முறையில் கணினியைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் சிறந்த ஆசிரியர், கல்வி இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர், குழந்தைகள் சேர்க்கை மற்றும் பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர், என ஒரு மாவட்டத்துக்கு 6 ஆசிரியர் வீதம் தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் 'கனவு ஆசிரியர் விருது' மற்றும் தலா 10,000/- ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பிற்கேற்ப, அனைத்து வகையிலும் புதுமையான விதத்தில் சிறப்பாகச் செயல்பட்ட 16 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், 16 நடுநிலைப் பள்ளிகள், 12 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 12 மேல்நிலைப் பள்ளிகள், என மொத்தம் 56 பள்ளிகள் 'புதுமைப்பள்ளி' விருதுக்கு தெரிவு செய்யப்பட்டு, அப்பள்ளிகளுக்கு 'புதுமைப்பள்ளி' விருதுகள் மற்றும் பரிசுத் தொகையாக 80 லட்சம் ரூபாய் வழங்கிடும் அடையாளமாக முதல்வர் பழனிசாமி இன்று 5 பள்ளிகளுக்கு 'புதுமைப்பள்ளி' விருதுகளையும் பரிசுத் தொகைக்கான காசோலைகளையும் வழங்கினார்.

மேலும், சிறந்த முறையில் மாணவர்களைப் பயிற்றுவித்த அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில், 140 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டு, 2017-18 ஆம் ஆண்டுக்கான 'கனவு ஆசிரியர்' விருதுகள் வழங்கிடும் அடையாளமாக, முதல்வர் பழனிசாமி இன்று 5 ஆசிரியர்களுக்கு 'கனவு ஆசிரியர்' விருதுகள் மற்றும் ஊக்கத் தொகையாக தலா 10,000 ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கினார்.

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் மறைந்த கே.ஏ. கிருஷ்ணசாமி சேகரித்து வைத்திருந்த 1500 புத்தகங்களை, தமிழ்நாடு நூலகத் துறைக்கு அன்பளிப்பாக வழங்குவதன் அடையாளமாக, கே.ஏ. கிருஷ்ணசாமியின் குடும்பத்தினர் 5 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பினை முதல்வர் பழனிசாமியிடம் வழங்கினர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x